×

அமித்ஷாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு பாஜ-தெலுங்குதேசம் கூட்டணி உறுதி?

திருமலை: டெல்லியில் அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். இதையடுத்து பாஜ – தெலுங்குதேசம் கூட்டணி உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு தற்போது திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் நாரா லோகேஷ் மீதும் அமராவதி உள்வட்ட சாலையை அமைக்க திட்டமிட்டதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லோகேஷ் நேற்று டெல்லிக்கு சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தங்களை பழி வாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குகளை பதிந்து தனது தந்தை சந்திரபாபுவை கைது செய்துள்ளதாகவும், தன்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அப்போது அமித்ஷா, சந்திரபாபு மற்றும் லோகேஷ் மீது போடப்பட்ட வழக்கின் விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ், தனது தந்தையை 73 வயதில் சிறையில் அடைத்து மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளதாக அமித்ஷாவிடம் முறையிட்டுள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்து லோகேஷ், இன்று காலை ஆந்திரா திரும்பியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆந்திர பாஜக தலைவரும், சந்திரபாபுவின் மைத்துனியுமான புரந்தரேஸ்வரி, தெலங்கானா பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷண்ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.அமித்ஷா – நாரா லோகேஷ் சந்திப்பையடுத்து பாரதிய ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

தெலங்கானா சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30ம்தேதி நடக்கிறது. அங்கு ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
எனவே சந்திரபாபுவின் தெலுங்கு தேச கட்சியோடு கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் அடுத்த ஆண்டு ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா கட்சியோடு பாஜக கூட்டணி அமைத்து களம் காண முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நாராலோகேஷ், தெலங்கானா-பாஜக கூட்டணி அமைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பது குறித்தும் தொகுதிகள் பிரித்து கொள்வது தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

The post அமித்ஷாவுடன் சந்திரபாபு மகன் சந்திப்பு பாஜ-தெலுங்குதேசம் கூட்டணி உறுதி? appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Amit Shah ,BJP-Telugudesam alliance ,Tirumala ,Chandrababu Naidu ,Nara Lokesh ,Delhi ,Dinakaran ,
× RELATED இஷான், ஷ்ரேயாஸ் விவகாரம்: கங்குலி எதிர்ப்பு