கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ரூ.98 லட்ச மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்தின் பூமி பூஜை நடந்தது. கும்மிடிப்பூண்டி பஜாரில் 1967ம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகத்தின் கட்டிடத்திற்கு ஆத்துப்பாக்கம், நேமலூர், மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், புதுவாயில், ரத்தம் பேடு, தேர்வழி, பட்டுப்புள்ளி, ஐயர் கண்டிகை, பெத்திக்குப்பம், பெரிய ஓபாலாபுரம், குருவாட்டு சேரி, அயநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் தினந்தோறும் வந்து படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நூலகம் பழுதடைந்து காணப்படுகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் இங்கு புதிய நூலகம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜனிடம் நூலகத்துக்கு புதிய கட்டிடம் அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று இதற்காக சுமார் ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அதனைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்விற்கு பேரூராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர் தீபா முனுசாமி, கேசவன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் மஸ்தான், ஒப்பந்ததாரர் மகேந்திரன், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் பாஸ்கர், மாரிமுத்து, வார்டு செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகரத் தலைவர் பிரேம், வழக்கறிஞர் வேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தநிகழ்வில் நூலகர் தேவி, சுரேஷ்பாபு, கன்னிமாரா நூலகர் உமாராணி, ஜோதிபாபு, மோகனா, திருவள்ளூர் மாவட்ட இருப்பு சரிபார்ப்பு அலுவலர் பேனிக் பாண்டியன், குப்பன், ரவி, ஆசிரியர் பாலா, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post கும்மிடிப்பூண்டியில் புதிய நூலகம் கட்டும் பணி appeared first on Dinakaran.
