×

கொடுத்த நகையை திருப்பி கேட்டபோது பெண்ணை சரமாரியாக தாக்கிய தம்பதி: போலீசார் விசாரணை

 

திருவள்ளூர்: கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் பெண்ணை சரமாரியாக தாக்கிய தம்பதியிடம் கடம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் என்பவரது மனைவி சிவகாமி (50). இவரிடம், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ராஜேந்திரன் (49) மற்றும் அவரது மனைவி கவிதா (45) ஆகியோர் கடந்த 16.2.2020ல் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக அவசரத் தேவை என்று கூறி 6 சவரன் நகையை வாங்கியுள்ளனர். 2 வாரத்திற்குள் தருவதாகக் கூறியதால் நம்பிக்கையின் பேரில் சிவகாமியும் தனது நகைகளை கொடுத்துள்ளார். ஆனால், வாங்கிய நகையை திருப்பி தராமல் கடந்த 3 வருடங்களாக அந்த தம்பதியர் அலைக்கழித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகாமி நேரில் சென்று நகையை கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை கீழே தள்ளிவிட்ட தம்பதியர் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சிவகாமி, கடம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதில், நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்த 6 சவரன் நகையை திருப்பித் தராமல் அலைக்கழித்ததுடன், திருப்பி கேட்டதற்கு தன்னை தாக்கியதாகவும், ராஜேந்திரன் மற்றும் கவிதா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடுத்த நகையை திருப்பி கேட்டபோது பெண்ணை சரமாரியாக தாக்கிய தம்பதி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kadambatur ,
× RELATED திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி...