×

4 முனை போட்டியால் அதகளமாகும் தெலங்கானா ஹாட்ரிக் சாதனை படைப்பாரா கேசிஆர்? பெரும் பலத்துடன் போட்டி அளிக்கும் காங்கிரஸ்

ஒன்றுபட்ட, பரந்து விரிந்த ஆந்திராவில் இருந்து 2014 ஜூன் 2ம் தேதி பிரிக்கப்பட்ட மாநிலம் தான் தெலங்கானா. ஐதராபாத்தை தலைநகராக கொண்டுள்ள தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் கடந்த 9 ஆண்டுகளாக ஒரே முதல்வர் தான். அவர் தான் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவர் கேசிஆர் என்று அழைக்கப்படும் கே.சந்திரசேகர ராவ். தற்போது 3வது முறையாக சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். ஹாட்ரிக் சான்ஸ். இந்த முறை வாய்ப்பு அவ்வளவு எளிதல்ல. கடும் போட்டியை அளிக்க காங்கிரஸ், பா.ஜனதா காத்து இருக்கிறது.

கூடுதலாக ஒன்றுபட்ட ஆந்திரா மக்களால் ஒய்எஸ்ஆர் என்று இன்றும் அன்புடன் அழைக்கப்படும் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்எஸ் சர்மிளாவும் தனிக்கட்சி தொடங்கி தெலங்கானா தேர்தல் களத்தில் குதித்து இருக்கிறார். முதல்வர் கேசிஆர் எதிரான வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் தலைமையில் இணைய ஒய்எஸ் சர்மிளா காத்திருந்தார். இதற்காக டெல்லி சென்று சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார். ஆனால் பயன் இல்லை. சர்மிளா ஆந்திராக்காரர்.

அவரால் தெலங்கானாவில் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை என்பது காங்கிரசின் கணிப்பு. இதனால் பதில் எதுவும் காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்படவில்லை. வெறுத்துப்போன சர்மிளா தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார். ஓட்டுகள் பிரிவதால் கேசிஆர் ஹாட்ரிக் உற்சாகத்தில் உள்ளார். ஆனால் தெலங்கானா இந்த முறை காங்கிரசுக்குத்தான் என்பதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ளார். தேர்தல் முடிவுகளை பாருங்கள், அப்போது உங்களுக்கு புரியும் என்று சொல்லி சிரிக்கிறார்.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகனும், அமைச்சருமான ராமராவ் இதனால் சற்று கலக்கத்தில் உள்ளார். கர்நாடகாவில் பிடிபட்ட ரூ.90 கோடி தான் இதற்குக்காரணம். தெலங்கானா முழுவதும் பணத்தை கொண்டு வந்து காங்கிரசார் இறக்கிவிட்டார்கள் என்று அவர் கதறுகிறார். பணமா அல்லது பலமா தெரியவில்லை. காங்கிரஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தெலங்கானாவில் மிக உற்சாகமாக பணியாற்றி வருகிறது. ஆட்சி எங்களுக்குத்தான் என்று காங்கிரசார் மார் தட்டுகிறார்கள். ஆனால் முன்கூட்டியே 119 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டது பிஆர்எஸ் கட்சி. இந்த முறை கேசிஆர் மீண்டும் கோட்டையை பிடிப்பாரா இல்லை கோட்டை விடுவாரா என்பது நவ.30ம் தேதி நடக்கும் ஓட்டுப்பதிவில் தெரிந்துவிடும்.

தேர்தல் அறிவிப்பு
மனுத்தாக்கல் நவ.3
மனு கடைசிநாள் நவ.10
மனு பரிசீலனை நவ.13
வாபஸ் பெற நவ.15
ஓட்டுப்பதிவு நவ.30
ரிசல்ட் டிச.3

தெலங்கானா
ஒரு கழுகுப்பார்வை
மாவட்டங்கள் 33
எம்பி தொகுதி 17
மாநிலங்களவை எம்பி 7
பேரவை பதவிக்காலம் 16.1.2024
மொத்த தொகுதிகள் 119
பொதுத்தொகுதிகள் 88
எஸ்சி தொகுதிகள் 19
எஸ்டி தொகுதிகள் 12
மொத்த வாக்காளர்கள் 3.17
ஆண் வாக்காளர்கள் 1.58 கோடி
பெண் வாக்காளர்கள் 1.58 கோடி
முதல் வாக்காளர்கள் 8.11லட்சம்
மாற்றுத்திறனாளிகள் 5.06 லட்சம்
80+ வாக்காளர்கள் 4.44 லட்சம்
100+ வாக்காளர்கள் 7,005
பழங்குடியினர் 39,186
மொத்த வாக்குச்சாவடிகள் 35,356

பொருள் தெலங்கானா இந்தியா
பரப்பளவு 1,12,077 சதுர கிமீ 32.87 லட்சம் ச.கிமீ
மக்கள் தொகை 3,50,03,674 142 கோடி
பெண்/ஆண் விகிதம் 988/1000 943/1000
மொத்த உற்பத்தி ரூ.13.27 லட்சம் கோடி ரூ.2,73,07,750 கோடி
தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.3.17 லட்சம் ரூ.1,70,620
வேலைவாய்ப்பின்மை 4.1% 9.8%
ஓராண்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.51,830 கோடி ரூ.13,24,985 கோடி

* கோதாவரி, கிருஷ்ணா நதியால் வளம் கொழிக்கும் பூமி
கோதாவரி, கிருஷ்ணா என இரண்டு மிகப்பெரிய நதிகளால் வளம் கொழிக்கிறது தெலங்கானா. நதிகள் பாயும் பகுதி தவிர மற்ற இடங்கள் வறண்டவை. பீமா, மனேர், மஞ்சிரா, மூசி, துங்கபத்திரா போன்ற சிறிய ஆறுகளும் ஆங்காங்கே விவசாயத்திற்கு வகை செய்கின்றன. நெல் பயிர்தான் மிக முக்கியமானது என்றாலும் பருத்தி, மாம்பழம், ஆரஞ்சு, தென்னை, கரும்பு ஆகியவையும் பயிரிடப்படுகின்றன.

* காங்கிரசில் இணைந்த 2 ஆளும்கட்சி எம்எல்ஏக்கள்
பிஆர்எஸ் கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள் ஹனுமந்தராவ், ரேகா நாயக் ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து சீட் பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post 4 முனை போட்டியால் அதகளமாகும் தெலங்கானா ஹாட்ரிக் சாதனை படைப்பாரா கேசிஆர்? பெரும் பலத்துடன் போட்டி அளிக்கும் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Telangana ,KCR ,Congress ,Andhra Pradesh ,Hyderabad ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...