×

ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி உத்தரவு மாநில எல்லை சோதனைச்சாவடிகள், ரயில்களில்

வேலூர், செப்.16: ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக-ஆந்திரா எல்லை சோதனைச்சாவடிகள், ரயில்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வேலூரில் ஆய்வு மேற்கொண்ட சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள் போலீசாருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள் நேற்று வேலூர் மாவட்ட சிவில் சப்ளை சிஐடி பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இதுவரை எத்தனை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழக-ஆந்திரா எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சோதனைச்சாவடியில் சிசிடிவி கேமரா முறையாக செயல்படுகிறதா? வாகனங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது போன்றவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டார்.

தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் தமிழக- ஆந்திரா சோதனைச்சாவடிகளின் வழியாக ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சிவில் சப்ளை சிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்த வேண்டும். உள்ளூர் போலீசார் சோதனை நடத்தினாலும், அவர்களுடன் இணைந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் பிற பகுதிகளிலும் கடத்தல் சம்பவம் தொடர்பாக கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். ரயில் மூலம் கடத்தப்படும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பகல், இரவு நேரங்களில் அனைத்து ரயில்களையும் சோதனை செய்ய வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குறிப்பாக இரவு நேரங்களில் தொடர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று 3 மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் உணவு பொருட்கள் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலம் விட்டு, அந்த பணத்தை அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின் போது வேலூர் தலைமையகம் ஏடிஎஸ்பி பாஸ்கரன், வேலூர் சிவில் சப்ளை சிஐடி சரக டிஎஸ்பி நந்தகுமார், வேலூர் சிவில் சப்ளை சிஐடி இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்ஐக்கள் முத்துஈஸ்வரன், செந்தில்முருகன் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

The post ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி உத்தரவு மாநில எல்லை சோதனைச்சாவடிகள், ரயில்களில் appeared first on Dinakaran.

Tags : Civil Supply CIT Division DGP ,Vellore ,Tamil Nadu ,Andhra ,Dinakaran ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...