×

மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ய தடை: அசாம் அரசு அதிரடி அறிவிப்பு

கவுகாத்தி: மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதித்து அசாம் அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநில அரசின் சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகளில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், ‘அசாம் அரசுப் பணியாளர்கள், தங்களது மனைவி உயிருடன் இருக்கும் போது வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது. விதிகளை மீறி இருதார திருமணம் செய்தால் சம்பந்தப்பட்ட அரசுப் பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊழியரின் மனைவி உயிருடன் இருக்கும்பட்சத்தில், வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டுமானால் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதேபோல், பெண் அரசு ஊழியரும், தன் கணவர் உயிருடன் இருக்கும் போது மற்றொருவரை அரசின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளக் கூடாது. மேற்கண்ட விதிகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக தொடங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அசாம் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் வர்மா கடந்த 20ம் தேதி வெளியிட்ட நிலையில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

The post மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ய தடை: அசாம் அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Assam ,Gawati ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து