×

மோடி, அமித்ஷா, நட்டா நிபந்தனை விதிக்கவில்லை அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது முறிந்தது தான்: விரைவில் புதிய கூட்டணி அறிவிப்பு

* எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சேலம்: அண்ணாமலையின் கருத்துக்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது. அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது முறிந்தது தான். மோடி, அமித்ஷா, நட்டா எங்களுக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்று சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் இடைப்பாடி சட்டமன்றத் தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.2 கோடி 72 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகள், மற்றும் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்ைத என்று பாஜ நிர்வாகிகள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி முறிந்தது என்பது முறிந்தது தான். இது குறித்து சமீபத்தில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் கூட, உங்களுக்கு நான் தெளிவாக பதில் அளித்தேன். ஆனாலும் நீங்கள் வதந்திகளை நம்பி கேள்வி கேட்பது ஏன் என்று தெரியவில்லை.

கடந்த 25ம்தேதி அதிமுக தலைமை கழகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது. இந்த கூட்டணி விலகலால் வாக்குகள் சிதற வாய்ப்பில்லை. மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது தேர்தலில் தெரியவரும். பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அறிக்கை வெளியிட்டது பற்றி எங்களுக்குத் தெரியாது. அவரை கேட்டால்தான் தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு குறைவாக 10 இடங்களிலும், ஒரு லட்சம் வாக்குகளுக்கு குறைவாக 7 இடங்களிலும் தோல்வியடைந்துள்ளோம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது தொகுதி மக்களின் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காகத்தான். தென்னை விவசாயிகளின் நலன் கருதி பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை வைப்பதற்காக சென்றுள்ளார். ஒன்றிய அமைச்சரை சந்தித்தாலே கூட்டணி என்று ஆகிவிடாது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் பழிவாங்கும் நடவடிக்கை இருக்குமா, சின்னத்தை முடக்குவார்களா என கேட்கிறீர்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சின்னத்தை பெற்றுள்ளோம். பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் எங்களுக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அவர்கள் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கூட்டணி குறித்தும், ஒதுக்கப்பட வேண்டிய சீட்டுகள் குறித்தும் நாங்கள் எந்த பேச்சும் நடத்தவில்லை. கூட்டணியில் இருந்த காலத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் தான் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக புதிய கூட்டணி அமைக்கும். இந்த கூட்டணியில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

* விஜயபாஸ்கர் சந்திப்பு

பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்களும், பல்வேறு தரப்பினரும் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புதுக்கோட்டை விஜயபாஸ்கர், நேற்று எடப்பாடியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர், அவருடன் வந்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். அவருடன் வந்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ேக.எம்.ஷெரீப் எடப்பாடியை சந்தித்து பேசினார்.

The post மோடி, அமித்ஷா, நட்டா நிபந்தனை விதிக்கவில்லை அதிமுக-பாஜ கூட்டணி முறிந்தது முறிந்தது தான்: விரைவில் புதிய கூட்டணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Natta ,AIADMK- ,BJP alliance ,Edappadi Palaniswami ,Scheme ,Salem ,Annamalai ,AIADMK-BJ alliance ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…