×

உபா சட்டத்தில் கைதான நியூஸ்கிளிக் ஆசிரியருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

புதுடெல்லி: சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டில் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் நியூஸ்கிளிக் செய்தி இணையதள ஆசிரியர் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை (எச்ஆர்) தலைவர் ஆகியோரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என 46 பேரின் வீடுகளில் டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

சீனாவுக்கு ஆதரவான மற்றும் சாதகமான செய்திகளை வெளியிட நியூஸ்கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக பணம் பெற்றதாகவும், அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் உத்தரவுபடி செயல்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் கீழ், தீவிரவாத எதிர்ப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் சிறப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீசார், ஆசிரியரும், நிறுவனருமான பிரபிர் புர்கயஸ்தா மற்றும் எச்ஆர் மேலாளர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கைதான இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ‘டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம் குறித்து விசாரித்த அதிகாரிகள்’

இதற்கிடையே, நியூஸ்கிளிக் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் எங்களுக்கு எந்த எப்ஐஆரும் தராமல், குற்றச்சாட்டு என்ன என்பது கூட தெரிவிக்காமலும் சோதனை நடத்தினர். அலுவலகத்திற்கு சீல் வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை ஒன்றிய அரசு மதிக்கவில்லை. 2021ம் ஆண்டிலிருந்தே எங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவோ எந்த விசாரணை அமைப்பும் எங்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. குற்றப்பத்திரிகை கூட அவர்களால் தாக்கல் செய்ய முடியவில்லை. எங்கள் நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை. சீனாவுக்கு ஆதரவாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செய்தியையும் நாங்கள் வெளியிடவில்லை. ஆனால் விசாரணையில் எங்களிடம் டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகள் குறித்தே கேட்டனர். எனவே ஒட்டுமொத்த நடவடிக்கையும் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது’ என கூறப்பட்டுள்ளது.

The post உபா சட்டத்தில் கைதான நியூஸ்கிளிக் ஆசிரியருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Newsclick ,New Delhi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...