×

உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா நாயரின் பலாத்கார புகாரில் சதி: சிபிஐ அறிக்கையில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் சரிதா நாயர். இந்த மோசடி தொடர்பாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன் உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது அரசு இல்லத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகார் கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து சரிதா நாயர் ஒரு மனு கொடுத்தார்.

இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். இதன்படி சிபிஐ விசாரணை நடத்தியது. பலாத்காரம் நடந்ததாக கூறப்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்திற்கும் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல்வர் வீட்டில் அப்போது பணிபுரிந்த போலீசார் உள்பட ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த பலாத்கார புகாரில் உண்மை இல்லை என்று கூறி உம்மன் சாண்டி சமீபத்தில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில். உம்மன் சாண்டிக்கு எதிரான பலாத்கார புகாரில் சதி நடந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விவரம் தற்போது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சதிக்கு முதல்வர் பினராயி விஜயனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் நேற்று கேரள சட்டசபையிலும் எதிரொலித்தது.

The post உம்மன் சாண்டிக்கு எதிரான சரிதா நாயரின் பலாத்கார புகாரில் சதி: சிபிஐ அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sarita Nair ,Oman Chandi ,CBI ,Thiruvananthapuram ,Saritha ,Kerala ,Tamilnadu ,Saritha Nair ,Oman Sandy ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...