×

ஒரே கூப்பன்… ஓஹோனு வாழ்க்கை… ஆம்பூர் இன்ஜினியருக்கு ‘ஜாக்பாட்’ 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.6 லட்சம்: துபாயில் கதவை தட்டிய அதிர்ஷ்டம்

ஆம்பூர்: ஆம்பூரை சேர்ந்த இன்ஜினீயர் துபாய் மாலில் பொருட்கள் வாங்கியபோது கொடுத்த குலுக்கல் கூப்பனில் பரிசு விழுந்தது. இதன் மூலம், அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.60 லட்சம் கிடைக்க உள்ளது. வாழ்க்கையில அதிர்ஷ்டம் ஒரு முறை தான் உங்க கதவ தட்டும் என்று கூறுவார்கள். இது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காந்தி ரோட்டை சேர்ந்தமகேஷ்குமார் (50). என்பவரது வீட்டை தட்டி உள்ளது. எலக்ட்ரிக் அன்ட் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரான இவர், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக அடிக்கடி துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார். இந்நிலையில், துபாய் நாட்டில் வனம் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்கும் பொருட்டு பாஸ்ட் 5 என்ற அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிதி வழங்குபவர்களுக்கு கூப்பன் விநியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து குறிப்பிட்ட நாட்களில் குலுக்கலில் தேர்வாகும் நபர்களுக்கு குறிப்பிட்ட மால்களில் பொருட்கள் வாங்கும்போது தள்ளுபடி மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். இதேபோல் கடந்த மாதம் ஆம்பூரை சேர்ந்த மகேஷ்குமார் துபாயில் உள்ள ஒரு மாலில் பொருட்கள் வாங்கும்போது, வன விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நிதி வழங்கி உள்ளார். அப்போது அவருக்கு கூப்பன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி துபாய் நாட்டை சேர்ந்த பாஸ்ட் 5 அமைப்பில் இருந்து போனில் மகேஷ்குமாரை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, அவர் வாங்கிய கூப்பனுக்கு குலுக்கலில் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தனர். அதன்படி பரிசை வென்ற மகேஷ்குமாருக்கு 25 ஆயிரம் திர்ஹம் மதிப்பிலான, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 5.60 லட்சம் மாதம்தோறும் வழங்கப்படும். இந்த பரிசு தொகை இவ்வாறாக 25 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றனர். இதுகுறித்து மகேஷ்குமார் கூறுகையில், ‘தற்போது துபாயில் உள்ள எனக்கு, இங்கு அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. படிக்கும் காலத்தில் நான் மிகப்பெரும் சவால்களை சந்தித்து படிப்பை முடித்தேன். ஆம்பூரில் உள்ள பலர் எனது படிப்பை முடிக்க உறுதுணையாக இருந்தனர். தற்போது இந்த சமூகத்திற்கு இந்த பரிசு தொகை மூலம் உதவும் நேரம் வந்துள்ளது. கல்வி உதவி தேவைப்படுவோருக்கு உதவ இந்த பணத்தை பயன்படுத்துவேன்’ என்றார். மகேஷ்குமாருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பெங்களூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒரே கூப்பன்… ஓஹோனு வாழ்க்கை… ஆம்பூர் இன்ஜினியருக்கு ‘ஜாக்பாட்’ 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5.6 லட்சம்: துபாயில் கதவை தட்டிய அதிர்ஷ்டம் appeared first on Dinakaran.

Tags : Ohonu Life… ,Ambur ,Fortune ,Dubai ,Dubai Mall ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...