×

புரட்டிப் போட்டோர்க்கும் புதுவாழ்வளிக்கும் புரட்டாசி!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

புரட்டாசி 10 (27-9-2023) : புதன், கன்னி ராசிக்கு மாறுதல்.
புரட்டாசி 13 (30-9-2023) : சுக்கிரன், சிம்ம ராசிக்கு மாறுதல்.
புரட்டாசி 17 (4-10-2023) : செவ்வாய், துலாம் ராசிக்கு மாறுதல்.
புரட்டாசி 21 (8-10-2023) : ராகு, மீன ராசிக்கும், கேது, கன்னி ராசிக்கும் மாறுதல்.
புரட்டாசி 28 (15-10-2023) : புதன், துலாம் ராசிக்கு மாறுதல்.

“கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்…..கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்…” என ஆழ்வார்களும்,

“பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால் புன்மை யிருட்கணம் போயின யாவும்…” என்று பாரதியாரும் வணங்கிய புனித விடியற்காலத்தில், நம்மைத் துயிலெழுப்புவது, தெருவிலிருந்து, வீட்டின் ஜன்னலை ஊடுருவித் தேனாகப் பாயும் “கோவிந்தா! கோவிந்தா!!” என்ற திவ்ய நாம கோஷங்களே! தெய்வீகப் பெருமை வாய்ந்த புரட்டாசி மாதம் ஆரம்பித்துவிட்டதை நினைவூட்டி, நம்மை உறக்கத்திலிருந்து தட்டியெழுப்புகின்றது. அனைத்து பாவங்களையும் போக்கும் திருவேங்கடனின் இந்த திவ்ய நாமம்.

ஆம்!! புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது. மற்ற மாதங்களைவிட, இந்தப் புரட்டாசி மாதத்திற்கென்று, ஓர் தனிப்பெருமையும் சக்தியும் உள்ளன. கலியுகத்தின் கண்கண்ட ெ தய்வமாகிய திருவேங்கடத்து இன்னமுதன், வைகுண்டத்தை விட்டு பூவுலகின் திருவேங்கட மலைக்கு எழுந்தருளி, கோயில் கொண்ட மாதம்தான், இந்தப் புரட்டாசி!

நவக்கிரக நாயகனான கதிரவன், தனது ஆட்சிவீடான சிம்ம ராசியை விட்டு, புதனின் ஆட்சிவீடான கன்னிராசியில் சஞ்சரிக்கும் காலமே புரட்டாசி. கல்வி, கணிதம், அறிவு, மருத்துவம் ஆகியவற்றிற்கு அதிபதியான புதனின் ராசியில் ஆத்மகாரகரான சூரியன் சஞ்சரிப்பது மகத்தான சக்திவாய்ந்த காலகட்டமாகும். சூரியனுக்கு, புதன் நட்புக் கிரகமாகும். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாவார் புதன்!

புகழ்பெற்ற ஆசிரியர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், உரைநடையாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருடைய ஜாதகங்களை ஆராய்ந்தால், அவற்றில் புதன் சிறந்த சுபபலம் பெற்றிருப்பது தெரியவரும்!! தனது பேச்சாற்றலினால், பிறரைக் கவர்ந்திழுக்கும் திறனை அளித்தருள்கிறார், புதன்! எவரது ஜாதகத்தில், சந்திரனும், புதனும் உயர்ந்த சுபபலம் பெற்று விளங்குகின்றதோ, அவர்கள் தங்கள் கல்வி, அறிவு, பேச்சுத்திறன் ஆகியவற்றினால் உலகப் புகழ்பெற்று விளங்குவார்கள் என “பிருஹத் ஸம்ஹிதை” எனும் மிகப் புராதனமான ஜோதிட நூல் கூறுகின்றது. ஜாதகத்தில், புதன் உச்சம் பெற்றுத் திகழ்ந்து, அவரது தசா காலமும் அமைந்திருப்பின், அவர்களின் வாழ்க்கையையே சீரமைத்துத் தரும் சக்தி புதனுக்கு உள்ளது.

நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமன் அவர்களின் ஜாதகத்திலும், இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்து நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த சர் வின்ட்ஸ்டன் சர்ச்சில் ஆகியோரின் ஜாதகங்களில் சூரியன் – புதனின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதைக் காண்கிறோம். ஆத்மகாரகரான சூரியன் வித்யாகாரகரான புதனுடைய ராசியான கன்னியில் சஞ்சரிப்பது, மிகச்சிறந்த காலகட்டமாகும். கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள், நீதியை நிலைநாட்டும் நீதிபதிகள், எவ்விதப் பிரதிபலனையும் எதிர்பாராது, நேர்மை, ஒழுக்கம், சத்தியம், இறைபக்தி, தர்மம் ஆகியவற்றை எவ்வித எதிர்பார்ப்புமின்றி போதிக்கும் மகான்கள், ஆசார்ய மகா புருஷர்கள் ஆகியோரின் ஜாதகங்களில் சூரியன் – புதன் ஆதிக்கத்தைக் காணலாம்.

இந்தப் புரட்டாசி மாதத்தில் மூன்று மிக முக்கிய கிரக மாறுதல்கள் நிகழ்கின்றன! சென்ற சுமார், 15 மாதங்களாக மேஷ ராசியில் அமர்ந்திருந்த ராகு, அந்த ராசியை விட்டு, குருவின் ஆட்சிவீடான மீனத்தில் பிரவேசிப்பதும், இதுவரை துலாம் ராசியில் நிலைகொண்டிருந்த கேது, கன்னி ராசிக்கு மாறுவதும், மிக முக்கிய கிரக மாறுதல்களாகும்.

நன்மையானாலும், தீமையானாலும் ராகு, தயவு- தாட்சண்யமின்றி, கண்டிப்புடன் நடந்துகொள்வதால், ராகுவின் ராசி மாறுதல்களை ஜனங்கள் அனைவரும் மிகக் கவலையுடன் கவனிக்கின்றார்கள்!! புரட்டாசி 21ம் தேதி ராகு, மீனத்திலும், கேது, கன்னியிலும் பிரவேசிக்கின்றனர். இந்த மிக முக்கிய ராகு – கேது ராசி மாறுதலின், பலன்களை மிகத் துல்லியமாகக் கணித்து, எமது அன்பான “தினகரன்” வாசகர்களாகிய உங்களுக்கு வெகு விரைவில் தனி மலராக வழங்கவுள்ளோம்.

இனி, இத் தெய்வீக புரட்டாசி மாதத்தில் நடைபெறவுள்ள மிக முக்கியமான புனித, புண்ணிய நாட்களைப் பார்ப்போம்.அதன்பிறகு, அந்தந்த ராசிக்கு உண்டான பலா-பலன்களையும் மிக உன்னிப்பாகக் கணித்து, கீழே தந்துள்ளோம். அவற்றினால் தாங்களும், தங்கள் உறவினர்களும் படித்துப் பயன் பெறுவீர்களேயானால் அதுவே யாம் பெறும் சன்மானமாகும்!

புரட்டாசி: 1 – (18-9-2023) : விநாயக சதுர்த்தி. பார்வதி-பரமேஸ்வரரின் செல்வப் புதல்வனும், ஞானகாரகரும், வேதங்களின் உட்பொருட்களை (ரகசியங்கள்) அறிந்தவரும், ஓங்கார ஸ்வரூபியுமானவரும், விக்கினங்கள் அனைத்தையும் தகர்த்தெறியும் தயாநிதியுமான விநாயகப் பெருமானின் அவதார தினமாகும், இன்று.

வீட்டைச் சுத்தமாக்கி, பூஜையறையை, புஷ்பங்களால் அலங்கரித்து, விநாயகப் பெருமானை எழுந்தருளச்செய்து, அருகம்புல், எருக்கம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும். அவருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். அனைத்துத் தடங்கல்களும் விலகி, குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும். மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று விநாயகப் பெருமானை தரிசிக்க வேண்டும். சர்வரோக நிவாரணியாக, பெண்கள் நித்ய சுமங்கலியாகப் பரிமளிக்கவும், உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பளிக்கக்கூடியதாகவும் விளங்கும் “ஹரிதாளிகா விரதம்”, இன்று! இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு சர்வ மங்கலங்களும் உண்டாவது திண்ணம்.

புரட்டாசி : 2 – (19-9-2023) : ரிஷி பஞ்சமி. தங்களது மிகக் கடினமான தவங்களினால், வேதங்களின் உட்பொருட்களை அறிந்து, நமது நன்மைக்காக, தர்மநெறி முறைகளை நமக்கு உபதேசித்தருளிய காஸ்யபர், ப்ருகு, ஆங்கீரசர், அத்திரி, ஜமதக்னி, சியவனர், பார்க்கவர், காயத்ரி மந்திரத்தின் ரிஷியான, விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற வேதகால மகரிஷிகளை, பூஜிக்கவேண்டிய மகத்தான புண்ணிய தினம்.

புரட்டாசி: 6- (23-9-2023): சோகங்களும், துக்கங்களும் மிகுந்திருக்கும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், அனைத்துவித துக்க நிவர்த்திக்காகவும், நம் இல்லத்தில் மகிழ்ச்சித் தென்றல் உலா வருவதையும் கண்கூடாகக் காணலாம் இன்றைய தினத்தில் “அதுக்க நவமி விரத”த்தை அனுஷ்டித்தோமேயானால்! பெயரிலேயே துக்கத்தை விரட்டியடிக்கக்கூடிய வல்லமை பெற்றதாகையால்தான், “அதுக்க நவமி விரதம்” என்ற பெயர்க்காரணம் உண்டாயிற்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இதன் வலிமையை!

புரட்டாசி: 9 – (26-9-2023): வாமன ஜெயந்தி. அசுர மன்னரான மகாபலி சக்கரவர்த்தியிடம் தன் திருவடிகளினால் மூன்றடி மண் தானமாகக் கேட்டு, மூவுலகங்களையும், அம்மன்னனையும் ஆட்கொண்டருள பகவான்ழ் ஸ்ரீமந் நாராயணன், வாமனராக அவதரித்த புனித தினம்.

குருஜெயந்தி: சர்வதேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆச்சார்யனாகவும், பிரஹஸ்பதி, பொன்னன் என்று பலவாறாகப் போற்றப்படுபவரும், அஞ்ஞானம் எனும் இருட்டை அகற்றி, அறிவொளியை அளித்தருள்பவரும், இவருடைய பார்வையெனும் தசா-புக்திகள் ஒருவருக்கு மாணவப் பருவத்தில் ஏற்படின், நற்குணங்களுடன்கூடிய, கல்வி-கேள்விகளில் சிறந்தவராகவும், இளமைக் காலத்தில் இவரின் தசை அமையப்பெறுமின், நன்மனை, மக்கட்செல்வங்களையும், 16 வகைச் செல்வங்களுக்கும் அதிபதியைப் போன்றதொரு நல்வாழ்க்கையும், வயோதிகத்தில் ஏற்படின், நற்சந்ததிகளையும் அனைத்து வகையிலும் மனமகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ்வைத் தந்தருளும் குருபகவானின் அவதாரதினம் இன்று! மேலும், திருமாலின் தசாவதாரத்திற்கு நிகரான பராக்கிரமுடையவரும், சாயாக் கிரகங்களாகிய, ராகு – கேதுவின் தோஷங்களைப் போக்குபவரும், சர்வமங்கள ஸ்வரூபிணியுமாகிய, லோகமாதாவுமாகிய புவனேஸ்வரி தாயாரின் ஜெயந்தியாகிய புண்ணிய தினமும் இன்றுதான்!

புரட்டாசி: 12-(29-9-2023): “எனதருமை மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லையே! ” என்று ஏங்கித் தவிக்கும் தாய்-தந்தையர்க்கு அவர்களின் சோகம் போக்கும் வரப்பிரசாதமாக, இன்றைய நன்னாளில் அமைந்ததுதான், உமா மகேஸ்வர விரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு, மருமகனாக அல்லாமல், தான் ஈன்றெடுத்த மகனைப் போலவே நல்ல மாப்பிள்ளை அமைவார் என்பது மகரிஷிகளின் வாக்காகும்!

புரட்டாசி: 13-(30-9-2023): அத்வைத மகானான அப்பய்ய தீட்க்ஷிதரின் அவதார தினம். இதே தினம் “மகாளய பட்சம்” எனும் தன்னிகரற்ற, புனித 15 பித்ரு நாட்கள் ஆரம்பமாகின்றன. காலஞ்சென்ற நமது மூதாதையர்கள், நம்மீது கொண்டுள்ள கருணையினால், தர்மதேவதையான தர்மராஜரின் அனுமதி பெற்று, சூரியனின் கிரணங்களின் மூலம், ஸ்வர்ணமயமான (தங்கம்) ரதங்களில் பூலோகத்தில் எழுந்தருளி, நம்முடன், நமது இல்லங்களில் தங்கியிருந்து தங்களின் தெய்வீக சக்தியினால், குடும்பத்தின் அனைத்துத் துன்பங்களையும் போக்கி, மகாளய அமாவாசையன்று அதே சூரியக் கிரணங்களின் மூலம் தங்கள் உலகங்களுக்குத் திரும்பிச் செல்வதாக, முக்காலத்தையும் உணர்ந்த மகரிஷிகளும், மகான்களும், சித்த மகா புருஷர்களும் கூறியுள்ளனர். இந்த 15 நாட்களும், நம் முன்னோர்கள் நம்முடன் தங்கியிருப்பதால், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சப்தம் போட்டுப் பேசுவது, தகாத வார்த்தைகளை உபயோகிப்பது, சண்டையிட்டுக்கொள்வது, அசைவ உணவு உண்பது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான், அவர்களுடைய அருள் நமக்குக் கிட்டும்.

மகாளய அமாவாசையன்று, முடிந்தால், புண்ணியநதி ஒன்றிலோ, அல்லது, சமுத்திரத்திலோ அல்லது நம் வீட்டின் குளியலறையிலோ ஸ்நானம் செய்து,பித்ருக்களுக்கு எள் கலந்த தண்ணிரை கொடுத்து, தர்ப்பணம் செய்து, பூஜித்து, வழியனுப்ப வேண்டும். சக்தியுள்ளவர்கள், 15 நாட்களுமே தர்ப்பணம் போன்ற பூஜைகளைச் செய்யலாம். பல தலைமுறைகளுக்கு, நம் குடும்பத்தை இந்த நற்செயல் பாதுகாக்கும். சக்தியிருப்பின், ஒரு ஏழைக்கோ அல்லது பசு மாட்டிற்கோ உணவளிப்பது ஈடிணையற்ற புண்ணிய பலனையளிக்கும்.

புரட்டாசி: 21 – (8-10-2023) : ராகு – கேது பெயர்ச்சி! இன்று திருக்கோயிலுக்குச் சென்று, தீபம் ஏற்றிவைத்து, நவக்கிரகங்களையும், தரிசித்துவிட்டு வருவது அளவற்ற நன்மைகளையளிக்கும்.

புரட்டாசி : 22 – (9-10-2023) : அசுரர்களின் குருவானவரும், மல்லிகை, முல்லை, வெண்தாமரையையொத்த நிர்ஜலமாக பிரகாசிக்கும், நிறத்தையுடையவரும்,பிருகு முனிஸ்ரேஷ்டரின் புதல்வரும், நால்வகை வேதங்களையும் திறம்படக் கற்றுணர்ந்தவரும், அனைவருக்கும் அவற்றை எடுத்து இயம்புபவரும், இயல், இசை, நாடகக் கலைக்குரிய அரிய ஆற்றலை அளித்தருள்பவரும், ஒரு பெண்ணின் இளமைக் காலத்தில் இவருடைய தசா-புக்திகள் ஏற்படின், தனது அழகினாலும், மாந்தளிர் மேனி வனப்பினாலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வடிவழகையும், பேரிளம் மங்கையாகவும் மிளிரச் செய்திடும் – சுக்கிர பகவானின் ஜெயந்தி!

புரட்டாசி : 27 – (14-10-2023) : மகாளய அமாவாசை. சுமார் 15 நாட்கள், நம்முடன் தங்கியிருந்து, நம்மை ஆசீர்வதித்து, தங்களது பித்ரு உலகங்களுக்கு நம் முன்னோர்கள் திரும்பிச் செல்லும் புண்ணிய தினம். தர்ப்பணம் கொடுத்து, வணங்கி, அவர்களை வழியனுப்ப வேண்டிய புனித தினம்.

புரட்டாசி: 28 – (15-10-2023): நவராத்திரி ஆரம்பம். மூன்று தெய்வீக தேவியரான அம்பிகை பராசக்தி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர், நமது கிரகங்களுக்கு எழுந்தருளி, ஒன்பது தினங்கள் நமது கிரகத்தில் தங்கியிருந்து, நமக்கு பரம கருணையுடன் அருள்புரிவதாக புராதன நூல்கள் கூறுகின்றன. இந்த ஒன்பது நாட்களும், மூன்று தேவியரையும் பூஜிப்பது, குறையாத ஐஸ்வர்யத்தையும், குன்றாத இளமையையும், நோய்நொடிகளற்ற உடல்அமைப்பையும், முயற்சிகளில் வெற்றியையும், நிம்மதியையும் மனநிறைவான வாழ்க்கையையும் அளித்தருளும். இந்த 9 நாட்களும், நமது தெய்வீக அன்னையர்களான, மூவரும் நம்முடன் தங்கியிருப்பதால், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் பாயாசம் ைநவேத்தியம் செய்தல் வேண்டும்.

வசதிபடைத்தவர்கள் ஒரு ஏழைப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து, எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புதிய வஸ்திரம் அணிவித்து, உணவளிப்பது, குடும்பத்தில் அஷ்ட ஐஸ்வர்யத்தையும் அளித்தருள வல்லது என மிகப் பிரதான நூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இந்த ஒன்பது நாட்களிலும், சுமங்கலிகளையும், பெண் குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து, பிரசாதம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கைத் துண்டு-தாம்பூலம் கொடுப்பது மேலும் புண்ணிய பலனையளிக்கக்கூடியது.

The post புரட்டிப் போட்டோர்க்கும் புதுவாழ்வளிக்கும் புரட்டாசி! appeared first on Dinakaran.

Tags : Bhagwat ,Jyothida Sagara Chakravarthy AMrajagopalan Puratasi ,Purattasi ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...