×

ஐப்பசி மாத பூஜை தொடங்கிய நிலையில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது: சிறுவர், சிறுமிகள் உள்பட 20 பேர் காயம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இதையொட்டி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆந்திர பக்தர்களுடன் சென்ற ஒரு பஸ் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 6.15 மணியளவில் சபரிமலை அருகே எருமேலி மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் சிறுவர், சிறுமிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பஸ்சுக்குள் சிக்கி தவித்தனர். தகவலறிந்து அப்பகுதியினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்தனர். பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து எருமேலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஐப்பசி மாத பூஜை தொடங்கிய நிலையில் சபரிமலை பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது: சிறுவர், சிறுமிகள் உள்பட 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Aipasi month puja ,Thiruvananthapuram ,Ayyappan temple ,Aipasi month ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!