×

புதுச்சேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் ஒழிக கோஷத்தால் பரபரப்பு

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் மாறி மாறி ஒழிக கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அதிமுக உட்கட்சி பூசலால் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக மாறியுள்ளது. தமிழகத்ைத தொடர்ந்து புதுவையிலும் அதிமுக நிர்வாகிகள் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி என 2 அணிகளாக உள்ளனர். இருதரப்பினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அண்ணா பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்கி வந்தனர்.

அப்போது அதிமுக மாநில செயலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான அன்பழகன் தலைமையில் அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து ஓம்சக்தி சேகர் கீழே இறங்கி வந்தவுடன், அன்பழகன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் மாலை அணிவிக்கும் போது எடப்பாடியார் வாழ்க, ஓ.பன்னீர்செல்வம் ஒழிக என கோஷமிட்டார். இதற்கு ஓம்சக்தி சேகர் தலைமையில் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி ஒழிக, ஓ.பன்னீர்செல்வம் வாழ்க என கோஷமிட்டனர். இதனால் அங்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. உடனே போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதுச்சேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் ஒழிக கோஷத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,EPS ,OPS ,Ablika ,Abolika Kosha ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு