×

தலைமுறைகள் தாண்டிய சந்திப்பும் கொண்டாட்டங்களும்!

நன்றி குங்குமம் தோழி

வயது வித்தியாசமின்றி அந்த மினி ஹாலில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் கூடி இருந்தார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் அதீத உற்சாகம் ததும்பி வழிந்தது. அந்த மண்டபத்தில் ஒரு வயதுக் குழந்தை முதல் எழுபதுகளைத் தாண்டிய முதியவர்கள் வரை அவரவர் தலைமுறையை அடையாளம் காட்டி, தாத்தா, பாட்டி, அண்ணா, அக்கா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உவகை பொங்க அழைத்து அரவணைத்துக் கொண்டிருந்தனர். இல்லத்தில் நடைபெறும் விழா என்று விசாரித்தால், அது ஏழு தலைமுறைகளை ஒன்றாக சேர்த்த குடும்ப விழா என்று சொல்லி அசரவைத்தனர்.

இன்றைய அவசர வாழ்க்கையில் நாம் தொலைத்தது அதிகம். அதில் முக்கியமானது உறவுகள். நமக்கு முந்தைய தாத்தா பாட்டியின் பெயர்களைக் கேட்டாலே கேட்டு சொல்கிறேன் என்று சொல்லும் நிலையில்தான் உள்ளனர் இன்றைய இளம் தலைமுறையினர். பல சொந்தங்களின் வீட்டு விழாவிற்கும் செல்லும் நேரமின்றி வாட்ஸ் அப் வாழ்த்துகளை தந்து வரும்
இந்தக் காலத்தில் இப்படி ஒரு விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர் சேலத்தினை சேர்ந்த குடும்பத்தினர்.

விழாவின் ஒருங்கிணைப்பாளர்களான 5வது தலைமுறைப் பேரன்களிடம் பேசினோம். ‘‘இது எங்க குடும்பத்தில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சி. எத்தனை காலங்கள் ஆனாலும் நமது முன்னோரின் பெருமைகளைக் கேட்பதில் ஒரு பெருமை வரும். அவர்களின் பெருமைகளை எங்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவினை நாங்க நடத்தினோம். தற்போது எந்த ஒரு நிகழ்வு என்றாலும் எல்லாரும் சந்தித்து அதை விழாவாக கொண்டாடுகிறார்கள். அலுவலகத்தில் பார்ட்டி முதல் பெண் நண்பர்கள் வரை இது போன்ற சந்திப்பு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல், எங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரு நாள் சந்திக்க விரும்பினோம்.

அது குறித்து கலந்து பேசினோம். பொதுவாக பரம்பரை என்றால் ஏழு தலைமுறையை குறிப்பிடுவார்கள். அதனால் நாங்க எங்களின் பாட்டன், பூட்டன், முப்பாட்டன்களின் வாரிசுகளைத் தேடத் துவங்கினோம் அந்த தேடுதலில் முதல் தலைமுறையான எங்க தாத்தா உத்தராசன் பற்றி அறிந்தோம். அவர் 1873ம் ஆண்டு வணிக வம்சத்தில் பிறந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் உள்ள மொரங்கம் எனும் கிராமத்தில் பிறந்து பிள்ளாநல்லூரில் வசித்துள்ளார்.

இவர் அந்நாளில் சின்ன வெங்காய வியாபாரம் செய்து வந்ததாகவும் அப்போது பெருகிய பெரியம்மை தொற்றுக்கு மருந்தாக ஆங்கிலேயரே இவரிடமிருந்து வெள்ளி நாணயங்களுக்கு சின்ன வெங்காயத்தை வாங்கிச் சென்று உள்ளனர். எங்களின் பாட்டி காவேரி அம்மாள், சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள். இவர்களின் வாரிசுகள் பின்னாளில் பல இடங்களுக்கு சென்று விட்டனர்.

இதையெல்லாம் தெரிந்து அவரின் வாரிசுகளை கண்டுபிடித்தோம். இப்படியே தொடர்ந்தது தான் இந்த நிகழ்வின் ஆரம்பம். அதன் பிறகு தாத்தா வழி சொந்தங்கள் குறித்து இரு மாதங்கள் முன்பே விசாரிக்க ஆரம்பித்தோம். அவர்கள் குறித்து விவரம் தெரிந்த பெரியவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொண்டு ஒரு வாட்ஸ் அப் குழு அமைத்தோம். அதில் நாங்கள் எதிர்பார்த்தபடி தாத்தாவழி சொந்தங்கள் இணைய ஆரம்பித்தார்கள்.

முதலில் நாங்கள் துவங்கும் போது இதன் வீரியம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கு வந்து உறவுகளைப் பார்த்தபோதுதான் இந்த விழாவின் உன்னதம் எங்க அனைவருக்கும் புரிந்தது. இனி வரும் ஆண்டுகளிலும் இதே போல் ஒன்று கூடி மகிழலாம் என்ற உறுதி மொழியுடன் அவரவர் இருப்பிடத்திற்கு சென்றபோது கோடிப் பணம் தந்தாலும் கிடைக்காத மனநிறைவு கிடைத்தது. எல்லாவற்றையும் விட எங்கள் பிள்ளைகள் அவர்களின் சொந்தங்களை தெரிந்து கொண்டனர். இனி இந்த தொடர்புகள் வரும் காலங்களிலும் தொடரும். இது எங்க அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஏழு தலைமுறையினர் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்த சந்தோஷம் அடுத்த ஆண்டு நடைபெறும் இந்த குடும்ப விழா வரை நீடிக்கும்’’ என்கின்றனர்.

அரசுப்பணி முதல் தகவல் தொழில்நுட்பம் வரை பல்வேறு பணிகளில் இருந்த இவர்கள் ஒருங்கிணைந்து தாத்தாவின் ஊரான பிள்ளாநல்லூரில் உள்ள குலதெய்வக் கோவில் மண்டபத்தில்தான் இந்த சந்திப்பினை நிகழ்த்தியுள்ளனர். சேலம், மும்பை, கேரளா, பெங்களூரு, தெலுங்கானா என பரவி இருந்த குடும்பத்தை சேர்ந்த 400 பேர் இந்த குடும்ப விழாவில் கலந்து கொண்டனர்.

தொகுப்பு: சேலம் சுபா

The post தலைமுறைகள் தாண்டிய சந்திப்பும் கொண்டாட்டங்களும்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi ,Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!