×

‘நான் முதல்வன்’ மதிப்பீட்டு தேர்வை 618 பேர் எழுதினர் 346 பேர் ஆப்சென்ட்

 

வேலூர், செப்.11: வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடந்த ‘நான் முதல்வன்’ மதிப்பீட்டு தேர்வை 618 பேர் எழுதினர். 346 பேர் தேர்வு எழுதவில்லை. 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகி வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ₹7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பித்தனர். மேலும் நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் ஊக்க தொகைக்கான தேர்வு நேற்று நடந்தது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டான்போஸ்கோ பள்ளி, ஆக்சிலியம் பள்ளி என 3 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தேர்வை எழுத 964 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வை 618 பேர் எழுதினர். 346 பேர் ஆப்சென்ட் ஆகினர். நேற்று காலை 9 மணியளவில் தேர்வாளர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் தேர்வு மையத்திற்கு அனுமதித்தனர். மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு காவலரும், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வை எழுதிய தேர்வாளர்கள்.

The post ‘நான் முதல்வன்’ மதிப்பீட்டு தேர்வை 618 பேர் எழுதினர் 346 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...