×

சென்னை அருகே பனையூரில் போலீசாரின் அனுமதி பெறாமல் பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு திடீரென கொடி கம்பம் நட்டதால் பரபரப்பு


* அகற்ற முயன்ற போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு
* கிரேனை அடித்து நொறுக்கி போராட்டம் செய்த பாஜவினர் கைது

துரைப்பாக்கம்: சென்னை அருகே பனையூரில் அனுமதி பெறாமல் பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு திடீரென நடப்பட்ட கொடி கம்பத்தை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜவினரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீஷோர் டவுன், 6வது அவென்யூவில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு நேற்றிரவு பாஜவினர், அக்கட்சி கொடி கம்பத்தை நட்டனர். இதற்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொடி கம்பம் அமைத்ததற்கு, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதனால், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

அப்போது, காவல் துறையினரின் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தை நட்டு இருக்கிறீர்கள். அதனால் அதை அகற்றுங்கள்’ என்று போலீசார் கூறினர். அதற்கு பாஜவினர், ‘நாங்கள், அண்ணாமலை வீட்டின் அருகேதான் வைத்திருக்கிறோம். மற்ற கட்சிகளின் கொடி கம்பங்கள் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றுங்கள், நாங்கள் பாஜ கொடி கம்பத்தை அகற்றுகிறோம்’ என்றனர். அதற்கு போலீசார், ‘மற்ற கொடி கம்பங்களுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் (பாஜ) வைத்துள்ள கொடி கம்பத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால்தான் அகற்ற சொல்கிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் பாஜவினருக்கும், காவல் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்தார். தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் அதிகரித்தது.

அந்த நேரத்தில், கொடி கம்பத்தை அகற்ற கிரேன் வாகனம் வந்தது. அதை பார்த்ததும் அந்த வாகனத்தின் கண்ணாடிகளை பாஜவினர் அடித்து உடைத்தனர். மேலும், கிரேன் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர். காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். தகவலறிந்து பாஜ மாவட்ட துணை செயலாளர் சாய் சத்யன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில மீனவரணி தலைவர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் கொடி கம்பத்தை அகற்ற போலீசார் முயன்றனர். உடனே திரண்டிருந்த பாஜவினர், கொடி கம்பத்தை இறுக்கமாக பிடித்து கொண்டனர். இதனால் போலீசாருக்கும், பாஜவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார், அந்த கொடி கம்பத்தை அகற்றினர்.

இந்த சம்பவத்தில் பாஸ்கர் (44) என்பவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. உடனே அவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். யாரும் செல்லாததால் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர். அப்போது, நீலாங்கரை மண்டல பாஜ தலைவர் மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் கிரேன் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணியை சேர்ந்த கன்னியப்பன் (37), பாலகுமார் (35) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழல் நிலவுவதால் அண்ணாமலை வீட்டின் அருகில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னை அருகே பனையூரில் போலீசாரின் அனுமதி பெறாமல் பாஜ தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு திடீரென கொடி கம்பம் நட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Banaiur ,Chennai ,Bhajavin ,Baja ,Panaiur ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...