×

சிருங்கேரி தர்பார் நவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இந்தியத் திருநாட்டில் இறையருளை தம்மிடத்தே பெருமளவில் கொண்டு விளங்கும் தலங்கள் பற்பல உண்டு. அவற்றுள் முக்கியமான ஒரு தலம், கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வற்றாத ஜீவ நதியாக சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. அதுவே ‘ஸ்ரீரிஷ்ய சிருங்ககிரி’ என்றும் ‘சிருங்ககிரி’ என்றும் அழைக்கப்படும் ‘சிருங்கேரி’ திருத்தலம் ஆகும். ராமாயண காலந்தொட்டு சிருங்கேரி திருத்தலம் முனிவர்களின் தவத்தலமாக விளங்கி வருகிறது. தர்மத்தை நிலை நிறுத்த ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஆம்னாய பீடங்களில் தலையாயது சிருங்கேரியில் உள்ள ஸ்ரீசாரதா பீடமாகும்.

ஆதிசங்கரர் (கி.பி.788-820) முதலாக சாரதா பீடத்தை அலங்கரித்து வந்துள்ள அனைத்து குருநாதர்களும், துறவிலும் ஞானத்திலும் இணையில்லாத மகான்களாகவே திகழ்ந்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் காண்போர்உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அபாரமானதோர் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள தெய்வீக திருத்தலமே சிருங்கேரி.

1200 – வருடங்களுக்கு முன் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரால் பாரதத் திருநாட்டில் நான்கு பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பீடங்களுள் “தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்’’ முதன்மையானதாகும். இது ஸ்ரீசங்கரரையே முதற்குருவாகக் கொண்டு துவங்கிய ஸ்ரீசாரதா பீடத்தின் குருபரம்பரை அவருக்குப் பிறகும் இணையற்ற ஜீவன் முக்தர்களால் அலங்கரிக்கப்பட்டு வாழையடி வாழையாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை அலங்கரித்து வந்துள்ள ஜகத்குரு நாதர்கள் (36 குருமார்கள்) அனைவருமே தத்தம் பக்தர்களுக்கு அருளிச் செய்த அற்புதங்களையெல்லாம் சொற்களில் வடிப்பது கடினமே. ஸ்ரீஆதிசங்கரர் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை துவக்கிய காலத்தில், கயிலை வாழ் பரமேஸ்வரனிடமிருந்தே பெற்று வரப்பட்ட ஸ்படிகத்தினாலாகிய அழகிய சிறிய சந்திரமௌலீஸ்வர லிங்கத்தை பீடத்திற்கென அளித்து அதனை பீடத்தின் முக்கிய நித்ய ஆராதனை லிங்கமாக ஏற்படுத்தினார். 1200-வருடங்களும் மேலாக பீடத்து பூஜையில் இருந்து வரும். இந்த அபூர்வலிங்கத்திற்கு தினமும் இருமுறை அபிஷேக ஆராதனைகள் செய்து வரப்படுகின்றன. இரவு பூஜையை பீடத்து ஜகத் குருவே செய்கிறார். காணக் கண் கொள்ளாக் காட்சியான இந்த பூஜை அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளும் ஒன்றாகும்.

ஸ்ரீமடத்து வளாகத்துள் துங்கா நதியின் வடகரையில் உள்ள பசுமை பூத்துக் குலுங்கும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியே ஸ்ரீநரசிம்ம வனமாகும். இந்த நரசிம்ம வனத்துள் குரு நிவாஸத்தில் இருக்கும் ஸ்வர்ண மண்டபத்துடன் கூடிய ஸ்ரீசந்திரமெளஸீஸ்வரரது சந்நதியில் அவருடன் ஸ்ரீரத்ன கர்ப கணபதி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீவிஷ்ணு மற்றும் சக்திகளின் சாளக்கிராமங்கள் ஆகியவை வீற்றிருக்கின்றனர். தவிர, ஸ்ரீசந்திர மௌஸீஸ்வர மண்டபத்திற்கு இருபுறமும் ஸ்ரீசங்கரர் மற்றும் ஸ்ரீசாரதாம்பாள் மூர்த்தங்களும் உள்ளனர். பூர்வ குருநாதரின் பாதுகைகளும் இங்கு வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

1200 – ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஆதிசங்கரர் சிருங்கேரியில் ஸ்ரீசாரதாம்பாளை எழுந்தருளச் செய்த சமயம், அம்பாளுக்கு சந்தனத்தாலான விக்ரகத்தை செய்து வைத்தார். அதன் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அபிஷேக ஆராதனைகளால் சிதிலமாகிப் போன சந்தன விக்ரகத்துக்குப் பதிலாக தற்போதுள்ள தங்கத்தாலான விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார் 33-ஆம் குருவான `ஸ்ரீசச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி மகா சுவாமிகள்’.

தற்போதைய குருவான `ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள்’ அம்பாளின் மூலஸ்தானத்துக்கு தங்கத்தாலான நிலைப் படியையும் கதவுகளையும் உருவாக்கியதுடன் அம்பாளுக்கென்று தங்கத்தேர் ஒன்றையும் அர்ப்பணித்திருக்கிறார். ஆலயத்தினுள் இருக்கும் நவரங்க மகா மண்டபம் மிகத் தேர்ச்சியான சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பற்பல தூண்களைக் கொண்டது. இவற்றில் ராஜராஜேஸ்வரி முதலான கடவுளர்களின் பிம்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சர்வ அலங்காரங்களுடன் இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீசாரதாம்பாளைக் காண கண் கோடி வேண்டும். ஸ்ரீவித்யாசங்கரர், ஆலயம் கி.பி. 1338-ல் ஹரிஹர புக்த மன்னர்களால் பக்தியுடன் குரு சமர்ப் பணமாக சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 10-வது குருநாதரும் தலை சிறந்த யோசீஸ்வரருமான ஸ்ரீவித்யா சங்கர தீர்த்த மகாசுவாமிகளின் ஜீவ சமாதிக் குகையின் மேல்சாளுக்கிய மற்றும் திராவிட சிற்பக்கலைகளின் படி கட்டப்பட்ட மிக பிரம்மாண்டமான ஆலயம் ஸ்ரீவித்யாசங்கரர் ஆலயம். இது, சிருங்கேரி என்றாலே ஜனங்களின் நினைவுக்கு முதலில் வரும் ஆலயம். முழுவதும் கருங்கற்களாலேயே உருவான இதன் ஒவ்வொரு நிலையிலும் அதிநுட்பமான சிற்பக்கலையம்சங்கள் காணப்படுகின்றன.

இந்த ஆலயத்தின் உட்புறம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதான 12-தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணும் மேஷம் ரிஷபம் என ஒவ்வொரு ராசி வீதம் 12 ராசிகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் உதிக்கும் சூரியனின் முதல் கிரணமானது அன்றைக்கு என்ன ராசியோ அந்த ராசிக்குரிய தூணில் படுமாறு அமைந்திருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

இந்த ஆலயத்தின் சரித்திர தொன்மையையும், வியக்கவைக்கும் சிற்பக்கலையம்சங்களையும் கண்ட இந்திய தொல் பொருள் இலாகா இவ்வாலயத்தின் பராமரிப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது. இவை தவிர, ஸ்ரீசாரதா பீட வளாகத்தில் ஆதிசங்கரர் ஆலயம், ஸ்ரீமலையாள பிரம்மா சந்நதி, ஸ்ரீமலஹானி சுரேஸ்வரர் பரிகார மூர்த்திகள், ஸ்ரீசக்திகள் மற்றும் காவல் தெய்வங்கள், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசூரிய நாராயணர் ஆலயம் எனப் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அனைத்து ஆலயங்களிலும் தினந்தோறும் வேதநெறிகளுக்குட்பட்ட வகையில் பூஜைகள் நடைபெறுகின்றன. இறை நாட்டமுள்ள அன்பர்களுக்கு சிருங்கேரியின் அற்புத ஆலயங்கள் அமுதுண்டாற் போன்றதொரு அனுபவத்தை தரவல்லவை. இரம்மியமானதொரு இயற்கைச் சூழலில் வேத கோஷங்கள் காதுகளைக் குளிர்விக்க தூய்மையின் சிகரங்களாய் விளங்கும் அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை தரிசனம் செய்யும் போது உண்டாகும் பரவச நிலையை வார்த்தைகளில் வடிக்க இயலாது. இவைகலெல்லாம் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.

இங்கே வருடம் முழுவதும் திருவிழாக்களும் சிறப்பு வழிபாடுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஸ்ரீசாரதா பீடத்தின் பிரதான திருவிழா நவராத்திரி விழாவாகும். இவ்விழா பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொள்ள நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிருங்கேரிக்கு வருகை புரிகிறார்கள்.

ஸ்ரீசாரதா பீடத்தின் 12-ஆம் குருவான ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளிடம் விஜயநகர மன்னர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நவராத்திரியின் 9-தினங்களில் மட்டும் பீடத்தில் உள்ள ஆசாரிய சுவாமிகள், மன்னர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ராஜ குருக்கள் அணியும் ‘தர்பார்’ உடைகளை அணிந்து பக்தர்களுக்குக் காட்சி தருவது வழக்கம். இது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. நவராத்திரியின் அனைத்து நாட்களிலும் ஸ்ரீசாரதாம்பாள் விதவிதமான அலங்காரங்களுடன்பக்தர்களுக்கு தரிசனம் தருகிறாள்.

`தர்பார் நவராத்திரி’ என்றால் என்ன? சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு அரசு சின்னங்களும் தர்பாரும் எப்படி வந்தது! அது ஒரு சுவராஸ்யமான வரலாறு. கி.பி.1290 முதல் 1326 வரை வட இந்தியாவில் அரசு செலுத்திய கில்ஜி வம்சத்தினர் ஒருவர் பின் ஒருவராகத் தென்னாட்டின் மீது படையெடுத்தார்கள். தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம் என்ற பல ஊர்களைப் பிடித்தபின் மாலிக்கபூர் தெற்கு நோக்கி வந்தார். பாண்டிய அரசும் வீழ்ந்தது. இந்துக்கள் தங்கள் மதத்துக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தார்கள். முஸ்லிம் ஆட்சி தென்னாட்டில் பரவாமல் தடுத்து நிறுத்தும் திறமை வாய்ந்த இந்துப் பேரரசு ஒன்று ஏற்பட வேண்டும் என்றுகருதினார்கள்.

அப்போதுதான் இரண்டு மகா புருஷர்கள் தோன்றினார்கள். ஒருவர் ஹரிஹரர் மற்றவர் புக்கர். அப்போது ஹம்பி அருகேயுள்ள மதங்கபர்வதம் எனும் மலைப்பகுதியில் ஸ்ரீவித்யாரண்யர் என்ற மகான்தவம் செய்து வந்தார். ஹரிஹரரும், புக்கரும் மதங்கபர்வதத்சாரலிலே தவம் செய்து கொண்டிருந்த மகான் ஸ்ரீவித்யாரண்யரைச் சரண் அடைந்தார்கள். மகான் ஸ்ரீவித்யாரண்யர் அவர்களுக்கு அபயமளித்து துங்கபத்திரை நதிக்கரையில் ஸ்ரீசக்கர வடிவில் ஒரு நகரம் அமைக்கச் சொன்னார்.

அந்நகருக்கு ‘வித்யா நகரம்’ என்று பெயரிடச் சொன்னார்.பொருள் இல்லாமல் எப்படி பெருநகர் அமைப்பது? ஹரிஹரரும் புக்கரும் கலங்கினார்கள். ஸ்ரீவித்யாரண்யர், அம்பாள் புவனேஸ்வரி தேவியைப் பிரார்த்தித்து வேண்டினார். தேவியின் அருளால் அந்த இடத்திலேயே பொன் மாரி பொழிந்தது. செல்வம் குவிந்தது. ஹரிஹரர், புக்கர் இருவரும் அந்தப் பொற்குவியலைக் கொண்டுதான் `ஸ்ரீவித்யா நகரத்தை’ அமைத்தார்கள். பெரும் சேனை ஒன்று திரட்டினார்கள். அக்கம் பக்கம் இருந்த ராஜ்யங்கள் மீது படையெடுத்தார்கள். எங்கும் வெற்றி மேல் வெற்றி கிட்டியது. அந்த வெற்றியின் சின்னமாக ‘விஜயநகரம்’ என்ற இன்னொரு நகரையும் அமைத்தார்கள். அழகிய துங்கபத்திரை ஆற்றின் ஒருகரையில் வித்யா நகரமும், மற்றொரு கரையிலே விஜய நகரமும் அமைந்தன.

வித்யா நகரம் கி.பி.1336-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ஸ்தாபிக்கப்பட்டது. ஒன்பது வாசல்கள் தொண்ட அந்த நகரம் ஸ்ரீசக்கர வடிவில் அமைக்கப்பட்டது. இப்படி மகத்தான இந்து சாம்ராஜ்யம் ஒன்றை அமைத்து, அதன் அதிபதிகளாகி விட்ட ஹரிஹரரும் புக்கரும் அடுத்ததாகச் செய்த காரியம் தான் மிகவும் ஆச்சர்யம் அளிக்கக் கூடியது.அவர்கள் தங்களுடைய சத்திரம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் முதலியஎல்லாவற்றையும் தங்கள் குருவான மகான் ஸ்ரீவித்யாரண்ய முனிவரின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டு கைகட்டி வாய்பொத்தி அடக்கத்துடன் வணங்கி நின்றார்கள். மகான் ஸ்ரீவித்யாரண்யரிடம் பய பக்தி, நன்றி விஸ்வாசத்துடன் நடந்து கொண்டார்கள். அவருடைய பிரதிநிதி போலவே தங்களைப் பாவித்துக் கொண்டு நாட்டை ஆண்டார்கள்.

இந்த சமயத்தில்தான் சிருங்கேரி சாரதா பீடத்தின் பதினோராவது ஸ்ரீபாரதி கிருஷ்ண தீர்த்த சுவாமிகள், வித்யா சங்கருக்கு அழகியதொரு ஆலயம் எழுப்பிக் கொண்டிருந்தார். இந்த ஆலய கும்பாபிஷேகத்திற்குச் சில கிராமங்களைத் தானமாக வழங்கினார்கள், விஜயநகர அரசர்கள். காலப் போக்கில் சிறிது சிறிதாக ஏராளமான கிராமங்களை விஜயநகர மன்னர்கள் சிருங்கேரி பீடத்துக்குத் தானமாக வழங்கினார்கள். இப்படி சில குடில்களே நிரம்பிய தொரு குக் கிராமமாக இருந்த சிருங்கேரி நாளடைவில் பெரியதொரு சமஸ்தானமாகவே ஆகிவிட்டது. மத விஷயங்களில் ஒரு மன்னருக்குரிய சகல அந்தஸ்துகளையும் விஜயநகர சாம்ராஜ்யப் பேரரசர்கள் சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு வழங்கினார்கள். மன்னருக்குரிய சிவிகை, சத்ரம், சாமரம் முதலிய யாவும் வழங்கினார்கள்.

அதனால்தான் அன்று முதல் இன்று வரை சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள் ஒரு மன்னருக்குரிய சகல விருதுகளுடனும் விளங்குகிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்ற பின்னர் வந்த நாயக்க மன்னர்களும் ஏராளமான நிலங்களை சிருங்கேரி சமஸ்தானத்துக்கு இனாமாக வழங்கினார்கள் மடத்து நிலங்களை எல்லாம் `சர்வே’ செய்தார்கள். மைசூரை ஆண்ட ஹைதர் அலி, சிருங்கேரி பீடாதிபதிகளிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.

ஒரு சமயம் சிருங்கேரி ஆச்சாரியார் புனா நகருக்கு விஜயம் செய்தார். அப்போது அவருக்கு யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு, பட்டுப் பீதாம்பரங்கள் முதலியனவும், பத்தாயிரத்து ஐநூறு ரூபாயும் காணிக்கையாக அளித்தார் ஹைதர் அலி. அவருக்குப் பின் திப்புசுல்தான் ஆண்ட போது சிருங்கேரி பீடாதிபதிக்கு பக்தியுடன் பல உதவிகள் செய்தார். பீடாதிபதிக்கு, திப்பு சுல்தான் எழுதிய 21-கடிதங்கள் இன்றும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சிருங்கேரி பீடத்திடம் திப்புக்கு இருந்த விஸ்வாசத்தையும், குரு பக்தியையும் அவற்றில் காணலாம்.திப்பு சுல்தானுக்குப் பிறகு மூன்றாவது கிருஷ்ண ராஜ உடையார் மைசூர் மன்னர் ஆனார். அவர் காலம் முதல், மைசூர் ராஜ்யத்தின் கடைசி மன்னரும் சென்னை கவர்னராயிருந்த வருமாகிய ஸ்ரீஜய சாமராஜவுடையார் வரை எல்லோரும் சிருங்கேரி மகா சந்நிதானத்தின் பால் கொண்டிருந்த பக்தி அளவிட முடியாது.

விஜய நகர, புக்க மகாராஜாவின் புதல்வன் ஹரிஹரன் 32-வது பீடாதிபதி வித்யாரண்யரை தன் குருவாகவே கருதினான். அரசவம்ச விருதுகளை எல்லாம் ஆச்சார்ய திருவடியில் சமர்ப்பித்தவன் இவனே! தங்க பல்லக்கு, வெண்கொடை, சங்கு சக்கரங்கள், சங்கம், பேரி, சாமரங்கள், பகலில் தீவட்டி கொண்டு வந்து கௌரவம் அளித்து ராஜாவாகஆக்கிவிட்டவன் இவன். ஆச்சார்யாரோ அத்தனையையும் தன் குருவான ‘வித்யாசங்கரரின்’ பாதுகைகளுக்கு அர்ப்பணித்துவிட்டு ஏற்றுக் கொண்டார். அவையே இன்றும் நீடிக்கின்றன. வித்யாரண்யர் காலத்திலிருந்துதான் சிருங்கேரி ஒரு ஜாகீராக உருவாயிற்று. சிருங்கேரியைச் சுற்றி ஏழு மைல் விஸ்தீரணத்திற்கு சாரதா பீடமே மேலதிகாரம் பெற்றது. இன்றும் மடத்தின் முத்திரையில் ‘வித்யா சங்கர்’ என்ற வாசகமே காணப்படுகிறது.

கி.பி. 1346-ல் ஜாகீராகும் முதல் உத்தரவை விஜயநகர அரசர்கள் பிறப்பித்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இது நீடித்தது. கி.பி.1856-ல் சிருங்கேரி மாநகராகவும் மாநகராட்சியும் மாறியது.பீடத்தின் ஜகத்குருக்கள் தர்மபிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளவே தங்களது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆஸ்திக ஜனங்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையிலும் அனைத்து விதமான செயல்களும் ஜக்தகுருவின் மேற்பார்வையில் செய்யப்படுகின்றன.

எனவேதான் பல அரசர்கள் சிருங்கேரி பீடத்தைப் போற்றினார்கள். ‘சிருங்கேரி பீடத்தைப் போற்றும் விதமாக’ அஷ்ட பல்லக்கு ‘ஏறிச் செல்லும் கௌரவம் சிருங்கேரி மடத்துக்கு மட்டும்தான்.’ என்று உத்திரவிட்டது மைசூர் அரசு. ‘‘தர்ம ஸ்தாபனம் செய்ய மகாபட் சர்க்கார் அனங்கி பரி விக்லாசாரிய மூவார்கள் மகாசுவாமி சிருங்கேரி அவர்கள் க்ஷேத்ர யாத்திரை வருகிறார். அது சமயம் அஷ்ட பல்லக்கு, பஞ்ச கலசம், சுவேத சாமரம், மகர தோரணம், பகலில் தீபெட்டி, ஐந்து கலசத்துடன் வெள்ளி அம்பாரி ஆகியவை இவர்களுக்கு ஏற்பட்ட தனி ராஜ சின்னங்கள், மகா பிருது தாவளி இவைகளுடன் வருகிறார்.

எல்லா இந்துக்களும் மதசம்பிரதாயப்படி பூஜை, காணிக்கை முதலியவை செலுத்தி குரு சொல் படி நடக்க வேண்டும்!’’ என்று உத்தரவிட்டார் ஹைதராபாத் நிஜாம் அரசர். இப்படி நாடெங்கும் ஆட்சி புரிந்த மன்னர்கள் சிருங்கேரி சமஸ்தானத்தைப் பெரிதும் போற்றி வளர்த்தனர். ஒரு ராஜாங்கமாகவும், சமஸ்தானமாகவும் விளங்கிய சிருங்கேரி சங்கர மடத்தில் வருடந்தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக அங்குள்ளதர்பார் மண்டபத்தில் நடைபெறுகிறது. சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி விழாவின் போது சிறப்புக்கு அணி கூட்டுவது, அங்கு இரவுப் பூஜைக்குப் பின்னர் நடைபெறும் தர்பார்தான்.

‘சங்கர கிருபா’ விடுதிக்கு எதிரே ஏராளமான பக்தர்கள் கூடியிருக்கிறார்கள். ஜகத்குரு மகாசுவாமிகள் தர்பாருக்கான ராஜகுரு அலங்காரத்தில் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சற்று நேரத்தில் நாதசுரம் வாசிக்கப்படுகிறது.மகாசுவாமிகள் மகாராஜாவைப் போல் ராஜரிஷியாக சர்வ அலங்காரத்தோடு வெளியே வந்தார். அவர் அணிந்திருந்த மணிக் கிரீடமும், பளபளத்த ஜரிகை அங்கியும் ஜொலிக்கிறது. கழுத்திலே பெரிய ஆபரணம்; கையிலே ருத்ராட்ச மாலை. விரல்களிலே பெரிய பெரிய மோதிரங்கள் தங்கம் இழைத்த பாதகுறடுகள். வண்ணப்பட்டுக் குடையும் வெள்ளிக் கம்புகளும், தங்கத்தண்டுகளும், வெண்சாமரங்களும் பக்த கோடிகளும் புடைசூழ சுவாமிகள் ராஜ நடையில் கம்பீரத்தோற்றத்தோடு சாரதா கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்குதான் தர்பார் நடைபெறப்போகிறது.

வெள்ளித் தேர் ஒன்றில் ஸ்ரீசாரதாம்பிகை எழுந்தருளி இருந்தாள். அதன் எதிரில் வந்து நின்றார் சுவாமிகள் அம்பாளுக்கு தீபாராதனை ஆயிற்று. மண்டபம் முழுவதும் பக்தி உணர்வு சூழ்ந்தது. இருவர் இழுக்க, வெள்ளித் தேர் நகர்ந்தது. அம்பிகைக்கு முதுகைக் காட்டாமல், சுவாமிகள் பின் புறமாக அடி மேல் அடி எடுத்து வைத்து, தேருக்கு முன் நடந்து வருகிறார். இதோ, மேள வாத்தியங்கள் முழங்குகின்றன ‘ஸாம் பராக்’ என்று குரல் எழுப்பிக் கொண்டு முன்னே வருகிறார் கட்டியக்காரர். மக்கள் எழுந்து வணங்குகிறார்கள். பூச்சக்கரக் குடையின் கீழ் ஜகத்குரு வருகிறார். வந்து கருவறைக்கு நேரே, அம்பானை நோக்கியபடி போடப்பட்டிருந்த வெள்ளி சிம்மாசனத்தில் வந்து அமர்ந்தார்.

தர்பார் தொடங்கியது. சுவாமிகள் ஆடாமல் அசையாமல், பேசாமல், புன்முறுவல் பூக்காமல் மூலவிக்ரகமாக சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். எதிர் மேடையில் ஒருவர் தேவி பாகவதம் முதல் அத்தியாயத்தைப் பாராயணம் செய்து, தீபாராதனை காட்டிய போது சுவாமிகள் எழுந்து நின்றார். பின்னர், நான் மறைகளும் ஓதப்பட்டன. பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் அச்சில் போட்ட பஞ்சாங்கம் இல்லை. எனவே தினமும் அன்றைய திதி, வாரம், நட்சத்திரம், யோகம் முதலியவற்றை அரச சபையில் கூறுவார்கள். தினமும் இப்படி நல்ல நேரங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். இறுதியாக ஒரு வித்வான் வீணைவாசிக்கிறார்.

கட்டியக்காரர் கட்டியம் கூற மீண்டும். வாத்தியங்கள் ஒலிக்கின்றன. பீடாதிபதி எழுந்து செல்கிறார். இத்துடன் தர்பார் கலைகிறது. இதுவே நவராத்திரியின் போது சிருங்கேரி ஜகத்குரு அளிக்கும் தர்பார் தரிசனம். இந்த நவராத்திரி காலத்தில் அம்பாள் கொலுவீற்றிருக்கிறாள். அம்பாளின் பிரதி நிதியாகத் தான் அப்போது இன்னொரு சிம்மாசனத்தில் சிருங்கேரி ஆசார்ய சுவாமிகளும் கொலுவீற்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருக்கும் கிரீடம் அம்பாளின் திருவடிகளே. அவரது ஆபரணங்கள் அம்பாளிடமிருந்து எடுத்து அணிந்து கொண்டவை. உடை தேவியிடமிருந்து பெற்றது.

எனவே அவளிடமிருந்து பெற்று அவள் பிரதி நிதியாக அவளுக்காக அரசு செலுத்துகிறார் என்பதே இந்த தர்பாருக்குப் பொருள். இந்து அரசர்களுக்கு சத்ரம், சாமரம், சிம்மாசனம், குடை இவையெல்லாம் உரிய அங்கங்கள். இவற்றுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசு செலுத்துவது பண்டைய வழக்கம். அரசர் வரும்போது கட்டியம் கூறுவது பண்டைய மரபு. இந்த மரபை ஒட்டியே இப்போது சிருங்கேரி ஜகத்குரு வரும் போதும் ‘ஸாம் பராக்’ என்று கூறுகிறார்கள். ‘ஸாம் பராக்’ என்றால் ‘சுவாமி வருகிறார்எச்சரிக்கை’ என்று பொருள்.

தர்பாரிலே பொன்னாடை ஆபரணங்களுடன் இவ்வளவு கோலாகலமாக ஜகத்குரு வீற்றிருந்தாலும் அந்த ஆடை ஆபரணங்களுக்கு உள்ளே அவரது காவி உடையைக் காணலாம். எனவே உள்ளே துறவி; வெளியே அரசர் கோலம். சிருங்கேரி திருத்தலம் கர்நாடக மாநிலம் சிக்மகளுர் மாவட்டத்தில் கடூர் தாலுக்காவில் இருக்கிறது. சென்னை, பெங்களூர், மைசூர், மங்களூர், உடுப்பி, ஷிமோகா போன்ற நகரங்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post சிருங்கேரி தர்பார் நவராத்திரி appeared first on Dinakaran.

Tags : Sringeri Durbar Navratri ,Lord ,
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்