×

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவர் தமிழக வாலிபரா?

 

புதுச்சேரி: புதுவையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவர் தமிழக வாலிபரா? என்பது தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. புதுச்சேரி வாணரப்பேட்டை ரயில்வேகேட் அருகே நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அமர்ந்து கொண்டிருந்தார். இரவு 7.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மெமு ரயில் புறப்பட்டபோது, ரயில்கேட் அருகே அமர்ந்திருந்த அந்த வாலிபர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்து ஒதியஞ்சாலை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் கையில் மணி என்று பச்சை குத்தியிருந்தார். அவரது மகள்களான மித்தல், பிரியா என்ற பெயர்களும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் இறந்த அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் எதுவும் தெரியாத நிலையில் புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த நபரின் புகைப்படத்தை புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மட்டுமின்றி பிற காவல் நிலையங்களுக்கு அனுப்பி இறந்த நபரை அடையாளம் காணும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ரயில்வே காவல்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அவர் அணிந்திருந்த சட்டை, பேண்ட் பாக்கெட்டில் எந்தவித அடையாள அட்டை எதுவும் இல்லாததால் இறந்த வாலிபரை அடையாளம் காண்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக ஒதியஞ்சாலை போலீசார் தெரிவித்தனர்.

The post ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தவர் தமிழக வாலிபரா? appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,NUDUWA ,Highway Police Department ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...