×

34 விமானங்களில் வெடிகுண்டு அலற விட்ட சென்னை பெண்: திருச்சி ஏர்போர்ட்டில் தீவிர சோதனை

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தினமும் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாடு மற்றும் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி விமான நிலைய மேலாளர் வாட்ஸ் அப் எண்ணுக்கு, ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ‘34 விமானங்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் திருச்சிக்கு வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து விமான நிலைய மேலாளர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்ததுடன், விமான தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் அனுப்பினார். இதையடுத்து திருச்சிக்கு அதிகாலை வரும் அனைத்து விமானங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு, விமானங்கள் நடுவானில் பறந்தபோதே சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையத்திற்குள் 30க்கும் மேற்பட்ட தொழில்பாதுகாப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் மூலைமுடுக்கெல்லாம் சோதனையிட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு கடும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறுந்தகவல் வந்த இடம் சென்னை என்பதை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து சென்னையில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சென்னை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தது சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சங்கீதா வேலப்பன் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த மிரட்டல் குறுந்தகவலால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. அதிகாலை புறப்படும் விமானங்களுக்காக காத்திருந்த பயணிகளையும் பலத்த சோதனைக்கு பின்னரே விமான நிலையத்துக்குள்ளே பாதுகாப்பு படையினர் அனுமதித்தனர்.

The post 34 விமானங்களில் வெடிகுண்டு அலற விட்ட சென்னை பெண்: திருச்சி ஏர்போர்ட்டில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Trichy Airport ,Trichy ,Trichy International Airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்