சென்னை: அரியலூர் மாவட்டம் நாட்டு வெடி கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்; அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் என்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
The post நாட்டு வெடி கடையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்! appeared first on Dinakaran.
