×

ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்..!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆண்களை அதிகளவில் பாதிக்கும் புற்றுநோய்களில் முக்கியமானது புரோஸ்டேட் புற்றுநோய். இது வயதான ஆண்களிடையே ஏற்படும் ஒருவகை புற்றுநோயாகும். இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த புற்றுநோய் தற்போது மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது. அதனோடு புற்றுநோயில் இறப்பை ஏற்படுத்துவதில் இது இரண்டாவது புற்றுநோயாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிறுநீரகவியல் மருத்துவர் நசரேத் சாலமன்,.

புரோஸ்டேட் புற்றுநோய் எப்படி தடுப்பது

புரோஸ்டேட் புற்றுநோய் மெதுவாக வளரக் கூடியது. இதன் அறிகுறிகள் அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரிவதில்லை. இதனால் ஆண்களுக்கு வெளிப்படையான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் தெரிவதில்லை. இதனால், இது பெரும்பாலும் அதிகரித்த பின்பே தெரியவருகிறது. எனினும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை முன்கூட்டிய பரிசோதனை மூலம் இதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

புரோஸ்டேட் புற்றுநோயை முற்றிலும் தடுக்க இன்னும் நவீன மருத்துவ சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் பெருமளவு இதன் ஆபத்தை குறைக்க முடியும். ஆண்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை விடுவதுதான் ஆரோக்கியத்தின் முதல் படி. அதன் படி புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்க வழக்கங்களை கொண்டிருந்தால் அதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உணவு முறை

அதே நேரத்தில் சமச்சீரான உணவுகளை எடுத்து வருவது நல்லது. மோசமான உணவுகள் தவிர்த்து அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகள் சேர்க்க வேண்டும். அதாவது பழங்கள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொண்டு வருவது உடல் ஆரோக்கியம் அதிகரிக்க தொடங்கும்.

உடல் ஆரோக்கியம் அதிகரிக்க உடற்பயிற்சி

உடல் உழைப்பின்மை பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை உண்டாக்கிவிடுகிறது. தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரித்தல் பல நன்மைகளை அளிக்க செய்யும்.

புரோஸ்டேட் புற்றுநோய்க்கு ஸ்கிரீனிங் செய்தல்

புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகவும் அவசியம். எனவே ஆண்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அடிக்கடி பரிசோதனை மேற்கொள்வது நல்லது. இது நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிய குறிப்பிட்ட ஆன்டிஜென் (PSA) ரத்த பரிசோதனை மற்றும் டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை (DRE) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.CA புரோஸ்டேட் ஸ்கிரீனிங் போன்றவை 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்களும் ஒவ்வொரு 1-2 வருடங்களுக்கு ஒருமுறை செய்து வருவது நல்லது.

நோயைக் கண்டறிதல்

ஸ்கிரீனிங்: உயர்த்தப்பட்ட PSA அளவுகள் அல்லது DRE (டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை) இன் போது காணப்படும் அசாதாரணங்கள் நோயைக் கண்டறிய உதவுகிறது.

பயாப்ஸி முறை: ஸ்கிரீனிங் செய்யும் போது புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய தகவல்கள் கிடைத்தால் அடுத்ததாக TRUS அதாவது புரோஸ்டேட் பயாப்ஸி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த புரோஸ்டேட் பயாப்ஸியில் புரோஸ்டேடிக் புண்களைக் கண்டறிதல் மற்றும் ஹிஸ்டோபோதாலஜிக்கல் மதிப்பீடுகளை அறிதல் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.

இமேஜிங் எம்பிஎம்ஆர்ஐ போன்ற மேம்பட்ட இமேஜிங் நுட்பங்கள் நோயின் அளவைக் கண்டறிய பயன்படுகிறது. மெட்டாஸ்டேடிக் புண்களை கண்டறிய PSMA PET CT போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இந்த தகவலை வைத்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

நோயாளியை தொடர்ந்து கண்காணிப்பது வயதான ஆண்களுக்கு குறைந்த ஆபத்துள்ள புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கங்கள் இருந்தால் தொடர்ந்து கண்காணிக்க பரிந்துரைக்கப்படுகிறது. புற்றுநோயின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அறுவைசிகிச்சை: ரோபோடிக் ரேடிகல் புரோஸ்டேடெக்டோமி என்பது முழு புரோஸ்டேட்டை தேர்ந்தெடுக்கும் அறுவை சிகிச்சை முறையாகும். இதன் மூலம் புரோஸ்டேட் சுரப்பி அகற்றப்படுகிறது. இது உள் பகுதியில் இருக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சை முறையாகும்.

கதிர்வீச்சு சிகிச்சை முறை: இதில் வெளிப்புறக் கற்றை கதிர்வீச்சு மற்றும் ப்ராச்சிதெரபி போன்ற தீவிர கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறையில் புற்றுநோய் செல்களை குறிவைத்து அழிக்க உயர் கதிர்வீச்சுகள் பயன்படுத்தப்படும் முறையாகும்.

ஹார்மோன் சிகிச்சை: புரோஸ்டேட் புற்றுநோய் வளர்வதற்கு ஆண் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன்கள்) முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஹார்மோன் சிகிச்சைகள் கொடுப்பதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கத்தை குறைக்க முடியும். இந்த ஹார்மோன் சிகிச்சை மூலம் ஹார்மோன்களின் அளவைக் குறைக்க முடியும். மெட்டாஸ்டிக் CA புரோஸ்டேட் அதாவது இருதரப்பு ஆர்க்கிடெக்டோமி என்பது ஒரு வகையான ஹார்மோன் சிகிச்சையாகும். இதுவும் மேற்கொள்ளப்படுகிறது.

கீமோதெரபி: ஒரு வேளை மெட்டாஸ்டிக் CA புரோஸ்டேட் தெரபி கை கொடுக்கவில்லை என்றால் கீமோதெரபி பரிந்துரைக்கப்படுகிறது.நோயெதிர்ப்பு சிகிச்சைகள்: உடலைத் தூண்டுவதன் மூலம் சில நோயெதிர்ப்பு சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முறையில் புற்றுநோய் செல்களை தாக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு குறிவைக்கப்படுகிறது.

சிகிச்சை முடிவுகள்: புற்றுநோயின் நிலை, நோயாளியின் வயது மற்றும் பல்வேறு காரணிகளை பொறுத்தது. ஒட்டுமொத்த ஆரோக்க்கியம் மற்றும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் இதில் அடங்கும்.புரோஸ்டேட் நோயால் கண்டறியப்படும் நபர்களுடன் சுகாதார குழு நெருக்கமாக இணைந்து நோயாளியின் ஆரோக்கியத்துக்கேற்ப தேவைகள் மற்றும் சூழ்நிலைகள் ஏற்ப தனித்துவமான சிகிச்சை திட்டத்தை உண்டாக்குகிறது.

சிகிச்சையின் பிறகும் மீண்டும் பக்கவாட்டு அறிகுறிகளை கண்காணிக்க வழக்கமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. நவீன மருத்துவத்தில் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சை வெற்றியளிக்கிறது. பல ஆண்கள் நோய் சரியான நேரத்தில் கண்டறிந்தால் உரிய கவனிப்புடன் ஆரோக்கியமான நிறைவான வாழ்க்கையை நடத்தலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்..! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!