×

இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’

நன்றி குங்குமம் தோழி

இருளர் குழந்தைகளின் சுகாதாரம், கல்வி இவற்றை முன் வைத்து, ஒற்றை குடிசைக்குள், ஒற்றைப் பெண்ணாக செரினாவின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டதே அலை கல்விக்குடில். செரினாவுடன் யுவராஜ், ஹரிகுமார், எஸ்தர் ஷெரிஃப், முத்துராஜ் என நண்பர்கள் சிலரும் இணைந்திருக்கிறார்கள். கலை வழியே கல்வி என்கிற முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்கள் இவர்கள். செரினாவிடம் பேசியதில்…‘‘கல்பாக்கத்தை ஒட்டியிருக்கும் காரைத்திட்டு இருளர் பகுதி குடியிருப்பை மையப்படுத்தி நான் இங்கு வந்து 6 வருடங்கள் கடந்தாச்சு.

இன்னும் இங்குள்ள இருளர் குழந்தைகளிடம் பெரிய அளவில் மாற்றத்தை பார்க்கவில்லைதான். ஆனாலும் உடையின்றி குளிக்காமல், மண் அப்பி அழுக்கேறி இருந்த குழந்தைகள் இன்று தங்களை சரிப்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பத்து குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு சென்ற நிலையில், இன்று 50 குழந்தைகள் செல்கிறார்கள். அடிப்படை விஷயங்களை அவர்களிடத்தில் மாற்றியதில், கொஞ்சமாக நம்பிக்கை பிறந்திருக்கிறது…’’ மெதுவாகவே பேச ஆரம்பித்தார் செரினா.

‘‘நான் பிறந்தது மட்டும்தான் வடசென்னை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூருவில். அங்குதான் எம்.எஸ்.டபிள்யூ படிப்பையும் முடித்தேன். கல்பாக்கத்தில் பணியாற்றும் என் பெரியப்பாவை பார்க்க ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு செல்வேன். அப்போது அங்கு கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவ சமுதாய மக்களின் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யலாம் என நினைத்தே அவர்கள் வசிப்பிடம் தேடிச் சென்றேன். அப்போது என் கண்களில் இருளர் மக்களின் குடியிருப்பும், அவர்களின் குழந்தைகளும் எதேச்சையாக தென்பட்டனர். மாற்றங்களையே உணராதவர்களாக அவர்கள் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த அத்தனையும் சிறிய அளவிலான கூரை வீடுகள். ஒரு சிறுவன் உடையின்றி, முகம் மற்றும் உடலில் மண் அப்பி, தலை முடி ஜடை பிடித்த நிலையில் தென்பட்டான். என்னிடம் பேசாமலே அவன் கண்கள் என்னைத் தீர்க்கமாக ஊடுறுவி கவனிப்பதை உணர்ந்தேன். அங்கிருந்த மொத்த இருளர் மக்களின் துயரங்களை, அவன் விழி வழியே எனக்கு கடத்துவதை என்னால் அந்த நொடி உணர முடிந்தது. நான் படித்த படிப்பு இந்த மக்களுக்கு பயன்படட்டும் என முடிவு செய்தேன். நண்பர்கள் உதவியோடு களத்தில் இறங்கினேன்.

அங்கிருந்த குழந்தைகள் பெரும்பாலும் அறை ஆடை அல்லது ஆடையின்றி, அழுக்கேறியவர்களாக இருந்தார்கள். உங்கள் குழந்தைகளுக்கு சுத்தமாக உடை உடுத்தி வைத்தால்தான் அவர்களிடம் மாற்றம் வரும். இந்த சமூகத்தோடு ஒன்ற ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் உலகம் அவர்களை ஒதுக்கியேதான் வைக்கும் என்பதை மெல்ல மெல்ல சொல்ல ஆரம்பித்தேன். அங்கிருந்த பெண்கள் என்னை வினோதமாகப் பார்த்தனர். குழந்தைகளுக்கு உடை, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், சோப்பு, எண்ணை எல்லாம் கொடுக்க ஆரம்பித்ததும் என்னிடம் நெருங்க ஆரம்பித்து அப்படியே பழக ஆரம்பித்தார்கள்…’’ என்ற செரினாவைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

‘‘பெற்றோர்கள் அதிகாலையே கட்டிட வேலை, மரம் வெட்டும் வேலைகளுக்கு கூலி தொழிலாளிகளாகச் செல்வதால், குழந்தைகள் பள்ளிக்கே போகாமல், அங்குள்ள ஏரி, கடல் என விளையாடித்திரிந்தார்கள். 9ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சியென்பதால், பெரும்பாலும் எழுதப் படிக்கத் தெரியாமலே மாணவர்கள் இருந்தார்கள். பெற்றோர்களுக்கும் படிப்பின் முக்கியத்துவம் தெரியவில்லை.

2019ல் அந்த மக்களின் அனுமதியோடு சிறிய குடிசை ஒன்றினை அங்கு அமைத்தோம். இப்போது குடிசையின் அருகில், குழந்தைகளுக்காக டாய்லெட் பாத்ரூம் ஒன்றை கட்டிக் கொடுத்திருக்கிறோம்’’ என்கிற செரினாவின் மொத்த உலகமும் இந்த குடிசைக்குள்தான் இயங்குகிறது. ‘‘இந்தக் குடிசை வழியாகத்தான் குழந்தைகளிடம் மாற்றத்தைக் கொஞ்சமாக விதைத்திருக்கிறோம். இப்போது தன்னார்வலர்கள் சிலரும் கைகோர்த்து குழந்தைகளுக்கு விளையாட்டின் வழியாக கல்வியில் ஆர்வம் ஏற்படுத்துகிறார்கள் என்கிறார்.

ஒரு மாற்றத்தை புதிதாய் விதைக்க அதிகமாகவே நேரம் எடுக்கும் இல்லையா? அதற்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்கிற செரினா, ‘‘இங்கிருந்து ஒரு குழந்தையாவது அரசு பதவியில் உயர் அதிகாரி அல்லது காவல்துறை அதிகாரி, டாக்டர் அல்லது நர்ஸாக மாறினால் அதுதான் எங்கள் வெற்றி. இது நடக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு. அதை நோக்கிதான் குழந்தைகளை நகர்த்த முயற்சிக்கிறோம்’’ என அழுத்தமாகச் சொன்னவர் முழுநேரத் தன்னார்வலரான யுவராஜை நோக்கி விரல் நீட்டி விடைபெற்றார்.

‘‘நான் யுவராஜன், குழந்தைகளுக்கான கதைகளை அவர்கள் மொழியில் எழுதும் ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி குழந்தைகள் இதழ் சிலவற்றிலும் பணியாற்றி இருக்கிறேன். அப்படித்தான் செரினா நட்பு கிடைத்தது. முதலில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வந்து குழந்தைகளோடு பொழுதை செலவழித்தவன், நிரந்தரமாக இங்கேயே தங்கினால்தான் குழந்தைகளிடம் மாற்றத்தை கொண்டுவர முடியுமென யோசித்து இங்கேயே தங்கிவிட்டேன்.

குழந்தைகளின் பெற்றோர் தலைமுறை கடந்து படிக்காதவர்களாக இருப்பதால், குழந்தைகள் 50 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறார்கள். இப்போதுதான் முதல் தலை
முறையாக பள்ளிக்கு செல்கிறார்கள். அதுவும் சரியாகப் போவதில்லை. பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்களாக அதிகாலை 6 மணிக்கு கிளம்பி மீண்டும் 7 மணிக்கு திரும்புகிற நிலையில் வற்புறுத்தி குழந்தைகளை படிக்க அனுப்புவதில்லை. பெற்றோர் கவனிப்பு இன்றி, பள்ளி இடைநிற்றலும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. பெண் குழந்தையெனில், தம்பி, தங்கைகளை கவனிக்க வீட்டிலேயே இருப்பார்கள். அல்லது 14, 15 வயதில் திருமணம் செய்துவிடுகிறார்கள்.

இன்று, 40 குழந்தைகளாவது தினமும் இந்த குடிசைக்கு வருவார்கள். படிக்க வரவேண்டும் என்றால் குளித்து, உடை உடுத்தி, சுத்தமாகத்தான் வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அப்படியாக வரும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது, படம் பார்க்க வைப்பது என ஊக்கப்படுத்துவதுடன், மாலை சிற்றுண்டியாக சுண்டல் செய்து கொடுக்கிறோம். அவர்களை அவர்கள் போக்கில்விட்டு, விளையாட்டின் வழியே கற்றலை நோக்கி நகர்த்துகிறோம். படிப்பைத் தாண்டி அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து ஊக்குவிக்கிறோம். வெளியிலிருந்தும் சிலர் ஆதரவுக்கரம் நீட்டி, செயல்முறை வகுப்புகளை எடுக்க வருகிறார்கள். தன்னார்வலர்கள் சிலரும் ஆன்லைன் வழியாக கற்றல் ஆர்வத்தை ஊட்டி வருகிறார்கள்.

யு டியூப் வழியாகவும் பாடம் கற்கும் முறை நடைபெறுகிறது. அருகே உள்ள தனியார் மருத்துவமனைகள் மூலம் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். மொத்தம் 68 இருளர் குடும்பங்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் மட்டும் 48 இருக்கிறார்கள் . பள்ளி இடைநிற்றல் இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. 4 குழந்தைகள் 10வது தேர்வை எழுதுகிறார்கள். மாற்றங்கள் மெதுவாகவே வரும்…’’ என விடைபெற்றவரைத் தொடர்ந்தார் அலை குடிசையில் குழந்தைகள் கல்விக்காக இயங்கிவரும் ஐ.டி. ஊழியரான ஹரிக்குமார்.

‘‘இஞ்சினியரிங் கல்லூரி மாணவனாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளைத் தேடி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட வந்தபோது கண்ணில் பட்டவர்கள்தான் இந்த இருளர் குடியிருப்புக் குழந்தைகள். என் அப்பா கல்பாக்கம் அணுமின் நிலை அதிகாரி. நான் பிறந்து வளர்ந்தது கல்பாக்கத்தில்தான்.அதனால் நான் நல்ல பள்ளி, நல்ல விளையாட்டு மைதானம், ஆரோக்கியமான வாழ்க்கை என வளர்ந்தவன். எனக்கு அரை கிலோ மீட்டர் தூரம்கூட இல்லாத சுவற்றுக்கு பின்னால் இருக்கும் இந்த இருளர் குடியிருப்பின் குழந்தைகள் “வாகை சூடவா” திரைப்படத்தை நினைவூட்டும் விதமாக, குடிசை, செங்கல் சூளை என 50 வருடம் பின் தங்கி இருந்த நிகழ்வு என்னை அன்றைய இரவு முழுவதும் தூங்கவிடவில்லை.

அதன் பிறகே கிரிக்கெட் விளையாட இணைந்த நண்பர்கள் தன்னார்வலர்களாக மாறினோம். தினமும் மாலை நேரம், விடுமுறை நாட்கள் எனச் சென்று செரினா அக்கா, யுவராஜ் அண்ணாவோடு இணைந்து குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தோம். 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கடிகாரத்தில் நேரம் பார்க்கத் தெரியவில்லை. 2 ரூபாய்க்கு சாக்லெட் வாங்கினால் 10 ரூபாயில் மீதி எவ்வளவு எனக் கேட்டால் பதில் தெரியவில்லை. எனவே விளையாட்டு மூலமாகவும், கதைகள் மூலமாகவும் கற்றலைத் தொடங்கி அடிப்படை கணக்கு, அடிப்படை அறிவியலில் ஆரம்பித்து, டெலஸ்கோப், மைக்ராஸ்கோப் போன்ற பொருட்களை நேரில் கொண்டு வந்து காட்டியும் பாடங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தோம்.

கல்லூரி முடித்து எனக்கு வேலை கிடைத்த பிறகு, ஐ.டி ஊழியர்கள் சிலரும் என்னோடு இணைந்து இன்று அந்தக் குழந்தைகளுக்கு புரொஜக்டர், லேப்டாப் வழியே, டெக்னாலஜியை பயன்படுத்தியும் கல்வி புகட்டத் தொடங்கியுள்ளோம். அணுமின்நிலைய மருத்துவமனை உதவியுடன் மருத்துவ முகாம்களையும் அவ்வப்போது நடத்துகிறோம்.

மருத்துவர்களின் அறிவுரையில், குழந்தைகளுக்கான ஹெல்த் அண்ட் சானிடேஷனில் கவனம் செலுத்தி, சோப்பு, ஷேம்பு, பேஸ்ட், பிரஸ் அடங்கிய கிட் பேக்குகளையும் கொடுக்க ஆரம்பித்தோம். திறந்த வெளியில் அவர்கள் மலம் கழிப்பதை மாற்றி டாய்லெட் பாத்ரூம் கட்டிக் கொடுத்து அதனை குழந்தைகள் சுத்தமாகப் பயன்படுத்தும் பழக்கத்தையும் ஏற்படுத்திவருகிறோம். உடையின்றி அழுக்கேறி இருந்த குழந்தைகள் இன்று கல்வியோடு, சுகாதாரத்தையும் சேர்த்தே கற்றுக்கொள்கிறார்கள். இன்று நான்கு மாணவர்களை பத்தாவது எழுத வைத்திருக்கிறோம். சின்னதாகவே அவர்களிடம் மாற்றம் நடந்திருக்கிறது. போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது’’ என்றவாறு விடைபெற்றனர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post இருளர் குழந்தைகளுக்காக ஒற்றை குடிசைக்குள் இயங்கும் ‘அலை!’ appeared first on Dinakaran.

Tags : Saffron ,Serena ,
× RELATED மூக்கிரட்டை கீரையின் மருத்துவ குணங்கள்!