×

செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி நியாயமாக சங்கர் வழக்கை விசாரிக்காமல் விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும்

* 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் பட்டியலிட வேண்டும், மூன்றாவது நீதிபதி உத்தரவு

சென்னை: சங்கர் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல், விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வரும் 12ம் தேதி மீண்டும் பட்டியலிட வேண்டும் என மூன்றாவது நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பெண் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ம் தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி தனது உத்தரவில், அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மட்டுமே மூன்றாவது நீதிபதி ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக விசாரணை செய்ய தேவையில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், என்ன காரணத்திற்காக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா என நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அதனால் அரசு பிற்பகல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு பதிலளிக்காமல், விசாரணை அடிப்படையில் அமர்வு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு பதிலளித்தால் மட்டுமே மேற்கொண்டு வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும். மூன்றாவது நீதிபதியாக முடிவு எடுக்க தனக்கு போதிய ஆவணங்கள் வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஒரு நீதிபதி வழக்கின் தகுதி அடிப்படையில் தீர்ப்பளித்திருக்கிறார்.

மற்றொருவர் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த பின்னர் தான் வழக்கில் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தற்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதால், ஏற்கனவே இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை முழுமையானதாக கருத முடியாது.  சென்னை உயர் நீதிமன்ற விதிகளின்படி, ஆட்கொணர்வு மனுக்களை இரு நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால் அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆட்கொணர்வு வழக்கு தொடர்பாக செல்வாக்கு மிக்க இரண்டு பேர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி சுவாமிநாதன், நியாயமாக இந்த வழக்கை விசாரிக்காமல் விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆட்கொணர்வு மனுக்கள் 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வரும் 12ம் தேதி மீண்டும் பட்டியலிட வேண்டும் என பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தாக்கல் செய்த இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

The post செல்வாக்கு மிக்க இருவர் தன்னை அணுகியதாக கூறிய நீதிபதி நியாயமாக சங்கர் வழக்கை விசாரிக்காமல் விசாரணையிலிருந்து விலகியிருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Shankar ,Chennai ,Swaminathan ,
× RELATED சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி...