![]()
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இந்த விவசாயத்தில் கன்னிப்பூ முக்கிய இடத்தை பிடிக்கிறது. கன்னிப்பூ சாகுபடி செய்யும்போது நெல்பயிரில் அதிக மகசூல் கிடைத்து வருகிறது. இதனால் அதிகமான பரப்பளவில் கன்னிப்பூ சாகுபடி நடந்து வருகிறது. கும்பபூ சாகுபடியின் போது பரப்பளவு குறைவாக வருடம் தோறும் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல்களை பயிரிட்டு வருகின்றனர். கும்பபூ சாகுபடியின் போது பொன்மணி, திருப்பதிசாரம் 3 ரக நெல்களை அதிக விவசாயிகள் பயிரிடுகின்றனர். இதை தவிர பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இந்த வருடம் கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியது. ஆனால் குளத்து பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் பறக்கை, தேரூர், வேம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே கன்னிப்பூ சாகுபடி நடந்தது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அறுவடையும் ெசய்து முடித்தனர். மாவட்டத்தில் பிற பகுதிகளில் தண்ணீர் பிரசனை, தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் கன்னிப்பூ சாகுபடி பணி தாமதம் ஆனது. ஆனால் சில விவசாயிகள் சாகுபடி பணியை புறக்கணித்தனர். இதனால் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே கன்னிப்பூ சாகுபடி பணி முடிந்து இருந்தது. விவசாயிகள் பல போராட்டத்திற்கு மத்தியில் சாகுபடி செய்த நெற்பயிரை அறுவடை செய்ய ஆயத்தம் ஆன நிலையில் தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்ய தொடங்கியது.
பலத்த மழை பெய்ததால், தயாரான நெற்பயிர்களை அறுவடைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் வைக்கோல் கிடைக்காவிட்டாலும் நெல்லை அறுவடை செய்துவிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இதனால் நெல்லை அறுவடை செய்துவிட்டு வைக்கோலை வயலிலேயே விட்டனர். இதனால் வைக்கோல் மூலம் கிடைக்கும் பணம் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வில்லுக்குறி அருகே உள்ள ஆணைகிடங்கு பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் நெற்பயிர்களை அப்படியே வயல்களிலே விட்டுள்ளனர்.
இதனால் கன்னிப்பூ சாகுபடி செய்த அப்பகுதி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து முன்னோடி விவசாயி செண்பசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியின்போது பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இருந்தும் சரியாக தண்ணீர் விடாததால், கன்னிப்பூ சாகுபடி தாமதமாக தொடங்கியது. சரியான நேரத்தில் பறக்கை, தேரூர் பகுதியில் சாகுபடி நடந்தது. அங்கு அறுவடையின்போது ஒரு கோட்டை (87 கிலோ) நெல் ரூ.2 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்தனர். இதேபோல் ஒரு ஏக்கர் பரப்பளவு ெகாண்ட வயலில் இருந்து கிடைத்த வைக்கோல் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு கன்னிப்பூ அறுவடையின் மூலம் லாபம் கிடைத்தது. தற்போது குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை பெரும்பகுதி முடிந்துள்ளது. ஆனால் மழை பெய்ததால், வைக்கோலை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயலிலேயே உரமாக வைக்கோலை ேபாட்டு உள்ளனர். மேலும் மழை பெய்து வருவதால் இதனை பயன்படுத்தி கும்பபூ சாகுபடி பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் வில்லுக்குறி ஆணைகிடங்கு பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் மழைதண்ணீரில் மூழ்கியது. அதைத்தொடர்ந்து தண்ணீர் வெளியே செல்லாததால் தண்ணீரில் மூழ்கிய நெற்கள் முளைக்க தொடங்கி உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த பணம் கூட கிடைக்காமல் பரிதாப நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். என்றார்.
எடுத்து செல்ல கோரிய விவசாயி
குமரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் தொழிலாளர்கள் நெல் அறுவடை செய்வார்கள். அறுவடை முடிந்த நெற்கதிர்களை எடுக்கும்போது அவர்கள் தவறவிடும் நெற்கதிர்களை எடுப்பதற்கு என்று ஏழை பெண்கள் தொழிலாளர்களின் பின்னால் வருவார்கள். அந்த ஏழை பெண்களுக்கும் நெற்கதிர்கள் கிடைக்கும். அந்த காலம் மாறி தற்போது இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்வதால் நெற்கதிர்கள் எடுக்க ஏழை பெண்கள் வருவது இல்லை. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பலத்த மழையால் பல வயல்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியின் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நெற்பயிரை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விவசாயி எனது வயலில் உள்ள நெற்பயிரை தேவையுள்ள நபர்கள் எடுத்துச்செல்லலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் யாரும் அந்த வயலில் இறங்கி நெற்களை எடுக்க முன்வரவில்லை.
The post குமரியில் பலத்த மழையால் கன்னிப்பூ நெற்பயிர்கள் முளைப்பு: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.
