சென்னை: ‘‘குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சாமானிய மக்கள் பயணிக்கக்கூடிய பொதிகை, பல்லவன், நெல்லை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது அல்லது முற்றிலும் சிதைப்பது எனும் ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகவே மக்கள் இதனை பார்க்கின்றனர். குறைக்கப்பட வேண்டியது வந்தே பாரத் ரயிலின் பயணக்கட்டணமே தவிர, சாமானிய மக்கள் பயணிக்கின்ற மற்ற ரயில்களின் வேகத்தை அல்ல என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடெங்கும் வருகிற நவம்பர் 4, 5, 18, 19 தேதிகளில் நடைபெற உள்ளன.
முறையான வாக்காளர் பட்டியலே சரியான தேர்தல் களத்தை தீர்மானிக்கும். எனவே, திமுக இளைஞரணி நிர்வாகிகள்-தம்பிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறுகிற முகாம்களில் பங்கேற்று, பாக முகவர்களுடன் இணைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்-திருத்தம் செய்தல், இறந்தோர் பெயரை நீக்குதல் உள்ளிட்டப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கே மிக முக்கியமான 2024 மக்களவைத் தேர்தலில், இந்தியாவின் வெற்றிக்கான பணியை வாக்களார் பட்டியல் சரி பார்ப்பில் இருந்து தொடங்குவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
The post குறைக்கப்பட வேண்டியது ரயில்களின் வேகம் அல்ல வந்தே பாரத் கட்டணம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.