×

‘ராட்சஷி’ ஜோதிகாவாக வலம் வரும் தலைமை ஆசிரியை!

நன்றி குங்குமம் தோழி

‘‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது…’’ அந்த மாற்றத்தை எதில் கொண்டு வருகிறோம்..? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன..? யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். சாதாரண அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று, தன்னால் இயன்ற சிறு சிறு மாற்றங்கள் மூலம் பெற்றோர்களின் நம்பிக்கையை பெற்றார். இவர் வருகையால் பள்ளியின் மாணவிகள் சேர்க்கை 2 சதவிகிதம் உயர்ந்தது. அரசுப் பள்ளியின் தரத்தை தனியார் பள்ளி அளவிற்கு உயர்த்தினார். சொல்லப்போனால் ‘ராட்சஷி’ திரைப்படத்தில் ஜோதிகாவின் உண்மையான உருவமாக வலம் வருகிறார் மதுரை ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சசித்ரா மலைச்சாமி.

‘‘2020ல் பணி மாற்றம் பெற்றுதான் நான் மதுரை ஒத்தக்கடை அரசுப் பள்ளிக்கு வந்தேன். பள்ளியின் அருகில் ஒரு மதுபான கடை இருந்தது. அது மாணவர்களுக்கு பெரிய இடைஞ்சலாகவே இருந்தது. வார விடுமுறை முடிந்து பள்ளிக்குள் நுழைந்தால், வழி எங்கும் மதுபான பாட்டில்களாக இருக்கும். பள்ளியின்அருகிலிருக்கும் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து புகார் அளித்து, சொந்த செலவில் பள்ளியின் நுழைவாயிலையே மாற்றினேன். அதன் பிறகு பள்ளிச்சுவர்கள்.

அதில் மதுரையின் சிறப்பினை எடுத்துக்காட்டும் சின்னங்களை ஓவியங்களாக வரைந்தேன். இது பள்ளியின் தோற்றத்தினையே மாற்றியது. இது முழுக்க முழுக்க பெண்களுக்கான அரசுப் பள்ளி என்பதால், அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளியில் அமைத்தேன். இங்கு வரும் மாணவிகள் பெரும்பாலும் பக்கத்தில் இருக்கும் கிராமங்களில் இருந்து வருவாங்க. அதற்கான போக்குவரத்து கிடையாது. இதனால் அவர்கள் தினமும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வரமுடியாமல் போனது. அதை சீர் செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பேசி பள்ளிக்காக மட்டும் மூன்று சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கோம்.

நான் இந்த பள்ளிக்கு வந்து சில மாதங்களிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஆன்லைன் முறையில்தான் வகுப்புகள் நடைபெற்று வந்தது. குறிப்பிட்ட நேரம்தான் வகுப்பு என்பதால் மற்ற நேரங்களில் குழந்தைகள் செல்போனில் விளையாடுகிறார்கள் என்று பெற்றோர்கள் கூறினார்கள். அதற்கான மாற்று வழி கேட்ட போது, எனக்கு இந்த யோசனை வந்தது. நாம சிறுவயதில் விடுமுறை நாட்களில் பரமபதம், தாயம், பல்லாங்குழி, நேர்கோடு, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம்.

அதை மாணவிகளுக்கு அறிமுகம் செய்யலாம்னு எண்ணம் ஏற்பட்டது. மேலும் இந்த விளையாட்டினை அறைக்குள் அடைத்துவிடாமல், இயற்கை சூழலில் சொல்லிக் கொடுக்க திட்டமிட்டேன். பள்ளி மைதானத்தின் ஒரு பக்கத்தில் மரத்துக்கு கீழ இந்த விளையாட்டு அனைத்தையும் ஒரு மேடைபோல் அமைத்து அதில் விளையாட்டினை அப்படியே பதிச்சு வச்சிட்டோம். கொரோனா முடிஞ்சி பசங்க பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இந்த விளையாட்டு, இயற்கை அமைப்பு இதெல்லாம் பார்த்து இதன் மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

பொதுவாக பள்ளிகளில் விளையாட்டு மற்றும் நூலகத்திற்கு என தனியா ஒரு வகுப்புகள் குடுத்தாலும், சில ஆசிரியர்கள் அவங்களுடைய பாடத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக அந்த வகுப்பினை எடுத்துக் கொள்வார்கள். இதனால் குழந்தைகள் விளையாட போகாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது போல் இருக்கும். அதனால் விளையாட்டோ அல்லது நூலக வகுப்பு நேரத்தில் பசங்களை பாதியாக பிரித்து அவர்களில் ஒரு பகுதி விளையாடவும், மற்றவர்களை நூலகத்திற்கும் அனுப்புவதால், அவர்களால் இரண்டும் பெற முடியும். சிலருக்கு இதெல்லாம் என்ன விளையாட்டு.

இதெல்லாம் எப்படி பள்ளியில் விளையாடுறாங்கன்னு கேள்வி வரும். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். இந்த விளையாட்டில் வாழ்க்கை சார்ந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, பரமபதம் விளையாடும் போது, வாழ்க்கையில் எத்தனை முறை கீழே விழுந்தாலும், ஏணி மூலம் மறுபடியும் முன்னேறி மேல வரலாம். இயற்கையான முறையில் விளையாடுவதால், அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

என்னைப் பொறுத்தவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு என்பது, மின்விசிறி கீழ் சேரில் உட்கார்ந்து கொண்டு இருப்பது அல்ல. என்னுடைய பள்ளியை நான் எவ்வாறு சிறப்பாக மாற்ற வேண்டும் என்பதுதான். குறிப்பாக நல்ல பாதுகாப்பான சிறப்பான கல்வி கொடுத்ததால், பெற்றோர்களுக்கு அது பிடிச்சு போனது. இந்த மாற்றத்தினால், மாணவிகளுடைய சேர்க்கை விகிதமும் அதிகரிச்சது. இது எனக்கு கிடைச்ச வெற்றியாதான் நான் பார்த்தேன்.

எங்களைப் பார்த்து மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களும் அவர்களின் பள்ளியில் மாற்றத்தினை கொண்டு வந்தாங்க. எங்க பள்ளி ஒரு எடுத்துக்காட்டு மாடலாக மாறியதால், அதற்காக நிறைய விருதுகளும் எனக்கு கிடைச்சது. ஆனால், பெற்றோர்களின் ஆதரவும் நம்பிக்கையும் தான் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய விருதாக நான் நினைக்கிறேன்’’ என்றவர் பள்ளியில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பின் பல தடைகளை சந்தித்துள்ளார்.

‘‘ஒரு அரசாங்க கட்டிடத்தை நமக்கு ஏற்ப மாதிரி அமைப்பது அவ்வளவு எளிது கிடையாது. பல கஷ்டங்களை கடந்து வரணும். நாங்களும் அதை சந்திச்சோம். அதுவும் அந்த மதுபான கடையை அகற்றி சுற்றுச்சுவரை மாற்றி அமைக்க முற்பட்ட போது, எனக்கு மிரட்டல் கடிதங்கள் எல்லாம் வந்தது. அந்த சமயத்தில் என் கணவர் எனக்கு முழு ஆதரவா இருந்தார். மேலும் உயர் நீதிமன்றத்தில் இருந்து பள்ளியை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பார்வையிட்டு இந்த மாற்றத்திற்கு பெரிதும் உதவி செய்தாங்க.

பொதுவா பசங்க விளையாடும் போது, அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இப்போது இவர்கள் அனைவரும் செல்போனில் விளையாடுவதால், கண்களுக்கும், கைகளுக்கும் அசைவுகள் கொடுப்பதில்லை. அதே சமயம் வெளியே விளையாடும் போது, அவங்களுடைய அனைத்து புலன்களோட செயல்திறனும் அதிகரிக்கும். இதன் மூலம் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அதிகரிப்பது மட்டுமல்லாது, மனரீதியாகவும் அவர்களின் செயல் திறன் அதிகரிக்கும். மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, எங்க பள்ளி மாணவிகளின் பெயர் மற்றும் லட்சியங்களை மரக்கன்றுகளில் பதித்து பள்ளியின் சாலையோரத்தில் நட்டு வருகிறோம்’’ என்றார் சசித்ரா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ‘ராட்சஷி’ ஜோதிகாவாக வலம் வரும் தலைமை ஆசிரியை! appeared first on Dinakaran.

Tags : Ratchashi ,Jyotika ,Dinakaran ,
× RELATED ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!!