×

அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் இருந்து விலகப்போவதில்லை: ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் வழக்கிலிருந்து விலகப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் ரூ.44 லட்சத்து 59 ஆயிரத்து 67 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2011 டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல 2006 மே 15 முதல் 2010 மார்ச் 31 வரையிலான காலத்தில் ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 443 ரூபாய் சொத்து குவித்ததாக கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இரு வழக்குகளிலிருந்தும் வில்லிப்புத்தூர்நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. இந்த தீர்ப்புகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கிரிமினல் மறு ஆய்வு மனு என்ற அடிப்படையில் தனித்தனி வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையும், இரு அமைச்சர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டும் என்றார். தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி, வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இவற்றிற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை என்றார். பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ம் தேதிக்கும் நீதிபதி தள்ளிவைத்தார்.

The post அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் இருந்து விலகப்போவதில்லை: ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Anand Venkatesh ,Chennai ,Madras High Court ,Judge ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...