×

மானாமதுரை வைகையில் தூய்மைப்பணி

*அரசுடன் தன்னார்வலர்கள் பங்கேற்பு

மானாமதுரை : வைகை நதிக்கரை பகுதியில் நீர்நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டு அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வைகை நதிக்கரை பகுதியில் நேற்று நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவின் சார்பில் நடைபெற்ற தூய்மை பணி நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி வரவேற்றார்.

வைகை ஆற்றில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டு,மரக்கன்றுகளை நட்டு விழாவில் அமைச்சர் பங்கேற்று பேசியதாவது, முதலமைச்சர் உத்தரவின்படி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், மனித வாழ்வில் இன்றியமையாத குடிநீரினை எதிர்கால சந்ததியினருக்கு தங்கு தடையின்றி கிடைத்திடும் வகையிலும், அதற்கு அடிப்படையாக திகழ்கின்ற நீர் நிலைகளை பாதுகாப்பதற்கும் தமிழகம் முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், தேவைப்படும் நீர் நிலைகளை மறுசீரமைப்பு செய்திடல், பயன்பாடாற்ற நீர்நிலைகளை கண்டறிந்து மீட்டெடுத்தல், உரிய வகையிலான உரித்தான நீர் மேலான்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளல், மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளல், நீர் மாசடைவதை கண்டறிந்து அதனை தடுத்தல், நீர் நிலைகளின் பரப்புக்களை பாதுகாத்திடும் வண்ணம் பூங்காக்கள், கரைவேலிகள் அமைத்தல், மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நடக்கிறது.

மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நீர் நிலைகளை பாதுகாத்து நீர் இருப்பின் கொள்ளளவினை நிலை நிறுத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினால் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில், வைகை ஆறு பெரும்பங்கு வைக்கிறது. எனவே, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியினை வைகை ஆற்றில் இருந்தே தொடங்கிடும் பொருட்டு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்புவனம் பேரூராட்சி பகுதியிலுள்ள வைகை நதிக்கரையிலும், தொடர்ந்து இன்றைய தினம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வைகை நதிக்கரை பகுதியிலும் மாபெரும் தூய்மை பணியானது தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவியர்கள், இந்தோ திபெத் எல்லை காவல் படையினர், பொதுமக்கள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் இப்பணி சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து நீர் நிலைகளை தூய்மைப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துயிர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வரும் தண்ணீரினை மாசடையாமல் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு, கருத்தில் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி, தற்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதிகளை மாசடையாமல் பாதுகாத்திட வேண்டும்.

மேலும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நீர் நிலைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றிட ஆர்வமுள்ளவர்கள் தங்களது பங்களிப்பினை ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வைகை ஆற்று கரை பகுதியிலிருந்த அமலை செடிகள், பொதுமக்களால் ஆற்றில் விடப்பட்ட துணிகள், நெகிழி கழிவுகள் போன்றவைகளை, நதிக்கரையில் 700 மீட்டர் சுற்றளவில் தூய்மை படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்களுடன், நீர் நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவியர்கள், இந்தோ திபெத் எல்லை காவல் படையினர், பொதுமக்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டு, அதில் 2.6 டன் குப்பைகளும் சேகரிக்கப்பட்டது. அந்த அக்குப்பைகளை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுகாதார வாகனம் மற்றும் ஜே.சி.பி வாகனம் ஆகியவைகளைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி செயலர் கந்தசாமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர் செந்தில்குமார், மானாமதுரை நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் கல்லூரி மாணவியர்கள், இந்தோ திபெத் எல்லை காவல் படையினர், நீர் நிலை பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மானாமதுரை வைகையில் தூய்மைப்பணி appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Government of Manamadurai ,Waterways Protection Committee ,Vaigai River River Area ,Manamadurai Vaig ,Dinakaran ,
× RELATED மானாமதுரை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்