×

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கண்ணதாசன் எந்தப் பாட்டு எழுதினாலும், அதில் கண்ணன் வந்து நிற்பான். இது கண்ணதாசனுக்கு இயல்பானது. பின்னால், அவர் கண்ணன் மீது கொண்ட பக்தி அதிதீவிரமானது. 1961-ல் வெளிவந்த “பாலும் பழமும்’’ படத்தில் ஒரு காட்சி. விபத்தினால் கண் பார்வை இழந்த கதாநாயகன், இறந்துவிட்டதாகக் கருதும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாட்டு. அவளைப் போலவே உள்ள, தனக்கு மருத்துவ உதவி செய்யும் செவிலிப் பெண்ணிடம் கூறுவது போல அமைந்த பாடல். இந்தச் சூழ்நிலைக்கு கவியரசு கண்ணதாசன், தான் ஏற்கனவே கண்ணனை எண்ணி எழுதி வைத்திருந்த பாடலின் சில வரிகளை, பல்லவியாகக் கொடுக்கிறார். அந்த பல்லவி இதுதான்.

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் –
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் அவன் பேரை தினம் பாடும் குயில் அல்லவா
என் பாடல் அவன் தந்த மொழி அல்லவா

என்று தனக்கும் கண்ணனுக்கும் உள்ள ஆத்ம சிநேகிதத்தை எழுதி வைத்திருந்தார் கண்ணதாசன். அதை இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று பல்லவியாக அமைத்துக் கொடுக்கிறார். அப்போது அவர் உதவியாளர் பஞ்சு அருணாச்சலத்திடம் சொன்ன வார்த்தை.

‘‘பஞ்சு, நான் கண்ணனுக்காக எழுதிய கவிதையில் அவன் என்ற வார்த்தையை மட்டும் அவள் என்று மாற்றி கொடுத்துவிடு. பாட்டு இந்தச் சூழலுக்குச் சரியாக வரும்’’. இப்படி அவர் கண்ணனுக்காகத் தந்த பாடல்கள் பல. பல பாடல்களில் ஆழ்வார்கள் வரிகளை அப்படியே பயன்படுத்தியிருப்பார்.

தொண்டரடிப்பொடி
ஆழ்வார் பாசுரம்
பச்சைமா மலைபோல் மேனி பவள வாய் கமலச்செங்கண்

இந்த வரியை திருமால் பெருமை படத்தில் “மலர்களிலே பல நிறம் கண்டேன்” என்ற பாடலின் சரணத்தின் அப்படியே பயன்படுத்தி இருப்பார்.

பச்சை நிறம் அவன் திருமேனி
பவள நிறம் அவன் செவ்விதழே
மஞ்சள் முகம் அவன் தேவி முகம்
வெண்மை நிறம் அவன் திருவுள்ளம்

– என்று பயன்படுத்தியிருப்பார்.

அவர் கண்ணனுக்காகவே பஜகோவிந்தம், பகவத் கீதை உரை, ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி, ஸ்ரீகிருஷ்ண கவசம் என பல நூல்களை எழுதி இருக்கிறார்.

ஸ்ரீகிருஷ்ண கானம்

அவருக்கு கண்ணன் பாடல்களை வைத்து பிரத்தியேகமான ஒரு இசைத் தொகுப்பு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் 1975 – 76ல் அமைந்தது. ஸ்ரீகிருஷ்ண கானம் என்ற தலைப்பில் வெளியானது. பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவருக்கு அழியாப் புகழ் தந்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். அதன் முதல் பாடல்தான் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ என்ற பாடல். டி.எம்.சௌந்தரராஜன் மிகமிக அற்புதமாக இந்தப் பாடலைப் பாடியிருப்பார். இந்தப் பாடலின் இசைத்தட்டு வெளிவந்த உடன், சக்கைப் போடு போட்டது. இந்தப் பாடலை கவியரசு கண்ணதாசன் கேட்காமல் தூங்குவதில்லை.

இப்பாடல் வெளிவந்த பிறகு, இதற்கு இசை அமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், தனது இசை நிகழ்ச்சிகளில் முதல் பாடலாக இதனைப் பாடிவிட்டுதான் மற்றப் பாடல்களைப் பாடுவார். அதே போலவே திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்களும் முதல் பாடலாக, தன் இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடுவார். இனி, இந்தப் பாடலின் சில நயங்களை அனுபவிப்போம்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் படைத்தவனின் புகழைப் பாடுவது மரபு.
கண்ணனுக்கு விருப்பமானது புல்லாங்குழல்.

கண்ணனின் குழலூதும் சிறப்பைக் குறித்து பெரியாழ்வார் ஒரு பதிகமே பாடி இருக்கிறார்.

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்!
இது ஓர் அற்புதம் கேளீர்
தூ வலம்புரி உடைய திருமால்
தூய வாயிற் குழல்-ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங் கொங்கை – குதுகலிப்ப
உடல் உள் அவிழ்ந்து எங்கும் –
காவலும் கடந்து கயிறுமாலை
ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே

இப்படிப்பட்ட இசையைத் தருவதற்கு அவனிடம் புல்லாங்குழல் இருந்தது. அந்தப் புல்லாங்குழலைத் தந்தது மூங்கில். அந்த மூங்கிலிடம் ‘‘நீ கண்ணனின் புகழை பாட வேண்டும்’’ என்று கவிஞர் கேட்கிறார். நாம் எல்லோரும் (ஜீவாத்மாக்கள்) பெண்கள். அவர் மட்டுமே புருஷோத்தமன். புருஷ சூக்தம் என்பது கண்ணனுக்கே உரிய வேத மந்திரம். நாமங்களில் மிக உயர்ந்த நாமத்தை வைத்து முதல் வரியை இயற்றிய கண்ணதாசன், அடுத்தவரியில் கங்கைக் கரைக்குப் போய் விடுகின்றார்.

வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே – எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் கங்கையை கண்ணனோடு இணைத்து பல பாடல்களை கவியரசர் இயற்றியிருக்கிறார். மிகவும் பழைய பாடல்

கங்கைக்கரை தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே

ஸ்ரீபாகவதத்தின் ஒரு நிகழ்ச்சியை கவியரசு கண்ணதாசன் மிக இயல்பாக எளிமையாகப் பாடி இருப்பார். வசுதேவன் புகழ் என்று சொல்லவில்லை. மதுசூதனன் புகழ் பாடுங்களேன் என்கிறார் ஏன்? இங்கே மலர் தோட்டங்கள் வந்துவிட்டது. மலர்கள் என்றால் மது (தேன்) இல்லாமல் இருக்குமா? எனவே மற்ற நாமங்களை விட்டுவிட்டு மதுசூதனன் புகழ் பாடுங்களேன் என்று மதுசூதனன் திருநாமத்தைப் பயன்படுத்தினார். மதுசூதனன் என்கிற திருநாமத்திற்கு பல பொருள்கள் உண்டு.வண்டு மலர் இரண்டும் இருந்தால் மதுவைத் தேடி மலருக்கு வண்டு போவது போல், நாம் இறைவனைத் தேடிப் போக வேண்டும். அவருடைய அருள் என்கிற மதுவை அடைய வேண்டும்.

தேனே (மது) மலரும் திருப்பாதம் என்பது ஆழ்வார் வாக்கு
‘‘மது + சூதனா’’ – தைத்யா என்ற மதுவைக் கொன்றான்.
“மது + சூதனன்” – எல்லா தவறான அறிவையும் (சம்ஷ்ய, ஞானம் மற்றும் விபரீத ஞானம்) நீக்குபவர்
“மது + சூதனா” – நமக்கு சுகத்தை (இன்பத்தையும் ஆறுதலையும்) தந்து அசுகத்தை நீக்குபவர்.
தேன் போன்ற வடிவம் உடையவன் (இனிப்பு)
நமது இந்திரியங்களை (மது = இந்திரியங்கள்) கட்டுப்படுத்த அறிவையும் வழங்குபவர்.
அதில் ஒன்று அவன் தேனைவிட இனியவன் என்பது. இதைத்தான் மலரோடு இணைத்துப் பாடினார்.
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
அடுத்த வரி இன்னும் அபாரம்…
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களேன்

அவன் மேக நிறத்தவன். ‘‘கருமாமுகில் போல் உருவா” என்றும், ‘‘கரையாய் காக்கைப் பிள்ளாய் கருமாமுகில்போல் நிறத்தன்” என்றும் திருமங்கை ஆழ்வார் பாடுகின்றார். சொரியும் என்கிற வார்த்தை அருள் புரிதல் என்று வரும். பரந்தாமன் என்பதிலேயே பரம் என்பது அவனையும், தாமம் என்கிறது அந்த இடத்தையும் குறிக்கும். வைகுந்தநாதன் என்று பொருள்.

மெய்யழகைப் பாடுங்களேன். அழகு என்று சொன்னால் அவன் அழகு மெய்யழகு. நமக்கெல்லாம் பொய்யழகு. இதை வேறு விதமாகச் சொன்னால் அவன் அழகு அழியா அழகு. இதைக் கம்பனே பாடுகின்றான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
– என்கிற பாடல்.

மெய் அழகு – இரண்டு பொருள்.

1. அவன் உருவ அழகைப் பாடுங்கள் (மெய்அழகு).

2. அவன் நிஜமான அழகைப் பாடுங்கள்.

தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே.

அடுத்தது தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே என்கிறார். தென்றல் குழலில் நுழையும் பொழுது அழகான இசை பிறக்கும். “தென்கோடித் தென்றல்” வார்த்தை அற்புதமானது. வடக்கிலிருந்து வந்தால் வாடை. மேற்கே வந்தால் கோடை. கிழக்கே வந்தால் கொண்டல். தெற்கே வந்தால் தென்றல் என்று காற்றினை நான்கு விதமாகப் பிரித்தார்கள். அதிலே மனதுக்கு குளிர்ச்சியானது தென்றல்.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலே
என்று இந்த தென்றல் மீது எப்போதும் கண்ணதாசனுக்கு ஈடுபாடு. தென்றல் என்கிற பெயரில் பத்திரிகை கூட நடத்தினார். கண்ணனின் நிலைகள் பல அடுத்த சரணம் பாருங்கள்.
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

நின்றான், இருந்தான், கிடந்தான் என்பதோடு நிறுத்தாமல், தவழ்ந்தான் ஆண்டான், அருள் செய்கின்றான் என்று விஸ்தரிக்கிறார். பகவானுக்கே இந்த பரிணாமத்தை காட்டுகின்றார். அவன் குழந்தையாக குருவாயூரில் இருக்கின்றான். மதுராவில் அரசனாக இருக்கின்றான். திருவேங்கடத்தில் அனைவருக்கும் அருள் செய்வதற்காக நிற்கின்றான். நிறைவாக திருவரங்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். இதை ஆழ்வார் ஆச்சாரியார்களும் சொல்லுகின்றார்கள்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை
வானவர் சந்தி செய்ய நின்றான்
அரங்கத் தரவினணையான்
என்கிற பாடலிலே திருப்பாண் ஆழ்வார் சொல்லுகின்றார்.
பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான்
அடுத்த வரி பாருங்கள்.
பாஞ்சாலி புகழ்காக்க தன் கை கொடுத்தான் அன்று
பாரதப் போர் முடிக்கச் சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்.

மகாபாரதத்தின் உணர்ச்சியான கட்டம் இது. பாஞ்சாலி சபை நடுவே மானப் போராட்டம் நடத்துகிறாள்.

அதை மிக உணர்ச்சிகரமாக வில்லிபுத்தூராழ்வார் பாடுகிறார்.
ஆறாகி இரு தடங் கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகிந்த கை சோர மெய் சோர வேறு ஒரு சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்து ஊற உடல் புளகித்து உள்ளம் எல்லாம் உருகினாளே

அப்போது கண்ணன் அருள், புடவையாக சுரந்து அவள் மனதை காத்தது. பின் அவள் குழல் முடித்து புகழும் காத்தது. ஆடையைத் தந்தான். அது அப்போதைய நிகழ்ச்சி. ஆனால், அவள் புகழ் காத்தது என்றைக்குமான நிகழ்ச்சி. இன்றைக்கும் திரௌபதியினுடைய புகழ் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. திரௌபதிக்கு பல கோயில்கள் கிராமங்களில் உண்டு. அங்கே கண்ணனுடைய திருவுருவம் இருந்தாலும்கூட விழாக்கள் திரௌபதி கோயில் விழாக்களாகவே நடக்கின்றன. அப்படி அவளுடைய புகழைக் காத்துக் கொடுத்தான். அவள் கண்ணீருக்கும் விடை தந்தான் என்பதையே கண்ணதாசன் அற்புதமாக பதிவு செய்கின்றார்.

சங்கு ஏன் ஊதினான்?

அவன் பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் என்பதும் முன்வரியோடு தொடர்புடைய நிகழ்ச்சி. அவன் பாரதப் போர் செய்தது.

1. பாண்டவர்கள் உரிமைப் பங்கை பெற்றுத்தருவதற்காக

2. பாஞ்சாலி புகழ் காப்பதற்காக வில்லிபுத்தூரார் பாடுகின்றார்.

பெண் நீர்மை குன்றாப் பெருந் திருவின் செங்கமலக்
கண் நீர் துடைத்து, இரு தன் கண்ணில் கருணை எனும்
தெள் நீரினால் பொருந்தத் தேற்றினான் – சாற்றுகின்ற
மண்,நீர்,அனல்,அனிலம்,வான்,வடிவு ஆம் மா மாயன்.

போர் தொடங்கும் போது எல்லோரும் சங்கு ஊதுகின்றார்கள். ஒவ்வொருவர் சங்கினுடைய அமைப்பும் அந்த ஒளியினுடைய அமைப்பும் கம்பீரமும் வைத்துக் கொண்டு வீரம் அளவிடப்படுகிறது.

பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ தேவதத்தம் தநஞ்ஜய​:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர​:

ஆனால் போரில் ஆயுதம் எடுக்காத கண்ணன் தன்னுடைய பாஞ்சசன்யத்தை வாயில் வைத்து ஊதிய பொழுது கௌரவர்களுடைய சேனை கிடுகிடு என்று நடுங்கியது.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந் (கீதை 1-19)

துரியோதனாதியர்களின் அதாவது திருதராஷ்ட்ரர் பிள்ளைகளின் மனம் இரண்டாகப் பிளந்தது. ஆம்! சங்கு ஒலி கேட்ட அன்றைக்கே அவர்கள் தோற்றுவிட்டார்கள். அந்த சங்கின் பெருமையை பெரியாழ்வார், ‘‘அப்பாஞ்ச சன்னியமே பல்லாண்டு’’ என்று பாடுகின்றார். இந்த நிகழ்வை கீதையை நன்கு அறிந்த கண்ணதாசன் ‘‘பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்’’ என்று பாடினார். பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கை கொடுத்தான் என்பது ஒருவரி. அவரவர்க்கு வைத்த சோறு அளவெடுத்து வைத்தது. அவர்களுக்கு உரிய பங்கு அவர்களுக்கானது. அதை யாராவது எடுத்துக் கொண்டாலும்கூட இறைவன் ஏதோ ஒரு வழியில் அதை அவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விடுகின்றார்.

பகவத் கீதை

கடைசி வரி பகவத் கீதையைப் பற்றியது.‘‘நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்.’’ புல்லாங்குழல் தந்த இசை பகவத் கீதை அந்த சாஸ்திரத்தை கண்ணன் பாடினான். கண்ணனை அந்த சாஸ்திரம் பாட வேண்டுமே. அதைத் தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்று பல்லவியில் வைத்தார்.

முதலில், கீதையை கண்ணன் சொன்னான். அதைக் கேட்டு போர் முடிவிலே பீஷ்மர் விஷ்ணுசஹஸ்ர நாமம் சொன்னார். புஷோத்தமன் புகழ் அல்லவா அது. இப்போது மறுபடியும் இந்த கிருஷ்ண ஜெயந்தியில் கவியரசரின் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை பொறுமையாக, முழுமையாகக் கேளுங்கள். புதுப் புது அர்த்தங்கள் தெரியும். கண்ணனின் புன்னகை மனமும் விரியும்.

தொகுப்பு: பாரதிநாதன்

The post புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே appeared first on Dinakaran.

Tags : Kannan ,
× RELATED தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு