×

பூனையை கொன்றது சிறுத்தை அல்ல நாய் வன அதிகாரி விளக்கம் அணைக்கட்டு அருகே

வேலூர், செப்.14: அணைக்கட்டு அடுத்த ஊனை மோட்டூர் கிராமத்தில் பூனையை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய் என வன அதிகாரி தெரிவித்தார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனைமோட்டூர் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி(60). இவரது வீட்டில் வளர்த்து வந்த பூனை நேற்று முன்தினம் காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் அவரது வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது அதிகாலை 2.45 மணியளவில் மர்ம விலங்கு ஒன்று பூனையை கடிப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அதிகாலை நேரத்தில் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து பூனையை கடித்து கொன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது.

இதையடுத்து வனத்துறையினர், வருவாய்த் துறையினர், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஊனைமோட்டூர், ஊனை பள்ளத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை செய்தனர். இதனால் கிராம மக்களிடையே பீதியும், அச்சமும் ஏற்பட்டது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கலாநிதி கூறுகையில், ‘பூனையை கடித்து கொன்றது தொடர்பான வீடியோ மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பூனையை நாய்தான் தாக்கியுள்ளது. வீடியோவில் பூனை 3 முறை ஓடுவதுபோல் உள்ளது. நாய் பூனையுடன் துரத்தி சென்று கடித்துள்ளது. இருப்பினும் வனத்துறையைச் சேர்ந்த ஒரு குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். பூனை இறந்து கிடந்த இடத்தில் சிறுத்தையின் கால் தடயங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பூனையை கொன்றது சிறுத்தை அல்ல. நாய் என தெரியவந்துள்ளது’ என்றார்.

The post பூனையை கொன்றது சிறுத்தை அல்ல நாய் வன அதிகாரி விளக்கம் அணைக்கட்டு அருகே appeared first on Dinakaran.

Tags : Vellore ,Motur ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...