சென்னை: மோடி அரசை காப்பாற்ற ‘பி’ டீமாக அதிமுக செயல்படுகிறது என்றும், காவிரி விவகாரத்தில் அடிப்படை புரிதல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை திறக்க வலியுறுத்த வேண்டும் என்பதையும் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே தீர்மானத்தில் உள்ளதையே மீண்டும் சேர்த்து தீர்மானத்தை திருத்த வலியுறுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம், காவிரி விவகாரத்தில் பந்து ஒன்றிய பாஜ அரசு பக்கம் திரும்பி விடக்கூடாது, கர்நாடகம், தமிழ்நாடு, உச்ச நீதிமன்றம் என்றே சுழல வேண்டும் என்கிற பாஜவினரின் சிந்தனையைத்தான் எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படுத்தினார்.
சட்டப்பேரவையில் பாஜவின் ‘பி’ டீமாக மோடி அரசை பாதுகாப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறையின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதி 7ல் சப்தமே இல்லாமல் திருத்தங்கள் கொண்டுவந்து மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் விவகாரத்தை கையாள்வதில் கூடுதல் அதிகாரங்களை ஜல்சக்தி துறைக்கு வழங்கியது மோடி அரசு. அதன் பின்னர் ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இது தமிழ்நாடு விவசாயிகளின் ஜீவாதாரத்தை வேரோடு வெட்டி எறியும் செயல் என மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்தார். ஆனால் அப்போது அடிமை அதிமுக அரசு, ஒன்றிய அரசு நிர்வாக வசதிக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கம் அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடி அரசை காப்பாற்ற ‘பி’ டீமாக அதிமுக செயல்படுகிறது காவிரி விவகாரத்தில் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.
