×

‘சென்னை சங்கமம்’ வெற்றியை தொடர்ந்து காஞ்சிபுரம் உள்பட 8 நகரங்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி: அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் விழாவையொட்டி நடத்தப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை தொடர்ந்து கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 8 இடங்களில் இந்த ஆண்டு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2023-24ம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின்போது சங்கமம் கலை விழா சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ்மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடுவதற்கும், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நாட்டுப்புற கலை விழாக்கள் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை முதற்கட்டமாக நடத்தப்படும்.

‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வில் பங்குபெற விரும்பும் கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோ, கலை பண்பாட்டு துறையின் www.artandculture.tn.gov.in வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். அவை கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு 6ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும்.

The post ‘சென்னை சங்கமம்’ வெற்றியை தொடர்ந்து காஞ்சிபுரம் உள்பட 8 நகரங்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Sangamam ,Kanchipuram ,CHENNAI ,Chennai Sangam ,Pongal ,Coimbatore ,Madurai ,Tirunelveli ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...