×

பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஆலந்தூர், அக்.19: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள இடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டனர். பழவந்தாங்கல் பி.வி.நகர் பகுதியில் உள்ள திரிசூலம் கல்குவாரியில் தேங்கும் நீரை சுத்திரித்து வழங்குவதற்காக இடத்தையும், நங்கநல்லூர் எஸ்ஐபி காலனியில் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பது குறித்தும் மெட்ரோ ரயில் பணிக்காக இடிக்கப்பட்ட ஆலந்தூர் மண்டல அலுவலத்திற்காக புதிய கட்டிடம் கட்டும் இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன், பிருந்தா முரளிகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: பருவமழை பெய்தால் அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்கள், சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல, சேதமடையும் மரங்களையும், கிளைகளையும் அறுத்து அகற்றுவதற்கான இயந்திரங்களும், தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக 700க்கும் மேற்பட்ட மோட்டார் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. தற்போது மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் முடிவுற்றுள்ளது. கால்வாய் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. மழைக்கு முன்னதாக இப்பணிகள் முடிக்கப்படும். கொசஸ்தலையாறு வடிநில பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 2024ம் ஆண்டு இறுதியில் முடிவுறும். இன்று (நேற்று) மாடு தாக்கி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் நலமுடன் உள்ளார். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் இதுவரை 3,737 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாடுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

வேடிக்கை புகார்
நங்கநல்லூர் மக்கள் காலையில் பசு மாடுகளுக்கு அகத்தி கீரை, உணவு போன்ற வற்றை வழங்கி கும்பிட்டு ,மாலை சாலையில் மாடுகள் திரிவதாக புகார் அனுப்புவது வேடிக்கையாக உள்ளது. இது நியாயமா என கிண்டலடித்து பேசினார்.

The post பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Minister ,K. N. ,Nehru ,Alandur ,Chennai ,Municipality ,K. N. Neru ,
× RELATED பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர்...