×

279 கோடி ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு சிறையில் அடைப்பு: 8 மணிநேர விசாரணைக்கு பிறகு விஜிலென்ஸ் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் ரூ.279 கோடி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க 8 மணிநேரம் காரசார விவாதத்துக்கு பிறகு விஜிலென்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது கடந்த 2014ம் ஆண்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக சீமென்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.3,281 கோடியில் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ரூ.279 கோடி பல்வேறு போலி நிறுவனங்களில் முதலீடு செய்து, அவை ஹவாலா பணமாக சந்திரபாபு உள்ளிட்டோருக்கு நிதி பகிரப்பட்டுள்ளதாகவும், இதில் அதிக பயனடைந்தது சந்திரபாபுவே என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஊழல் குறித்து ஜெகன்மோகன் தலைமையிலான அரசு 2021 ஆண்டு சிஐடி (சிறப்பு புலனாய்வு அமைப்பு) ஏற்பாடு செய்தது. இந்த சிஐடி அதிகாரிகள் 2 ஆண்டுகள் தொடர் விசாரணை நடத்தி, சந்திரபாபு முதல் குற்றவாளி என கூறி நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவரை, விசாரணைக்காக விஜயவாடாவிற்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தடேப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் என்.எஸ்.ஜி. வீரர்கள் முன்னிலையில் அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நள்ளிரவு 11 மணிக்கு அரை மணி நேரம் ஓய்வு வழங்கப்பட்டது. அப்போது சந்திரபாபு, அவரது மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். அதன்பின் மீண்டும் சிஐடி விசாரனை தொடங்கி நேற்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், சந்திரபாபு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் சிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு காலை 6.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு சந்திரபாபு தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சித்தார் லுத்ரா வாதாடினார்.

இருதரப்பினர் இடையே 8 மணிநேரத்திற்கும் மேலாக காரசாரமான விவாதம் நடந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இமபிந்து, முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை வரும் 22ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சந்திரபாபுவை ராஜமுந்திரி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். சந்திரபாபுவை சந்திக்க சென்ற நடிகர் பவன்கல்யாண் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை கண்டித்து சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு கைது செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த 6 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post 279 கோடி ஊழல் வழக்கில் கைதான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு சிறையில் அடைப்பு: 8 மணிநேர விசாரணைக்கு பிறகு விஜிலென்ஸ் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra CM ,Chandrababu ,Tirumala ,Former ,Chief Minister Chandrababu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்;...