×

மனம் என்று சொல்கிறோமே, அது நம் உடம்பில் எங்கேதான் இருக்கிறது?

நாளும் கோளும் நலிந்தோர்க்கில்லை என்கிறார்களே, அப்படியென்றால், ஏழைகள் நாள், கோள் எதுவும் பார்க்க வேண்டாமா?
– இரா. கல்யாண ராகவேந்திரன், பாண்டிச்சேரி.

நலிந்தவர்கள் என்றால், ஏழைகள் என்று ஏன் அர்த்தம் எடுத்துக்கொள்கிறீர்கள்? உடல் நலிந்தோர் என்று பொருள்கொண்டு பாருங்கள், அந்த சொற்றொடர் உங்களுக்குப் புரியும். உடல்நலம் பாதிப்புற்றவர்கள், தாம் ஆரோக்கியமாக இருந்தபோது மேற்கொண்ட ஆன்மிகப் பணிகளை இந்தக் கட்டத்திலும் மேற்கொள்ள இயலாது என்பதால், அவர்கள் தங்கள் உடல் பூரணமாக நலம் பெற்றபிறகு அந்தப் பணிகளில் ஈடுபடலாம்; அதனால் உடல் நலிவுற்ற நாட்களில் அவர்கள் நாளையும் கோளையும் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள்.

உடல் நலிவு மட்டுமின்றி, வயோதிகம் காரணமாக உடல் நலிந்தவர்களுக்கும் இறைவன் தானே வந்து தரிசனம் தருகிறான். ஆமாம், கோயில் உற்சவங்கள் எல்லாம் இவர்களுக்கென்றே ஏற்பட்டதுதான். உற்சவக் காலங்களில் சுவாமி ஊர்வலம் வரும் தெருக்களில் இருக்கக்கூடிய இத்தகைய ‘நலிந்தவர்கள்’ தம்மால் கோயிலுக்குப் போக இயலாவிட்டாலும் இறைவன் தம்மை நோக்கி வரும் பாக்கியம் பெறுகிறார்கள்.

இது தவிர, தினசரி வாழ்வுக்கே திண்டாடும் ஏழையான நலிந்தவர்களும் நாள், கோள் பார்த்துக்கொண்டா ஆன்மிகக் கடமையை நிறைவேற்றமுடியும்? இவர்கள் வெறுமே இறைநாமத்தை உச்சரித்தாலே போதுமே!

நான் எந்தக் கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாதவன். இன்னும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. அப்படியிருந்தும் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே, அது ஏன்?
– வேதலட்சுமி நாராயணன், வடலூர்.

முன்னேற்றம் என்பதற்கு நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் அளவுகோல் எது? எந்தக் கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகாமல் இருப்பதைப் பெருமையாக கருதினீர்களென்றால் அதுதான் முன்னேற்றம். அவ்வாறு அடிமையாகாமலிருந்தால், அதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை வறியவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறீர்களா, அதுதான் முன்னேற்றம். இந்த முன்னேற்றங்களைத் திருமணத்திற்குப் பின்னரும் உங்களால் காணமுடியும்.

பிறர் சிரிப்பில் மனநிறைவைக் காணும் முன்னேற்றத்திற்கு திருமணம் தடையாகவே இருக்கமுடியாது. ஆகவே, திருமணம் செய்வது என்பது முன்னேற முடியாததற்கு ஒரு காரணமாகவே சொல்ல வேண்டாம். திருமணத்துக்குப் பிறகு உங்களுடைய உயரிய நோக்கம் நிறைவேற முதலில் உங்கள் மனைவியையும், பிறகு உங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்தினீர்களானால், அது அவர்களையும் முன்னேற்றும்.

மனம் என்று சொல்கிறோமே, அது நம் உடம்பில் எங்கேதான் இருக்கிறது?
ரா.கோவர்த்தனன், திருவிடைமருதூர்.

எல்லோருக்கும் தெரியும், ஆனால், அடையாளம் காட்ட முடியாது. அதுதான் மனம். அழகிய காட்சி ஒன்றைக் காண்கிறோம், ரசிக்கிறோம். அந்த ரசிப்பில் மனம் இருக்கிறது. நல்ல விஷயத்தைக் கேட்கிறோம், சந்தோஷப்படுகிறோம். அந்த சந்தோஷத்தில் மனம் இருக்கிறது. நல்வாசனையை முகர்கிறோம், மகிழ்ச்சி கொள்கிறோம். அந்த மகிழ்ச்சியில் மனம் இருக்கிறது. சுவையான உணவை உட்கொள்கிறோம், ருசிக்கிறோம். இந்த ருசியில் மனம் இருக்கிறது.

நீரில் குளிக்கிறோம், நம் உடல் குளிர்ச்சியை அனுபவிக்கிறது. இந்தக் குளிர்ச்சியில் மனம் இருக்கிறது. அதாவது, நம் ஐம்புலன்களிலும் நாமே அறியாமல் நம் மனம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், தீயதைப்பார்க்கவும், தீயதைக் கேட்கவும், தீயதை நுகரவும், தீயதை சுவைக்கவும், தீயதைத் தழுவவும் அந்த மனம் பேராவல் கொண்டுவிடுவதுதான். நமக்குள்ளேயே இருக்கும், நாமே புரிந்துகொள்ள முடியாத ஒரு அம்சம், மனம். ஆனால், நம்முடைய எல்லாவித நடவடிக்கைக்கும் அடிப் படைக் காரணமே அந்த மனம்தான் என்பதுதான் விசித்திரம்!

தொகுப்பு: அருள்ஜோதி

The post மனம் என்று சொல்கிறோமே, அது நம் உடம்பில் எங்கேதான் இருக்கிறது? appeared first on Dinakaran.

Tags : Ira ,Kalyana Raghavendra ,
× RELATED முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் எழுத்தாளர் வேங்கடாசலபதி!!