×

ஐப்பசியில் அடை மழை! அருள் மழை பொழியுமா கோள்கள்?

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஐப்பசி 06 (23-10-2023) சனி வக்கிர நிவர்த்தி
ஐப்பசி 15 (01-11-2023) புதன், விருச்சிகத்திற்கு மாறுதல்
ஐப்பசி 16 (02-11-2023) சுக்கிரன், கன்னி ராசிக்கு மாறுதல்

ஆத்ம காரகர், பித்ரு காரகர் மற்றும் நவக்கிரக நாயகர் என்றெல்லாம் பூஜிக்கப்படும் சூரிய பகவான், அவரது நீச்ச ராசியான துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலக் கட்டம்தான் “ஐப்பசி மாதம்” எனவும், “துலாம் மாதம்” எனவும் போற்றப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரி நதியில் இம்மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி, பகவானைப் பூஜிப்பது, நாம் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள அனைத்து பாபங்களும் நீங்கிவிடும் என மகரிஷிகளும், மகான்களும், பெரியோர்களும் உபதேசித்தருளியுள்ளனர்.

இவ்விதம் இம்மாதம் பொன்னி என பூஜிக்கப்படும் புனித காவிரியில் பக்தியுடன் ஸ்நானம் செய்வது “துலாக் காவிரி ஸ்நானம்” எனவும், பரம பவித்ரமான பாகீரதி, கங்கையில் ஸ்நானம் செய்வதற்கு இணையாகும் எனவும் “காவிரி மகாத்மியம்” கூறுகிறது. ஆழ்வார்கள் அதற்கும் மேலேயே, “கங்கையில் புனிதமாய காவிரி…” என இப் புண்ணிய காவிரியைப் புகழ்ந்து, போற்றி, பணிந்துள்ளனர்.

காவிரிக்கும், “வடதிருக் காவிரி” எனப் போற்றப்படும், காவிரியின் உப-நதியுமான கொள்ளிடத்திற்கும் இடையில் உள்ளதுதான், அழகிய மணவாளனான ரங்கநாதன் எனும் அரங்கத்து இன்னமுதன், சயன திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் (தரிசனம் அளிக்கும்) திருவரங்கத் திருத்தலமாகும். “கழுதைக்கும் முக்தியளித்த” கஸ்தூரி ரங்கன் அறிதுயில் கொண்டுள்ள திருவரங்கத்தில் மரணமடைபவர்கள், பெறற்கரிய முக்தி பேற்றை அடைவார்கள் என்று “திருவரங்கத் தலப் புராணம்” கூறுவதால், தங்கள் இறுதி நாட்களைக் கழிப்பதற்கு திருவரங்கத் திருத்தலத்தை நாடிவரும் பெரியோர்கள் ஏராளம், ஏராளம்!!

தியாகராஜ ஸ்வாமிகள், புரந்தர தாஸர், முத்து ஸ்வாமி தீட்க்ஷிதர், சியாமா சாஸ்திரிகள், சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மகான்கள் காவிரியில் நீராடி, அரங்கனைப் பாடித் துதித்துள்ளனர்.
இத்தகைய பெருமைகள் பெற்றுத் திகழும் ஐப்பசியில்தான் பாரதத்தின் தேசிய விழாவான தீபாவளி, “கல்வி” எனும் அழியாச் செல்வத்தைத் தந்தருளும் சரஸ்வதி பூஜை, வீரத்தையும், தேச பக்தியையும் ஊட்டும் விஜயதசமி, ஆயுர் வேத மருத்துவத்தை நமக்குத் தந்தருளிய தன்வந்த்ரி பகவான் அவதாரத் தினம். தர்ம தேவதையான எம தர்மராஜருக்கு தீபம் ஏற்றி வைத்து, பூஜிக்கும் பரம பவித்ரமான புண்ணிய “யம தீப தினம்” ஆகியவை இந்த ஐப்பசியில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றன. “துவைதம்” எனப் போற்றப்படும் மத்வ சித்தாந்தத்தை உலகிற்கு உபதேசித்தருளிய அவதார புருஷரான மத்வாச்சாரியார் அவதரித்ததும் இந்த ஐப்பசி மாதத்தில்தான்!

ஆடியிலே காற்றடித்தால், ஆயிரமாயிரமாய் இலையுதிரும்!
ஐப்பசியில் மழை பொழிந்தால், அத்தனையும் தழைத்து வளரும்!!

நாம் உயிர் வாழ்வதற்கு மிக, மிக அவசியமான, ஆதாரமாக விளங்குவது தண்ணீர்! கடல் நீரை, சூரிய பகவானால் ஆவியாக்கப்பட்டு, மேகங்களாக உருமாறி நமக்கு மழையாகப் பொழிகிறது. அத்தகைய ஜீவாதாரமான மழையை நமக்குத் தவறாமல் தருவது இந்த ஐப்பசியில் பெய்யும் மழைதான்!! ஆதலால்தான், “ஐப்பசியில் அடை மழை…!” -என்ற மூதுரையும் வழக்கத்தில் இருந்துவருகிறது.

இத்தகைய தெய்வீகப் பெருமை பெற்ற ஐப்பசி மாதத்தில் வரவிருக்கும் விசேஷ புண்ணிய தினங்களைப் பார்ப்போம்.

ஐப்பசி 1 (18-10-2023) : துலா காவேரி ஸ்நானம் ஆரம்பம்.

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு
பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள்
மால் இறைவன் ஈசன் கிடந்ததோர்
கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து
வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!

-தொண்டரடிப் பொடி ஆழ்வார்

புண்ணிய காவிரிக் கரையில் உள்ள ஊர்களில் வசிக்கும் பேறுபெற்றவர்கள், அதிகாலையிலேயே துயிலெழுந்து, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, காவிரி நதிக்குச் சென்று, நதியையும், மறைந்த முன்னோர்களையும், மற்ற புனித நதிகளையும் மனத்தால் வணங்கி, பக்தியுடன் ஸ்நானம் செய்ய வேண்டும். இவ்வாறு, மாதத்தின் 30 நாட்களும் செய்து வந்தால், மகத்தான புண்ணிய பலன் கிடைக்கும். குடும்பத்தில் எத்தகைய துன்பங்களானாலும், விலகிச் சென்றுவிடும்.

ஐப்பசி 5 (22-10-2023): பத்ரகாளி யிடம் பேரன்புற்று, பேச்செல்லாம் கவிமழையாய் பொழிந்திட்ட மகாகவி காளிதாஸனின் ஆராதனைத் தெய்வமும், திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமுமாகிய கூர்மவதாரத்திற்குரிய பராக்கிரமும், தீரமும் கொண்டதாகியதும், மகேஸ்வரனி்ன் திருவாக்கினாலேயே “ஈஸ்வரன்” என்ற திருநாமத்தை அடைந்தவருமாகிய சனிபகவானின் தோஷங்களனைத்தையும் போக் கடிக்கக் கூடியதாகவும் உள்ள, பத்ரகாளி அம்மனின் திரு அவதார தினம். இன்றைய தினத்தில், சண்டி ஹோமமும், தேவி பாகவதம் படித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், சொன்னாலும் மகத்தான புண்ணிய பலனைத் தரக்கூடிய தினம்.

ஐப்பசி 6 (23-10-2023): சரஸ்வதி பூஜை. அழியாச் செல்வமென அறிஞர்கள் போற்றும் “கல்வி” எனும் ஐஸ்வர்யத்தை அளிக்கும் அன்னை சரஸ்வதியையும், நல்ல புத்தகங்களையும் பூஜையறையில் வைத்து, தூப, தீப, நைவேத்தியம் காட்டி பூஜிக்க வேண்டும். அறிவு, ஒழுக்கம் போன்ற அனைத்து நற்பண்புகளும் நம்மை வந்தடையும், குடும்பத்தில் வறுமை நீங்கும்; பக்தியும், ஒற்றுமையும் நிலவும்.

ஐப்பசி 7 (24-10-2023) : விஜயதசமி. வீரர்கள் நாட்டையும், மக்களையும் போரிட்டு, வெற்றிபெற உதவும் ஆயுதங்களுக்கு பூஜை செய்து வணங்கும், தேச பக்தியை வளர்க்கும் புனித தினம். நம் பாரத பூமி மன்னர்களால் ஆளப்பட்டபோது, விசேஷமாகக் கொண்டாடப்பட்ட வீர தினமாகும். மேலும் இன்று மத்வ ஜெயந்தி. “துவைதம்” எனும் மத்வ சித்தாந்தத்தை அருளிய அவதார புருஷர், மத்வாச்சாரியார் அவதரித்த புண்ணிய தினம்.

ஐப்பசி 11 (28-10-2023): அன்னாபிஷேகம். பெருமானை அன்னாபிஷேகத்தில் தரிசனம் செய்தோமையானால், வீட்டிலும், நாட்டிலும், பசி, பஞ்சம் ஏற்படாது. கழனியில், நெற்களஞ்சியத்தில், தானியங்கள் குறைவில்லாது, நிறம்பிவழியும்.

ஐப்பசி 24 (10-11-2023) : கோவத்ச துவாதசி. இன்றைய தினத்தில் பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில், முப்பத்துமுக்கோடி தேவர்களும், சகலவிதமான தேவதைகளும் குடிகொண்டிருக்கும், கன்றுடன்கூடிய பசுவைப் பூஜித்து, மகாலட்சுமி வாசம் செய்யும் பசுவின் பின்புறத்தில் கற்பூர தீபாரதனை காட்டி, பசும்புல், வெல்லம், வாழைப்பழம் கொடுத்தால், கோதானம் செய்த புண்ணிய பலனையும், திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், மணமாகாத கன்னியருக்கு, மனத்திற்கேற்ற மணாளன் அமைந்து, சகல சௌபாக்கியங்களையும் அடைவது சத்தியமென வேதகால மகரிஷிகளால் அருளப்பட்டுள்ளது.

ஐப்பசி 24, 25 (10-11-2023, 11-11-2023) : யம தீபம். எமதர்ம ராஜரை பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம். வெள்ளி அகலில் பசு நெய் சேர்த்து, பஞ்சுத் திரியால் தீபம் ஏற்றி, ஒரு பெரியவருக்கு தீப தானம் கொடுத்து, வணங்குவது தர்மராஜரின் திருவருளைப் பெற்றுத் தரும்.

ஐப்பசி 25 (11-11-2023) : ஔஷதம், மூலிகைகள், மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றிற்கு அதிபதியான பகவான் ஸ்ரீமந்நாராயணன், தன்வந்த்ரி பகவானாக அவதரித்த புண்ணிய தினம். அவரைப் பூஜிப்பதால், நோய்கள் நீங்கி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தியடையும். இவரது சந்நதி ஸ்ரீரங்கம், ரங்கநாதர் திருக்கோயிலில், பரமபத வாசலுக்கு எதிரே உள்ளது அளவற்ற சக்திவாய்ந்த சந்நதியாகும். தீராது எனக் கைவிடப்பட்ட வியாதிகளைக்கூட குணப்படுத்தும் சக்திகொண்ட இவர் அரங்கனுக்கு வைத்தியர் ஆவார்! இவர் தரும் மருத்துவ சக்தி வாய்ந்த லேகியம் ரங்கநாதருக்கு தினமும் அமுது செய்விக்கப்படுகிறது.

ஐப்பசி 25 (11-11-2023) : பின்னிரவு நரக சதுர்த்தி ஸ்நானம். ஒவ்வொருவர் வீட்டின் தீர்த்தத்திலும் கங்கை ஆவிர்ப்பதாக ஐதீகம். இன்று இரவு விடியற்காலையில் பக்தியுடன் ஸ்நானம் செய்தால், கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். பாவங்கள் அகலும். மேலும், தனத்திரயோதசியாகிய இன்று, சுவர்ணம் (தங்கம்) வாங்க, நீங்காத செல்வமாகிய அஷ்ட லட்சுமி கடாட்சமும் நிறைந்து வீட்டில் சுபிட்சம் பெருகும்.

ஐப்பசி 26 (12-11-2023) : தீபாவளிப் பண்டிகை. நம் நாட்டின், தேசியப் பண்டிகை. ஒவ்வொரு வீட்டிலும் தீபங்கள் ஏற்றி, லட்சுமி பூஜை செய்யவேண்டிய புனித நன்னாள். அதனால் ஐஸ்வரியம் பெருகும்.

ஐப்பசி 27 (13-11-2023): சர்வ அமாவாசை. மறைந்த நமது முன்னோர்களை தர்ப்பணம் முதலியவற்றால், பூஜிக்கவேண்டிய மகத்தான, புண்ணிய தினம். மேலும், கேதார கௌரி விரதமாகிய இன்று, ஒன்பது வெற்றிலை, ஒன்பது பாக்கு, ஒன்பது பழங்களை வைத்து பூஜை செய்வது, உங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் நிறவேற்றித் தந்தருள்வாள், கௌரி தேவி!

ஐப்பசி 29 (15-11-2023) : யம துதியை. நமது பிறவி முடிந்ததும், “வைவஸ்வதம்” எனும் புண்ணிய திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவரும், நமக்கு மறுபிறவியை அளித்தருள்பவருமான எமதர்மராஜாவைப் பூஜிக்கவேண்டிய, மிக மிக உத்தமமான புண்ணிய தினம். இன்று யமதர்மருக்கும், சித்திரகுப்த ஸ்வாமிக்கும், பேச இயலாத பிராணிகளுக்காகவும், நெய், பருப்பு கலந்த சாத உருண்டை வைப்பது மகா புண்ணியமாகும்.

மேலும், சகோதரன், தன் உடன்பிறந்த சகோதரியின் இல்லத்திற்குச் சென்று, உணவு உண்டு, சகோதரிக்கும், அவருடைய கணவருக்கும், வெற்றிலை, பாக்கு தாம்பூலத் தட்டுடன்புடவை, வேஷ்டி, சிறிதளவு தட்சணையும் கொடுத்தால், இருவீட்டாரின் பரஸ்பர நெருக்கமும், கணவன் – மனைவியரிடையே அந்நியோன்யமும் பெருகி, மஞ்சள், குங்குமத்துடன் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வாங்கு வாழ்வர்.

The post ஐப்பசியில் அடை மழை! அருள் மழை பொழியுமா கோள்கள்? appeared first on Dinakaran.

Tags : Bhagwat Kaingarya ,Sagara Chakravarty ,AMrajagopalan Aipasi 06 ,Shani Vakra Nivarti ,Aipasi 15 ,Aipasi ,
× RELATED தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!!