சென்னை: உலக கோப்பை தொடரில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரின் முதல் 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற பாக், அடுத்த 3 ஆட்டங்களிலும் தோல்வியை தான் சந்தித்தது. அதிலும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அதுவும் தோல்வியை சந்திக்காத சென்னையில் தோற்றது, பாக் வீரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்தான் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தெ.ஆப்ரிக்கா அணியை இன்று எதிர்கொள்கிறது. அதற்காக கடந்த 3 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் தெ.ஆப்ரிக்கா, ஆட்டத்துக்கு ஆட்டம் சதம் விளாசும் வீரர்களுடன் வலுவான நிலையில் இருக்கிறது.
கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக ஓய்வில் இருந்தாலும், அந்த அணியை மார்க்ரம் வெற்றிப் பாதையில் மீண்டும் அழைத்துச் சென்றுள்ளார். கூடவே பின்வரிசை அணியான நெதர்லாந்திடம் பெற்ற அதிர்ச்சி தோல்வியில் இருந்து அந்த அணி மீண்டு விட்டது. டி காக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கூடுதல் பலம். அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் அதனை உறுதிச் செய்ய தெ.ஆப்ரிக்காவுக்கு இன்னும் சில வெற்றிகள் தேவை. அதே நேரத்தில் பாக், அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். இன்று தோற்றால் போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு அதிகமாகி விடும்.
The post அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா பாகிஸ்தான்: இன்று தெ.ஆப்ரிக்காவுடன் மோதல் appeared first on Dinakaran.
