×

தொன்மையான அக்னி வழிபாடு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர் என்று எளிதாக எல்லோராலும் கூறப்படும் வாக்கியம் உண்டு. ஆனால், அவர்கள் வழிபட்டது இயற்கையை மட்டுமல்ல! இயற்கைக்குள் பொதிந்திருக்கும் அதன் மூலத்தையும் சேர்த்து அறிந்து உணர்ந்து அதை வழிபட்டனர். அந்த இயற்கைக்குள் ஆளுமை செலுத்தும் விஷயங்களே தன்னையும் ஆளுகின்றன என்று உணர்ந்திருந்தனர். அதற்கான மாபெரும் தத்துவ தரிசனத்தை அவர்கள் வேதங்களிலிருந்து பெற்றனர்.

வேதங்கள் பிரபஞ்சம் படைப்பின் தோற்றுவாயை மிக அழகாக சுட்டிக் காட்டுகின்றன. ஆகாசாத் வாயுஹு வாயோர் அக்னிஹி அக்னேராபஹ அத்யஹ ப்ருத்விஹி ப்ருத்வியா ஓஷதயஹ ஓஷதீப்யோ அன்னம் அன்னாத் புருஷஹ … ஐம்பூதங்களான நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் பற்றிச் சொல்லும் வேதபாடம் இது.

ஆகாயத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவினின்று அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும், நிலத்திலிருந்து தாவர ஜங்கமங்களும், உயிர்களும் உண்டாகின்றன. சரி, இந்த ஐம்பூதங்களும் எப்படி உருவாயின? ஐம்பூதங்களுக்கு முன்புசிவசக்தி சொரூபத்தையே பிரம்மமாக சொல்கிறார்கள். இப்போது சிவசக்தி சொரூபமாக இருப்பதில் சலனம் உண்டாகிறது. இந்த சலனத்தையே சிவன் பார்வதியின் கண்ணை பொத்துவது, தாய விளையாட்டில் தோற்பது என்று இந்து மரபில் சிறு கதையாக சொல்லப்பட்டபடி வருகிறது.

இந்தக் கண மூடிய மற்றும் விளையாட்டில் தோற்ற கதையானது சலனத்தையே காட்டுவதாக உள்ளது. பிரம்மத்தில் ஏற்பட்ட சலனம் காரணமாக சக்தி பிரிந்தது. ஆனால், இவையாவுமே தோற்ற மாத்திரமே ஆகும். அந்தப் பரம்பொருளினின்றும் பிரிந்தாற்போல் தோன்றும்போதுதான் ஐந்து பூதங்களும் இருப்பதுபோன்று ஒரு பிரமை உண்டாகிறது. அதாவது அந்த இருப்பை சக்தியான நீ அறிகிறாய். இதன்படி பஞ்சபூதங்களும் சக்தியான படைப்பே ஆகும். இந்த ஐம்பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்றாக எப்படி வருகின்றது என்பதையே மேற்கண்ட வேதக் குறிப்பு தெரிவிக்கிறது. அந்த ஐம்பூதங்களில் ஒன்றுதான் அக்னி என்பதாகும்.

இந்து ஞான மரபில் நிறைய வழிபாடுகள் இடம்பெறுகின்றன. இது மனித மனத்தின் குணம், உள்ளார்ந்த பழக்க வழக்கங்கள், பழங்குடிகளின் வாழ்க்கை அமைப்பு இதனோடு கலந்த வைதீகச் சடங்குகள் என்று நிறைய வழிபாடுகள் உள்ளன. ஆனால், எல்லா வழிபாட்டையும் தொகுத்து காண்போமாயின் ஐம்பூதங்களையும் ஏதாவதொரு ரீதியில் அவரவர்களுக்குத் தகுந்தவாறு வழிபட்டுக் கொண்டிருப்பதை காணலாம். அதில் ஒன்றே அக்னி வழிபாடு.

அக்னி என்கிற நெருப்பு என்பது நாம் நேரடியாக நம்மால் கண்களால், தொட்டுணர்வதால் காணும் அளவு மட்டுமல்ல! அது அதனுடைய உருவம் என்று கொள்ளலாம். வேதங்களில் அக்னி குறித்து நிறைய இடங்களில் வருகிறது. இது நாம் வெளியே காணும் அக்னி மட்டுமல்ல. அது நம்மால் பார்க்க முடியாததுமான அருவ அக்னியாகும். அது நம் குடலில், அறிவில், கோபத்தில், சூரியனில், மின்னலில், எரியும் எண்ணத்தில் என்று சூட்சுமமான அக்னியே ஆகும். ஒன்றை எரித்து வேறொன்றாக மாற்றும் சக்தியையும் அக்னியாக்கினார்கள். இந்த அக்னி சிறு தீக்குச்சியின் நுனியிலிருந்து நமக்குத் தெரிந்து புறப்படுகின்றது. வைதீகச் சடங்குகளில் மந்திர ரூபத்தில் இடப்பட்ட உணவை அக்னியே தேவர்களுக்குண்டானதை அளிக்கிறது.

அறிவின் ரூபமாக,அறிவின் இயக்கமாக எண்ணத்தில், புத்தியில் அக்னி மையங்கொண்டு இயங்கி அறிவையே தோற்றுவித்தும் அழித்தும் செய்கின்றது. சிருஷ்டிப்பதில் காமாக்னியாக சகல ஜீவர்களுக்குள்ளும் உறைந்து படைப்பை பெருக்குகிறது. இப்படி ஸ்தூலமான பருவுடல் கொண்ட சகல விஷயங்களை அழிப்பதிலிருந்து சூட்சுமமான விஷயங்கள் வரை அக்னி செயல்படுகிறது. எனவேதான் அக்னியின் நீட்சியாக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை வைத்து அவனது மனைவியாக உருவகித்து அக்னியின் பத்தினியை ஸ்வாஹா என்று அழைத்தனர்.

யோகியினுள் மூலாக்னி எனப்படும் மூலாதாரத்திலுள்ள அக்னி யோகாக்னியாக செயல்பட்டு ஏழு சக்கரங்களுக்குள்ளும் சென்று சகஸ்ராரத்தை அடைவிக்கிறது. அக்னி தவத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அலையும் எண்ணங்கள் ஒரு முகப்போடு இருக்கும்போது முகமே சுடராக ஒளிர்கின்றது. அதனாலேயே தீந்தவம் என்றனர். நாம் பார்க்கும் அக்னி தொட்டுணரக்கூடிய நிலையில் இருப்பது. ஆனால், அக்னிக்கு சூட்சும விருத்தி உண்டு. அந்த அக்னியே நம்மை ஆளுவதும் ஆகும். சுடும் நெருப்பு மட்டுமல்லாது சுடாத அக்னியும் உண்டு.

உண்மையில் அக்னிதான் எதனுடைய இருப்பையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. இருப்பிற்கான அத்தாட்சியே அக்னி ஆகும். ஜடப் பொருட்கள் தமக்குள் இருக்கும் ஒளிரும் தன்மையால் மட்டுமே தம்மை அடையாளப் படுத்திக் கொள்கின்றன. இதற்குக் காரணம் அந்தப் பொருட்களுக்குள் தாது ரூபமாக இருக்கும் அக்னியின் வெளிப்பாடே ஆகும். உபநிஷதங்களில் அக்னியை இவ்வாறாகவும் கூறியிருக்கிறது.

ஈசனின் திருக்கண்ணே சூரியன் எனும் அக்னியே ஆகும். சூரியன் எனும் அக்னி இருப்பதால்தான் உலகம் என்கிற பிரபஞ்சம் தெரிகிறது. அதுபோல நம்மால் பார்த்தல் எனும் விஷயம் நடைபெறுவதற்குக் நமக்குள் இருக்கும் சூரியனே காரணமாகவும் இருக்கிறார். அதாவது சூரியனை ஒளிர வைக்கும் அதே அக்னியே நம்மையும் வெளியுலகை காணச் செய்கிறார். அதற்கு கண்கள் ஒரு கருவி மாத்திரமே ஆகும். கண்களால் ஏற்படும் பார்த்தல் எனும் செயலால் மனமே இயங்குகிறது.

வெளியுலகில் பார்க்கப்படும் பொருட்கள் மனதில் பிம்பங்களாகவும், எண்ணங்களாகவும், இன்னும் பல்வேறு படிமங்களாகவும் தங்குகின்றன. எனவே, மனம் விஷயங்களை புஜிப்பதற்குண்டான அடிப்படையை பார்வை தீர்மானிக்கிறது. எனவே, மனதை பாதிக்கும், வளர்க்கும், ஒடுக்கச் செய்யும் அவஸ்தைகளுக்கெல்லாம் முக்கிய பங்கை அக்னிதான் இங்கு ஆற்றுகிறது. அக்னியே வாக்கு ரூபமும் ஆகும். அதாவது வாக்கின் சத்திய ரூபமே அக்னியாகும்.

உபநிஷதத்தில் சத்தியகாம ஜாபாலன் ஒவ்வொரு வித்யையும் பயிலும்போது யாக குண்டத்திலிருந்த அக்னியும், அக்னிக்கு அருகேயிருந்து காளை, அன்னப் பறவை, நீர்ப்பறவை போன்றவையெல்லாம் உபதேசிக்கிறது. இவையெல்லாமுமே மிகவும் தத்துவ ரூபத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. அக்னியே பிரம்ம வித்தையை உபதேசிப்பதாக இருக்கும். அக்னியே வாக்கு. அக்னியே அனைத்தையும் அறியச் செய்வது.

இந்த அக்னிக்கெல்லாம் மூலமே அருணாசல ஆத்ம மூலாக்னி. அதனாலேயே அக்னி இயங்குகிறது. இது சக்தியின் விளையாட்டாகும். அவள் ஐம்பூதங்களும் அதனின்று பிரிந்த பல்லாயிரம் ஸ்தூல, சூட்சும, காரண, காரிய வஸ்துக்களைக் கொண்டு விளையாடுகிறாள். அது பிரபஞ்சத்தின் பிரமாண்டமான லீலை. இந்த சக்தியே சிதம்பரத்தில் பிரபஞ்சத்தையே தனது நடனமாகக் காட்டி நிற்கும் நடராஜரைக் கண்டு பிரமிக்கிறாள்.

ஆனால், பஞ்ச பூதங்களில் அக்னித் தலமான திருவண்ணா மலையில் சிவம் அசலமாக இருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. சக்தியின் வடிவங்களான அக்னியின் தலமுமாகவும், நினைத்தாலே முக்தியருளும் மோட்ச ஸ்தலமாகவும் விளங்குகின்றது. ஆனால், இங்கோ சக்தியே அசல உருவில் இருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள். எனவே, இது அக்னித் தலமாக இருந்தாலும் அக்னியானது இங்கு பஞ்ச பூதங்களின் ஒரு அம்சமாக தன்னை காட்டாது ஞானாக்னியாகவே அருணாசல மலையில் ஒளிர்கிறது. ஐம்பூதங்களில் மற்ற தலங்களை விடவும் சிறப்பாக கூறப்பட்டதற்குக் காரணமே இங்கு சக்தி என்கிற அருணா அசலமாகியிருக்கும் ஈசனோடு கலந்து விடுகிறாள்.

புராண காலக் கதையூடாக உள்ளஅக்னிக்குரிய கோயிலாக விளங்குவதே திருப்புகலூர் தலமாகும். அவற்றைப்பற்றியும் பார்ப்போமா! அக்னி தேவனின் கர்வம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம், தன் தகப்பனானவாயுவின் எதிரேயே தொடை தட்டிப் பேசிக்கொண்டிருந்தான். ‘‘நான் ஒருவனே என்னை எதிர்த்தாரை சுட்டுப் பொசுக்குகிறேன். நான் தாக்கத்-தொடங்கினால் அது மலையானாலும் சுக்குநூறாகிவிடும். நான் சுட்டெரித்த தூய்மையான திருநீற்றையே பெருமான் நெற்றியில் அணிகிறார்’’ என்று கர்வத்தோடு பேசினான்.

‘‘அக்னியே, என்னிடமிருந்துதானே நீ தோன்றினாய். ஆனால், என்னிடம் இல்லாத ஒரு தீய குணம் உன்னிடம் வந்துவிட்டதே. உயர்வு, தாழ்வு இல்லாது எல்லாவற்றையும் உண்கிறாய். அதில் கர்வம் வேறு.இப்போது தந்தை என்றும் பாராமல் என்னோடு வாதாடுகிறாய். உன் ஆற்றல் ஒழிந்து மங்கிப் போகட்டும். எல்லாவற்றையும் உண்டு ருசிக்கும் உனக்கு பெரும் பசி எடுக்கட்டும்’’ என்று சாபமிட்டார்.தன் பலம் குன்றி, தன் பசிஅதிகரித்துக்கொண்டே போவதை அக்னி தேவன் உணர்ந்தான். அவசரமாக தன் ஆச்சார்யனான, குரு பகவானின் காலில் விழுந்தான். சாப நீக்கத்துக்கான வழி கேட்டு சோர்வாய்சரிந்தான்.

குரு கண் திறந்தார். பிரகாசம் மங்கிய அக்னியைப் பார்த்தவாறு பேசஆரம்பித்தார்.‘‘தகப்பன் சாபம் தகாதது. இப்படியே இருந்தால் அது முற்றிலும் உன்னை தகர்த்துவிடும்.சாபம் தீரஒரேவழிதான் உண்டு. சோழநாட்டிலே புன்னாகவனம் என்ற தலம் இருக்கிறது. அங்கு சென்று நாற்புறமும் அகழியைத் தோண்டி சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் ஈசனைபூஜை செய்து வா. எந்தச் சாபமும் உன்னை நெருங்காது’’ என்றுஆசிர்வதித்தார்.

அக்னி மெல்ல சுடர் விட்டு எரிய ஆரம்பித்தான். குருவின் குளுமையான வார்த்தைகளால் அவன் புத்தி பிரகாசமாய் ஒளிர்ந்தது.மெல்ல அங்கிருந்து நகர்ந்து புன்னாகவனம் எனும் புகலூரில் சுடராய் தவழ்ந்து தரையிறங்கினான். எம்பெருமான் சுயம்பு மூர்த்தியாய், பெருஞ்சுடராய் தகதகத்துக்கொண்டிருந்தார். அந்த தீஞ்சுடருக்கு முன் தன்னை ஒரு தீப்பொறியாய் அக்னி உணர்ந்தான்.அகிலத்தையே ஆளும் ஆண்டவன் இவனேஎன்றுஅவன் திருவடியில் தன் சுடர் நிழலைபதித்தான். அத்தலத்திலேயேதங்கிதவம் செய்தான். தன் அகங்காரம் கரைந்து பெரும்பழமாய் கனிந்தான்.

சுயம்பு மூர்த்தியான சிவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். தன் காலடியில் கனன்று கிடந்தவனை கனிவோடு பார்த்தார். அக்னி அந்த பேரொளியைக் கண்டு பரிதவித்தான். தான் பெரும் பாவம் செய்து விட்டதாய் குரல் உடைந்து பேசினான். ‘‘ஆனால், என் தந்தையின் சாபம் தனயனான என்னை தாக்குமே என்று பயந்தேன்.உங்களை தரிசித்த உடனேயே என் சித்தம் தெளிவானதை உணர்கிறேன்’’.அவன் நாதழுதழுக்க பேசுவதை சிவன், செவிசாய்த்துக் கேட்கஆரம்பித்தார்.‘‘நான் எதைத் தீண்டினாலும் என் புனிதம் போகாது இனி காக்க வேண்டும். இங்கு வழிபடும் மக்களை தாங்கள்பதம் சேர்த்தருள வேண்டும். நான் என்றென்றும் தகப்பனுக்கு அடங்கிய பிள்ளையாய் இருத்தல் வேண்டும்’’ எனவரம் கோரினான்.

ஈசன் அக்னியைஅணைத்துக் கொண்டார். அவன் அகத்தை கொழுந்து விட்டு எரியச் செய்தார். ஒரு கணத்தில் அவன் முழு சக்தியையும்பிரபஞ்சம் முழுவதும் பொருத்தினார்.அக்னி பகவானும் ஈசனின் எதிரே கைகூப்பி அமர்ந்தார். எந்நாளும் அந்த தலத்திலேயே தங்கும் பெரும் பேறு பெற்றார்.இன்று வரையிலும் வாயுவின் காலடித் தடம் பற்றியே அக்னியின் போக்கு இருக்கிறது. வாயு இல்லாத இடத்தில் அக்னி என்றுமே இருக்க முடியாது. அதற்கு மாபெரும் சாட்சியே திருப்புகலூர் தலம்.அக்னி பகவானுக்கு அருள்புரிந்ததால் அக்னீஸ்வரர் எனப் பேர் பெற்றார்.

வாணாசூரன் எனும் அசுரன் தேவர்களை துன்புறுத்திக் கொண்டேயிருந்தான். வாணாசூரனின் இத்தலத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவர் அப்பர் சுவாமிகள். இத்தலத்தில்தான் ஆன்மிகத்தின் நிறைவு நிலையான அத்வைத அனுபவத்தை எய்தினார். ஈசனோடு ஈசனாய்தனக்கும் இறைவனுக்கும் எவ்வித பேதமுமில்லாத நிலையை அடைந்தார். தான் வேறு இறைவன் வேறு என்ற பிரிவு உடைந்து ஏகமாய் ஈசனோடு கலந்தார். அப்பர் சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்த தலம் இதுவேயாகும். எனவே, இது முக்தி க்ஷேத்திரமாகும். இங்கு அப்பர் தனி சந்நதியில் வீற்றிருக்கிறார்.

இக்கோயிலைச் சுற்றியுள்ள அகழி பார்ப்பதற்கு அழகானது. இக்கோயிலின் அற்புதம் இது. வானுயர்ந்த கோபுரங்களும், நீண்ட பிராகாரங்களும் தொன்மையின் இனிமையை பறைசாற்றுகின்றன. இத்தலத்து மூலவரின் திருநாமம் அக்னீஸ்வரர். இவருக்கு கோணபிரான், சரண்யபுரீஸ்வரர், புன்னாகவனநாதர் என்றுபல பெயர்கள் உண்டு. அம்பாள் கருந்தாழ்குழலி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நதி, ராஜகோபுரம் தாண்டி தனியே உள்ளது. இவ்வூர் மக்கள் எப்போதும், ‘எல்லாம் கருந்தாள் அனுக்கிரகம்’ எனஅடிக்கடி சொல்வது வழக்கம். கருந்தாழ் குழலாள் கருணையை நம்பியே இவர்கள் வாழ்கிறார்கள்.

பிறவி என்பது பிரிக்கப்பிரிக்க பின்னிக்கொள்ளும் சிலந்திப்பூச்சி. இன்பமும், துன்பமும் மாறிமாறி வீசும் சுழற்காற்று. மாட்டிக்கொண்டால் மணலில் சொருகும் நீர்ச்சுழல். சுந்தரமூர்த்தி நாயனார் சிவப்பணியின் செலவுக்கு பொன், பணம் வேண்டும் என்று திருப்புகலூரை அடைந்தார். அங்கேயேவழிபட்டு தங்கினார். ஆலயத் திருப்பணிக்காக வந்திருந்த செங்கல் சிலவற்றைதலையணையாக்கிப் படுத்தார்.

விடியலில் விழித்தெழுந்து பார்த்தபோது செங்கல் அனைத்தும், பசும்பொன்கட்டிகளாக மாறியிருப்பது கண்டு வியந்தார். அப்போதே ஈசன்மீது பதிகங்கள் பாடினார். அதனால்தான் ஈசனைவாஸ்து பகவானாகவும் நினைத்து மக்கள் வழிபடுகிறார்கள் என இவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள். சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஈசனை வேண்டிக்கொள்ள, விரைவிலேயே வீடு கட்டிவிடுகிறார்களாம். இத்தலம் நாகை மாவட்டத்தில், நன்னிலத்திலிருந்து கிழக்கே 6 கி. மீ. தொலைவில் உள்ளது.

தொகுப்பு: கிருஷ்ணா

The post தொன்மையான அக்னி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Kumkum Anmikam ,Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!