×

டாஸ்மாக் கணினிமயம் சாத்தியக்கூறு குறித்து அறிய ஜார்கண்ட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டம்: விரைவில் அம்மாநில அதிகாரிகளுடன் சந்திப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்கும் திட்டத்தில், இடம்பெற வேண்டிய கூடுதல் அம்சங்கள் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நடைமுறைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஒரு குழுவினர் ஜார்கண்ட் செல்ல உள்ளனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் 4,829 மதுக்கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. மது வகைகளை குடோனில் இருந்து இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்புவது கணினியில் பதிவாகிறது. ஆனால், கடைகளில் நடைபெறும் விற்பனை கணினியில் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், ஒரு சில நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளித்து விற்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதை தடுக்க குடோன் முதல் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடை’ வரை திட்டம் கணினி மயமாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை, ஒன்றிய அரசின், ரயில் டெல் நிறுவனம் தொடங்கி உள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: மது விற்பனையில் ஏற்படுத்த வேண்டிய தொழில்நுட்பம் குறித்து, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. கேரளாவில், 270 கடைகள் மட்டுமே இருக்கிறது, அங்கு அதிக இட வசதி இருக்கிறது. இதனால், பில் போட தனி கவுன்டர், மது விற்பனைக்கு தனி கவுன்டர் உள்ளது. ஆந்திராவில் மது பாட்டிலில், கியூ ஆர் கோடு உள்ளது. மது விற்பனைக்கு என, தனி மொபைல் செயலியில் பாட்டில் உள்ள கியூ ஆர் கோட்டை, ஸ்கேன் செய்தால், உற்பத்தி தேதி, நேரம், எந்த கிடங்கிற்கு அனுப்பியது போன்ற விபரங்களை அறியலாம்.

மது விற்பனை முழுதும், ஜார்க்கண்டில் கணினிமயாக்கப்பட்டு உள்ளது. அங்கு அந்த பணியை செய்த நிறுவனம் தான், தமிழகத்தில் அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. எனவே, கணினிமயமாக்கும் திட்டத்தில், ஏற்கனவே திட்டமிட்டதை விட கூடுதலாக இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஜார்க்கண்ட் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். முழுவதும் கணினி மயமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கடைக்கும், பார் கோடு கருவிகள் வழங்கப்படும். அதில், மது வகைகளை, ஸ்கேன் செய்து விற்கவேண்டும். அனைத்து கடைகளிலும் நடக்கும் விற்பனை, இருப்பு விபரத்தை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனே அறியலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டாஸ்மாக் கணினிமயம் சாத்தியக்கூறு குறித்து அறிய ஜார்கண்ட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்ய திட்டம்: விரைவில் அம்மாநில அதிகாரிகளுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Tasmac ,CHENNAI ,
× RELATED ஜார்க்கண்ட் : போட்டித் தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை!!