×

எப்போதும் கேட்கும் ஒலிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

விநோத நோய்… டினைடஸ்!

ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus). காதில் இடைவிடாத சத்தம், சீறுதல், சலசலப்பு, விசில் அல்லது பிற சத்தம் கேட்கும் பிரச்னை இது. டினைடஸ் உள்ள நபருக்கு ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் இந்த நிலை ஏற்படலாம். டினைடஸ் எதனால் ஏற்படுகிறது. அந்த நிலையுடன் தொடர்புடைய சிகிச்சை என்ன என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

காரணங்கள்

டினைடஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். பொதுவாக உரத்த சத்தத்தை நீண்ட நேரத்துக்குக் கேட்பதே இதற்கு முக்கியக் காரணம். காக்லியா எனப்படும் காதில் உள்ள சுழல் வடிவ உறுப்பில் ஒலி உணர்திறன் செல்களுக்கு நிரந்தர சேதத்தை இந்தத் தொடர் சத்தம் ஏற்படுத்துகிறது. டினைடஸ் உள்ள 90% பேருக்கு இந்த சத்தம் ஏற்படுத்தும் சேதம், கேட்கும் திறன் இழப்பை ஏற்படுத்துகிறது. தச்சர்கள், ராக் இசைக்கலைஞர்கள், விமானிகள், பழுதுபார்ப்பவர்கள் ஆகியோருக்கும், மர ஆலைகளில் ரம்பத்தால் அறுப்பவர்கள், துப்பாக்கிகள் போன்ற பொருட்களுடன் பணிபுரிபவர்களுக்கும் டினைடஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயதானவர்களில் காது கேளாமை தோன்றுவதற்கான அறிகுறிகளில் முதன்மையானது டினைடஸ்.

காது – சைனஸ் தொற்றுகள், பெண்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காதுகளின் உள்பகுதிகளில் ஏற்படும் மெனியர்ஸ் நோய், தலை – கழுத்தில் ஏற்படும் காயங்கள், தைராய்டு கோளாறுகள், மூளைக் கட்டிகள், மேலும் பலவற்றால் டினைடஸ் ஏற்படலாம்.

சிகிச்சை

காதில் இடைவிடாத சத்தம் கேட்டால் உடனே செய்யவேண்டியது, மருத்துவரைச் சென்று பார்ப்பதுதான். காதில் உள்ள பாதையை மெழுகு அடைத்திருப்பதால் ஒலி ஏற்படுகிறதா என்று மருத்துவர் முதலில் பரிசோதிப்பார். ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகளும் டினைடஸை ஏற்படுத்தும் என்பதால், முந்தைய மருத்துவ மற்றும் மருந்து வரலாற்றையும் மருத்துவர் பார்ப்பார். டினைடஸ் நிலைக்கு மருத்துவ வரலாறு எதுவும் காரணம் இல்லாதபோது காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணரை அணுகுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். நிலையின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவர் சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

சிகிச்சைகள்

காக்லியர் இம்ப்ளான்ட்: ஒரு நபருக்கு டினைடஸ் மற்றும் கடுமையான காது கேளாமை இருந்தால், இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சாதனம் டினைடஸை மறைக்க உதவுகிறது மற்றும் வெளிப்புற ஒலியை காதுக்குள் கொண்டுவருகிறது. மேலும் டினைடஸால் பாதிக்கப்பட்ட நபர் கேட்பதற்கு உதவுகிறது.கவுன்சலிங்: டினைடஸ் தனக்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்ட ஒரு நபர், எப்போதும் சிக்கல்களை எதிர்கொள்வார். இந்த நேரத்தில் கவுன்சலிங் மிகவும் பயனளிக்கும். குழு சிகிச்சையும் கவுன்சலிங்கும் நோயாளிகள் நெருக்கமாவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துகின்றன. கவுன்சலிங் அமர்வுகளின் போது, ​​டினைடஸ் உள்ளவர்கள் இடைவிடாது கேட்கும் சத்தத்தை தவிர்க்கவும், இரவில் நிம்மதியாகத் தூங்குவதற்கும் வழிகளைக் கண்டறிய முடிந்துள்ளது.

ஒலித் தடுப்பான்: ஒலித் தடுப்பான் என்பவை காதுகளுக்குப் பின்னால் அணியும் சாதனம். இது குறைந்த அலைவரிசை சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. காதில் ஏற்படும் சத்தத்தை இது தடுக்கிறது. ஒரு நபர் டினைடஸுடன் வாழ இது உதவுகிறது.

ஒலியைத் தூண்டுதல்: டினைடஸ் உள்ள நபர்கள் எளிதாகப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் இது. இது மூளையின் நரம்பியல் சுற்றுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அத்துடன் டினைடஸை நிலைப்படுத்துகிறது.

டினைடஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் குழப்பமான உணர்ச்சிகள், மனக்கிளர்ச்சியான எண்ணங்களை எதிர்கொள்ளலாம். எனவே, ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம். சில சமயங்களில் இடைவிடாத சத்தம் ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளைத் தடுக்கலாம். அவர்களுக்கு சரியான சிகிச்சையும் சுற்றியிருப்பவர்களின் ஆதரவும் அவசியம் தேவைப்படுகிறது. டினைடஸ் ஒரு விநோதமான நோய் என்பதால் உறவினர்கள், நண்பர்களுக்கு இது கேலிக்குரியதாகத் தோன்றும். ஆனால், பாதிக்கப்பட்டவரின் கோணத்திலிருந்து இதனை நோக்கி அவர்களுக்கு ஆதரவாகவும் அரவணைப்பாகவும் இருக்க வேண்டும். இது அவர்களுக்கு உளவியல்ரீதியான பலத்தைக் கொடுத்து டினைடஸ் பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான தீர்வு காண உதவியாக இருக்கும்.

The post எப்போதும் கேட்கும் ஒலிகள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dinakaran ,
× RELATED திறமை இருந்தால் வேலை நிச்சயம்!