×

குமரி மாணவர் கொலை வழக்கு 11 மாதங்களுக்கு பிறகு காதலிக்கு ஜாமீன்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் (21). கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கும், குமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனியார் தங்கி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஷாரோன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 25ம் தேதி இறந்தார். தங்களது மகனுக்கு அவரது காதலி கிரீஷ்மா, ஜூசில் விஷம் கலந்து கொடுத்தது தான் மரணத்திற்கு காரணம் என்று ஷாரோனின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அக்டோபர் 14ம் தேதி கிரீஷ்மா பளுகலில் உள்ள தனது வீட்டில் வைத்து ஷாரோனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து கிரீஷ்மாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சிந்து மற்றும் தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி கிரீஷ்மா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் மனு மீது விசாரணை நடந்தது. இந்த நிலையில் நேற்று கிரீஷ்மாவுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரீஷ்மா, தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கிரீஷ்மா தவிர மற்ற இருவருக்கும் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 11 மாதங்களுக்கு பின்னர் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post குமரி மாணவர் கொலை வழக்கு 11 மாதங்களுக்கு பிறகு காதலிக்கு ஜாமீன்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Sharon ,Kerala ,Kannyakumari ,Naiyur, District ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...