×

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: சர்வதேச அளவில் ஒரு பேரல் விலை 5% வரை அதிகரிப்பு

எருசலேம்: இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய திடீர் தாக்குதலால் போர் தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பல நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அங்கு அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் போர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் இஸ்ரேலுக்கு அருகே நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். ஹமாஸ் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூயார்க் நகரத்தில் பலர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனி, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

உக்ரைனில் கீவ் பகுதியில் உள்ள விளம்பர பலகைகளில் இஸ்ரேல் கொடி ஒளிர வைக்கப்பட்டது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவித்துள்ள ஜெலன்ஸ் கி இஸ்ரேலுடன் துணை நிற்பதாக தெரிவித்தார். பாலஸ்தீனிய மக்கள் மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறி நியூயார்க் நகரத்தில் பலர் பேரணியில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு அமெரிக்க அளித்து வரும் உதவிகளை உடனே அவர்கள் நிறுத்திக்கொள்ள வலியுறுத்தினர்.

இதேபோல பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவிக்காததை எதிர்த்து சிகாகோவில் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவிலேயே பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக சிகாகோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காசாவுக்கு ஆதரவாக ஈரான், ஆப்கானிஸ்தான், லெபனான் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்துள்ளன.

இஸ்ரேல் மற்றும் காசாவில் தொடர் தாக்குதல் நடந்து வரும் நிலையில் அங்கிருந்து தங்கள் குடிமக்களை மீட்கும் நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை 5% வரை உயர்ந்து ஒரு பீப்பாய் விலை 88 டாலராக உள்ளது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கத்தின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: சர்வதேச அளவில் ஒரு பேரல் விலை 5% வரை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Jerusalem ,Pakistan ,Iran ,Palestinians ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த...