- இருக்கை
- பஜாஜ் ஆடம் எஸ்
- கோவா
- பி முத்துக்தாய்
- வானதி சினிவாசன்
- அண்ணாமலைக்கு எதிரான கூட்டணி
- ஈடுபடுங்கள்
- கோவை
கோவை: சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் அதிக சீட் மற்றும் அமைச்சரவையில் இடம் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜ தலைவர்கள் அழுத்தம் தந்து வருகின்றனர்.
குறிப்பாக, பாஜவிற்கு கணிசமாக வாக்கு வங்கியுள்ள கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை பெற கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், அதிக இடங்களை தாரை வார்க்க எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் என 5 தொகுதிகளை கேட்கும் பாஜ, 3 தொகுதிகளை கட்டாயம் பெற வேண்டும் என கறார் காட்டி வருகிறது.
கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் தோல்வி பயம் காரணமாக, கோவை வடக்கு தொகுதிக்கு மாற திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப கோவை வடக்கு தொகுதியில் கவனம் செலுத்தி கட்சி பணிகளை அவர் செய்து வருகிறார். இதேபோல கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வி, நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் தோல்வி என தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வரும் அண்ணாமலை, தனது பவரை காட்ட எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் தனது ஆதரவாளரும், தொழிலதிபருமான பாலாஜி உத்தமராமசாமியின் பணம் மற்றும் அதிமுக வாக்கு வங்கியை பயன்படுத்தி வெற்றி பெற கணக்கு போட்டு வருகிறார்.
ஆனால் மற்ற பாஜ கோஷ்டிகள் மற்றும் அதிமுக தலைவர்கள், அண்ணாமலையை வெற்றி பெற செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. கிணத்துக்கடவு தொகுதியை முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் வசந்த ராஜனும், மேட்டுப்பாளையம் தொகுதியை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனும் பெற கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் பாஜவினருக்கு ஒரு சீட்டுக்கு மேல் தர முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு விருப்பம் இல்லையாம். வானதி சீனிவாசனுக்கு ஒரு தொகுதி, அண்ணாமலைக்கு ஒரு தொகுதி என அதிகபட்சம் 2 தொகுதிகள் மட்டுமே தர வேண்டும் என்பது எஸ்.பி. வேலுமணியின் கணக்காக உள்ளது. ஆனால் கூடுதல் தொகுதிகள் கேட்டு பாஜவினர் நெருக்கடி தந்து வருவதாலும், பாஜவினருக்கு தரும் தொகுதிகளில் திமுக எளிதாக வென்று விடும் என்பதாலும் எஸ்.பி.வேலுமணி அப்செட்டில் இருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பல தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற உளவுத்துறை ரிப்போர்ட்டால் கலக்கம் அடைந்துள்ளாராம். சமீபத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, ‘‘திமுகவை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. நமது எடப்பாடி கோட்டையில், வேலுமணி கோட்டையில் ஓட்டை போட முடியாது என சொல்வார்கள்.
ஆனால் சம்மட்டி எடுத்து வைத்து தயாராக இருக்கிறார்கள். கவனமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்’’ என அவர் பேசியது தோல்வி பயத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக அதிமுகவினர் இடையே பேச்சு எழுந்துள்ளது. இதனால் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் தேர்தல் பணிகளில் வேலுமணி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.
