×

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தது: வரிசையில் நின்ற தென்மாவட்ட பயணிகள் ஏமாற்றம்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ரயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி சில நிமிடங்களிலேயே முடிவடைந்தது. இதனால் வரிசையில் நின்றிருந்த தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய முடியாமல் வீடு திரும்பினர். 2024ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ல் மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன்படி நேற்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11ம்தேதி ரயிலில் பயணம் செய்யலாம். இன்று முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது.

குறிப்பாக பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது. காலை 8 மணி முதலே ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் அனைத்து டிக்கெட்டுகளின் ரிசர்வேஷன் 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன. பலர் அதிகாலை 5 மணியில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் காத்திருந்து முன்பதிவு செய்தனர். ஆனால் இணையதளத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்பதிவு செய்ததால் டிக்கெட் கவுன்ட்டர்களில் காத்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றனர். ஏற்கனவே நவ.12ம் தேதி வரும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல, ரயில் டிக்கெட் முன் பதிவு கடந்த ஜூலை மாதம் துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

The post பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தது: வரிசையில் நின்ற தென்மாவட்ட பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Pongal Festivival ,South District ,Chennai ,Pongal festivities ,Pongal ,Dinakaran ,
× RELATED கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்