×

படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி- சக்தி தத்துவம்

“சடைமேல் வைத்த தாமரையே”

“சடை” என்பதனால் சிவபெருமானுடைய தலையில் உள்ள கற்றைச் சடை, “மேல் வைத்த” என்பதனால் சடைமேல் வைக்கப்பட்டுள்ள பொருளையும் குறிப்பிடுகிறார். “தாமரை” என்பதனால் கங்கையையும் குறிப்பிடுகிறார். ருத்ரன் சடையை பொறுத்தவரை ஆகமங்கள் மூன்று சிறப்பான விக்ரஹங்களைக் குறிப்பிடுகிறது. விரிசடை என்பதால் நடராஜரையும், பனிசடை என்பதால் தட்சிணாமூர்த்தியையும், தாழ்சடை என்பதனால் கங்காதர மூர்த்தியையும் குறிக்கிறது.

இந்த மூன்று ருத்ரனின் திருஉருவத்திலும் கங்கையை மீன்வடிவிலும், மகரம் என்னும் முதலை வடிவிலும், தலையில் பெண்ணின் முகவடிவத்திலும் அமைத்திருப்பர். இப்பாடலைப் பொறுத்தவரை ருத்ரனின் தலையில் தலை மட்டும் தெரியும் வகையில் மற்ற பாகம் மறைத்திருக்கும் வகையில் உள்ள கங்கையை இங்கே குறிப்பிடுகிறார். அந்த கங்கையைதான் அபிராமிபட்டர் இங்கு “தாமரை” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

திருக்கடையூர் தலபுராணத்தைப் பொறுத்தவரை சிவபெருமான் ருத்ரனாகவே காட்சியளிக்கிறார். ருத்ரனும் கங்கையும் இணைந்து ஆன்மாக்களுக்கு முக்தியை அளிப்பவர்கள். இன்றும் திருக்கடையூரில் திருமயானம் என்ற மயான க்ஷேத்திரத்திலிருந்து கங்கைநீர் எடுத்து வரப்பட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு எந்த நீரும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பரிசாரகராய் பணியாற்றிய அபிராமிபட்டர், இதை நன்கு அறிந்தே “சடைமேல் வைத்த தாமரையே” என்று கங்கையைக் குறிப்பிடுகிறார்.

ம்ருத்யுஞ்சய பூஜா விதி கல்பமும் ம்ருத்யுஞ்ஜயரின் வடிவத்தை வரையறுக்கும் போது `கங்கா துங்க தரங்க ஜடாபாரம்’ என்று உயர்ந்த மேல்நோக்கிய சடையில் தாங்கப்பட்ட கங்கையானவள் என்று குறிப்பிடுவதிலிருந்து நன்கு அறியலாம். மேலும், ம்ருத்யுஞ்ஜயருக்கு பதினோரு சிறப்பு அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். அதைக்கொண்டும் ருத்ருஉஊர் என உணரலாம். ஏகாதச, ருத்ரர்களில் ஒருவரே ம்ருத்யுஞ்ஜயர் என்றே அறியலாம் இவை யாவற்றையும் “சடைமேல் வைத்த தாமரையே” என்கின்றார்.

“அந்தமாக”

“என் குறைதீர நின்று ஏத்துகின்றேன்” என்ற வரியால் தன்நிலையை நிறைவேற்றிக் கொள்ளவே வழிபாடு செய்கின்றேன் என்பதையும்,“இனி யான்பிறக்கின்” என்பதனால் பிறவாமையாகிற முக்தியை வேண்டுகிறார். “நின் குறையே அன்றி” என்பதனால் உமையம்மை மட்டும் முக்தியை அருளமுடியும்.

“யார் குறை காண்” என்பதனால் வேறு எந்த தேவதைகளாலும் முக்தியை அருள முடியாது என்பதையும் “இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை” என்பதனால் உமையம்மையின் இருள் வடிவமைப்பையும், இருளில் தோன்றிய மின்னலின் வடிவத்தை ஒத்ததுமாகிற சிவகாமி, போகசக்தி, சிச்சக்தி, அஸ்த்ரசக்தி அபிராமி உற்சவர் என்ற ஐந்து சக்திகளையும் பிரித்தும்,“மெல்லியலாய்” என்பதனால் ஐந்து சக்தியை இணைத்து மனோன்மணி என்ற அபிராமியும் அவளே அருளினால் அன்றி வேறு வகையில் முக்தியை அடைய இயலாது ஆகையால்,

“தன் குறை தீர எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே” என்பதால் ருத்ரனிடத்து கங்கையாய் தோன்றும் உமையம்மையே முக்தியளிக்க வல்லவள் என்பதை நமக்குப் பதிவு செய்கிறார். அவ்வாறே வணங்கி இப்பாடலின் பயனான கடனின்றி வாழ முயல்வோம்.

தாமம் கடம்பு; படைபஞ்ச பாணம்; தனுக்
கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக்கென்று
வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கொளி
செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே
எழுபத்தி மூன்றாவது அந்தாதி

“ஆதியாக”

ஒரு மனிதனை ஆதார் அட்டை, வாக் காளர் அட்டை போன்ற தனி அடையாளங்களை கொண்டு உறுதி செய்யலாம். அதாவது, கைரேகை, கால்ரேகை, மச்சம், தீப்புண், வெட்டுக்காயம், அழியாத மறு, கண்அடையாளம், நிறம், மனதில் நினைக்கும் நினைவு இவைகளைக் கொண்டு அறிய முயல்வதை போல, இந்த பாடலில் இறைவிக்கான ஒன்பது தனி அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

அந்த அடையாளங்களை கொண்டு பிற தேவதைகளிடமிருந்து பிரித்து தனித்து உமையம்மையை சிற்ப சாத்திரப்படி வடித்த சிலைகளை ரூப தியானத்தால் கண், கையின் எண்ணிக்கை, தலை கிரீட அமைப்பு, கையில் உள்ள ஆயுதம், சொல்லப்பட்டுள்ள நிறம், தேவதையின் பதத்தை சார்ந்து நின்று, இருந்து, கிடந்து, நடந்து மற்றும் ஆடிய திருப்பாதம், முக எண்ணிக்கை, வாகனம், தேவதையின் பெயர், இவற்றைக் கொண்டு அறியலாம்.

உதாரணமாய் மன்மதனை கண் இரண்டு, கை இரண்டு, புஷ்ப கிரீடம், கரும்பு வில் அம்பு, மேக நிறம், நடந்த திருக்கோலம், வாகனம் கிளி அடையாளத்தால் அறியலாம். அதுபோலவே, உமையம்மையின் அடையாளம் காணஇயலும். இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

நாமம் திரிபுரை
தாமம் கடம்பு
படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது
எமக்கென்று வைத்த சேமம் திருவடி
செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை
ஒன்றோடிரண்டு நயனங்களே

இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“நாமம் திரிபுரை’’ என்பதற்கு மூன்று பொருள் உள்ளது. அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம். “நாமம்’’ என்பதற்கு பெயர் என்பது பொருள். உமையம்மையின் பல்வேறு திருப்பெயர்களில் “திரிபுரை” என்பதும் ஒன்று இந்த பெயரானது ஒரு காரணப் பெயராகும். “திரி’’ என்பதற்கு மூன்று என்பதும் புரம் என்பதற்கு ஊர் கோட்டை மற்றும் அசுரர்கள் மூவர் என்று பொருள். பொன், வெள்ளி, இரும்பு என்ற உலோகங்களால் அமைந்த கோட்டை வடிவிலான மூன்று அசுரர்கள் இருந்தார்கள்.

இவர்களை சிவபெருமான் ஓர் அம்பினால் அழித்தார். அளிக்கும் சமயத்தில் உடன் இருந்து உதவிய உமையம்மைக்கு திரிபுரை என்று பெயர். இதை ‘திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே’ (2) என்பதனால் நன்கு அறியலாம். மேலும், “நாம’’ என்ற சொல்வினைச் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அச்சொல்லிற்கு அறிமுகம் செய்தல், போற்றுதல் என்ற பொருளும் உண்டு.

“நாமம் திரிபுரை’’

என்பதனால் திரிபுரை என்ற பெயரை உடைய உமையம்மையை பற்றி அறிமுகம் செய்வது அவளது உண்மையான குணங்களைச் சிறப்பை போற்றி புகழ்வது என்ற பொருளும் உண்டு. திரிபுரையின் குணங்கள் என்னென்ன என்பதை இப்பாடலின் அடுத்தடுத்த வரிசையில் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். மேலும், வேதங்களின் சாரமான முடிவான கருத்தை கூறுவது வேதாந்தம் அந்த வேதத்தில் `திரிபுர தாபினி’ என்ற தேவதையை குறித்து உபநிஷத் ஒன்றும் உள்ளது. அதில் திரிபுரா என்பதற்கு பருவுடல் [ஸ்தூல சரீரம்], நுண்ணுடல் [சூக்ஷ்ம் சரீரம்], காரண சரீரம் மூல உடல் என்று ஆன்மாவிற்கு மூன்று உடல் உள்ளது. அவ்வுடல்களை அழித்து என்றும் நிலைப்பேறுடைய ஆன்மாவைப் பற்றி ஞானத்தை வழங்கும் தேவதையின் பெயர் திரிபுரை என்பதாகும். அதையும் கருத்தில் கொண்டே “நாமம் திரிபுரை” என்கிறார்.

“தாமம் கடம்பு”`

`தாமம்’’ என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. தாமம் என்பது உயிரைக் குறிக்கும். கடம்பு என்பது ஒரு வகை மலர். கடம்ப மலர்களைத் தொடுத்து சாத்துவதையே “தாமம் கடம்பு’’ என்கிறார். கடம்ப மலரானது பெருமாளை வணங்குவதற்கும், முருகனை வணங்குவதற்கும் உரிய மலராகும். இந்த மலரைக் கொண்டு உமையம்மையை வணங்கினால் செல்வச் செழிப்பும், புத்திரப் பேறும் உண்டாகும் என்கிறது சாக்த தந்திரம். குறிப்பாக, இந்த மலரை திரிபுரை என்ற பெயரையுடைய உமையம்மைக்கு சாத்தி வழிபடுவது அனைத்து விருப்பங்களையும் நிறைவேறும் என்கிறது ஆகமம். கடம்ப மலரை சாத்துவதோடு அல்லாமல் அந்த மரத்தின் சமித்தை ஹோமம் செய்வதற்கு உகந்தது என்கிறது. எல்லாவற்றையும்விட மேலாக மதுரை மீனாட்சியம்மை ஆலயத்திற்குக் கடம்பவனம் என்று பெயர். கடம்ப மரம் தல விருட்சமாகவும் உள்ளது.

“தாமம் கடம்பு’’ என்பதனால் மதுரையிலுள்ள மீனாட்சியையும் இந்த சொல்லால் அடையாளப்படுத்துகிறார். மீனாட்சி அம்மையானவள் மூன்று உடலை பெற்று திகழ்பவள். யாகத்தீயில் தோன்றியவள். மதுரை பாண்டிய மன்னரின் வம்சத்தில் பிறந்தது தேவதையாக அல்லாமல் மானுட பெண்ணாக வளர்ந்தவள். பிறகு அர்சாவதார மூர்த்தியாக மீனாட்சி சிலையாக உள்ளவள். இந்த மூன்று உடலை பெற்றதால் மீனாட்சிக்கு “திரிபுரசுந்தரி’’ என்று பெயர். இந்த பெயரை அபிராமி பட்டரும் பயன்படுத்துகிறார்.

மேலும், திரிபுரை என்பதற்கு சண்டி என்பதும் ஒரு பொருள். ஸ்ரீசக்ர வடிவில் நான்கு பக்கமும் வாயில்கள் போன்ற அமைப்பு இருக்கும் அந்த அமைப்பிற்குப் பூபுரம் என்று பெயர். இந்த அமைப்பில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்ற மூன்று சக்திகள் உறைவதாக தந்திர சாத்திரம் குறிப்பிடுகிறது. இம்மூன்றும் இணைந்த வடிவே சண்டி. இதை நவசண்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஒன்பது நாட்கள் இந்த பூபுரத்திலுள்ள திரிபுரை தேவியரை கடம்ப மலர் வைத்து வணங்கினால் பகை தீரும், மனதில் அமைதி தோன்றும், வெற்றி கிடைக்கும் என்கிறது பத்ததி இதையே “தாமம் கடம்பு’’ என்கிறார்.

“படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு’’

* தாமரை [அரவிந்தம்]
* அசோக மலர் [அசோகம்]
* மாம்பூ [சூதம்]
* நீல அல்லி [நீலோத்பலம்]
* மல்லிகை
* கரும்பு

சாக்த உபாசனையில் ஒன்பது வேறுபட்ட வழிபாடு நெறிகள் உள்ளது. அதில் மந்திரம், தந்திரம், யந்திரம், சித்தாந்தம், காலம், அவகாசம், அப்யாசம், அனுகிரகம், கர்மா, இந்த ஒன்பதும் தனித்தனியானது அல்ல என்றாலும் இதில் ஏதேனும் ஒன்றை முதன்மையாகக் கொண்டே மற்ற எட்டையும் இணைத்து வழிபாடு செய்வர். இப்பாடலைப் பொறுத்தவரை தந்திர சாஸ்திரத்தில் உள்ள பொருள்களை இங்கு குறிப்பிடுகின்றார். அவை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அந்த பொருள் அத்தேவதையின் அருளை பெற்றுத்தரவல்லது. அந்த வகையில் “படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு’’ என்ற சொல்லில் பதினைந்து தேவதைகளின் பெயரைக் குறிப்பிடுகிறார் தந்திர சாத்திரம் பொருளை முதன்மையாகக்கொண்டே தேவதையை அறிமுகப்படுத்தும். அந்த வகையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அபிராமிபட்டர் “படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு’’ என்ற சொல்லில் மட்டும் பதினைந்து பூசனைப் பொருள்களை சூட்டுகிறார். ஒவ்வொரு பொருளும் ஒரு தேவதையை நமக்குச் சூட்டுகிறது.

அதைத்தான் அபிராமிபட்டர் இங்கே மறைமுகமாக சூட்டுகிறார். உமையம்மையை சுற்றி பதினாறு திதி நித்யா தேவதைகள் உள்ளன. இவைகள் காலம் சூட்டும். அந்த தேவதைகளுக்குரிய வடிவம் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும். ஒவ்வொன்றும் ஒரு சிறிய மாறுதல்களைக் கொண்டிருக்கும் அந்த மாறுபாட்டை நுட்பமாக உணர்ந்தாலே அன்றி உபாசனையில் சித்தி பெற முடியாது. இவர் குறிப்பிடும் இந்த தேவதை இரண்டு கண்களையும், இரண்டு கைகளையும், கொண்டு ஒரே தோற்றமுடன் இருந்தாலும் கைகளில் மட்டும் குறிப்பாக, வலதுகையில் உள்ள மலர்களை கொண்டு அடையாளம் காண முடியும். அதையே “படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு’’ என்று குறிப்பிடுகின்றார்.

இந்த தேவதைகளை சக்கரத்தின் நடுவிலுள்ள முக்கோணத்தில் பதினைந்து பேரையும், நடுவில் உள்ள பிந்துவில் உமையம்மையுடன் ஒருத்தியையும் தியானிப்பர். இந்த தேவதைகளின் பெயர்கள், அர்ச்சிக்க வேண்டிய காலம், அர்சித்தற்குரிய மலர், இம்மூன்றும் படை பஞ்ச பாணம் தனுக் கரும்பு என்ற வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது. அதை இந்த வரிசையில் காணலாம். மேலும், அதற்கான பயனையும் பதிகத்தின் ஒரு பாடலாகவே தந்துள்ளார் பட்டர்.

‘சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி, மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள்
வெற்றிஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி
நீ’ (பதிகம்)

– என்பதனால் அறியலாம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmikam ,Abhirami Anthadi- Shakti Tattva ,Lord Shiva ,
× RELATED நின் குறிப்பறிந்து தெளிவாக நடப்பேன்