×

ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர்

கர்நாடக மாநிலத்தின் கடலோரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான விநாயகர் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, கர்நாடகா மாநிலம் உடுப்பி ஜில்லா கீழ் வரும் குந்தபுராவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹட்டியன் காடி கிராமத்தில் அமைந்துள்ளது. 7-8-ஆம் நூற்றாண்டில் துளு மன்னர்களால் கட்டப்பட்ட கோயில், பிற்காலத்தில் ஹோய் சாளா, கூனி கம்பளா ஆகிய மன்னர்கள் இந்த பகுதியை ஆண்டனர். அப்போது, அவர்கள் இந்த கிராமத்திற்கு வைத்த பெயர் கோஸ்டிபுரா. அன்று மன்னர்களின் தலை நகரம், இன்றோ கிராமம்!

`கோவிந்தராமயது வீரா’ என்ற முனிவர், இங்கு தவம் செய்துள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. கவிராமா என்பவர், சித்தி விநாயகர் மற்றும் ஊர் பற்றி நிறைய பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில், 1980-ல் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1997 – ஆம் ஆண்டிலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

இனி கோயிலுக்குள் செல்வோமா..?

போகும் வழியில், ஒரு அலங்கார ஆர்ச் நம்மை வரவேற்கிறது. 4 தூண்களைக் கொண்டு எழுந்துள்ள அதன் மையத்தில், மேலே மாடத்தில் விநாயகரை காணலாம்.

அதனை தாண்டி நடந்தால், கோயிலை அடையலாம். இரு தூண்கள் தாங்கிய எளிமையான நுழைவுவாயில். மேலே இருபுறமும் அன்னப்பறவைகளை காணலாம். மாடத்தில் விநாயகரை தரிசிக்கலாம். இவைகளை தாண்டிச் சென்றால் இருபுறமும் துவார பாலகர்களை சேவிக்கலாம். மேலும் நகர்ந்து சென்றால், விஸ்தாரமான அழகான முன்மண்டபம். அடுத்து கர்ப்பகிரகம். அதன் வெளிப்பக்கம் முழுவதும் வெள்ளிக் கவசம் ஜொலிக்கின்றன. உள்ளே எங்கும், எதிலும் வெள்ளிக் கவசம்தான்!

இத்தலத்தின் விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்திருந்து பக்தர்களுக்கு அருளிவருகிறார். 25 அடி உயரத்தில் கம்பீரமான இந்த பிள்ளையார், உண்மையில் நிற்கும் காட்சிதான் என்றாலும், அலங்காரத்தில், வெள்ளிக் கவசத்தால் அவரை உட்கார வைத்து விட்டனர்.

இந்த விநாயகர், வித்தியாசமானவர். விநாயகரின் தலையில் இருக்கும் ஜடாமுடியை, பின் புறமாக பிரித்துவிடப்பட்டுள்ளது! இதனை அலங்காரத்தின் போது, பூ கீரிடத்தினால் மறைத்துவிடப்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு முன் அர்ச்சகரிடம் கேட்டால், நமக்கு காட்டுகிறார். இரண்டு கைகள் கொண்டவர். ஒன்று ஆசிர்வாதம் காட்டுவது போலவும், மற்றொரு கையில் மோதகமும் வைத்துள்ளார். இவர் இடம் புரி விநாயகர். அதையெல்லாம்விட சிறப்பு, இவரிடம் எதை வேண்டினாலும், உடனே நிறைவேற்றித் தருபவர். இதனால்தான் ஹட்டியன் காடி சித்தி விநாயகர் மிகவும் பிரபலம்!

இந்த ஆலயத்தில், மாதாமாதம் வரும் சங்கடகர சதுர்த்தி அன்று விசேஷ யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு 1008 தேங்காய்களை பயன்படுத்தி நடைபெறும் யாகம் மிகச் சிறப்பு. இதனை `சகஸ்ர நரி கெலாகனயாகா’ என அழைக்கின்றனர். குங்கும அர்ச்சனையும் விசேஷம். அஷ்ட திரவியத்மா பூஜை மிகவும் சிறப்பு! மேலும், வருடத்திற்கு ஒரு முறை வருகின்ற விநாயக சதுர்த்தி அன்று மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர, செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, ஆகிய தினங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. கோயிலுக்கு வருபவர்கள் பசியாறாமல் செல்வதில்லை.

முட்கல் புராணம், பிள்ளையாரை அதாவது, விநாயகரை 32 விதமான தோற்றங்களுடன் வர்ணித்துள்ளது! அந்த வித்தியாசமான விநாயகர் சிலைகளும், இங்கு பிராகாரத்தில் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும், நவக்கிரக மண்டபமும் உள்ளது. பிரகார சுவரில், பல அழகிய வண்ண ஓவியங்களும் உள்ளன! வெளியே மூலிகை தோட்டம், கோசாலை, நட்சத்திரவனம் என பல தோட்டங்கள் உள்ளன.

இந்த விநாயகருக்கு பாக்குப் பூ மாலை விசேஷம். அது சார்ந்து ஒரு நம்பிக்கைகூட உண்டு. நாம் ஏதாவது வேண்டும்போது, அந்த மாலையிலிருந்து ஒரு பூ உதிர்ந்து விழுந்தால், அந்த காரியம் நிச்சய பலிதம் ஆகும் என அந்த ஊர் பக்தர்கள் கூறுகிறார்கள்.

குந்தபுராவிலிருந்து கொல்லூர் செல்லும் பாதையில் இந்த ஆலயம் உள்ளது. உடுப்பியிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அடையலாம். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 082-54264201.

The post ஹட்டியன் காடி ஸ்ரீசித்தி விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Hatyan Kadi Sreesiti Vikar ,Karnataka ,Udupi Zilla ,Hatyan Kadi Sreesiti Vinayagar ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...