×

நீண்டகால சிறைவாசிகள் விடுதலை கோரும் கோப்பு கவர்னரிடம் நிலுவையில் உள்ளது: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: நீண்ட கால சிறைவாசிகள் 49 பேருக்கு விடுதலை கோரும் கோப்புகள் கவர்னருக்கு அனுப்பிய நிலையில் அவரிடம் நிலுவையில் உள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: 2023-24ம் ஆண்டுக்காக சட்ட கல்வி இயக்ககத்தின் மூலமாக அரசு சட்டக் கல்லூரிகளில் எம்.எல். படிப்புக்காக 1,607 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலனை செய்யப்பட்டு 11 அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 21 முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு 420 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முதல் 10 பேருக்கு நேரில் தேர்ச்சி கடிதத்தை வழங்கியுள்ளோம். மீதமுள்ளவர்களுக்கு இணையவழி மூலம் அனுப்பி வைக்கப்படும். நீண்ட கால சிறைவாசிகள் 49 பேருக்கு விடுதலை கோரும் கோப்புகளும் கவர்னரிடம் அனுப்பப்பட்டுள்ளன. அவை அவரிடம் நிலுவையில் உள்ளன. அந்த 49 கோப்புகளிலும் கவர்னர் கையெழுத்திடமாட்டார் என்று தமிழக பாஜ தலைவர் கூறியிருப்பதாக நீங்கள் சொன்னால், அதன் மூலம் கவர்னர் தான் அண்ணாமலை, அண்ணாமலை தான் கவர்னர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தான் அர்த்தம்.

திரைப்பட சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. லியோ திரைப்படத்திற்கு காலை 4 மணியில் இருந்து அனுமதி கேட்டனர். காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு 1.30 மணிவரை திரையிட அனுமதி வழங்கியுள்ளோம். தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு திரையிட நீதிமன்றம் அனுமதித்தால் அந்த உத்தரவுக்கு அரசு கட்டுப்படும்.

தீபாவளி போன்ற பண்டிகை காலகட்டங்களில் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து காட்சிகளுக்கும் குறைந்த பட்சம் 18 மணி நேரம் தேவைப்படும். எனவே அதிகாலையிலேயே காட்சிகளை தொடங்க வேண்டும். லியோ படம் 5 காட்சிகள் என்பதால் காலை 9 மணியில் இருந்து அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. திரையுலகம் எங்களின் நட்பு உலகம். அவர்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ள விரும்பமாட்டோம் என்றார்.

The post நீண்டகால சிறைவாசிகள் விடுதலை கோரும் கோப்பு கவர்னரிடம் நிலுவையில் உள்ளது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Chennai ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...