×

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சாதித்ததா?

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் உலக நாடுகள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஜி20 மாநாட்டில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தில் ரஷ்யா, உக்ரைன் போர் விவகார பிரகடனத்தை எந்த நாடும் எதிர்ககாமல் ஏற்றுக் கொண்டிருப்பது ராஜதந்திர ரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. இந்த தீர்மானத்தில், ‘இது போருக்கான காலம் அல்ல. எந்த ஒரு நாடும் சர்வதேச பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை மதிக்க வேண்டும். ஒரு நாட்டை கைப்பற்ற தனது பலத்தை பயன்படுத்த கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சீனா, ரஷ்யா வெகுவாக வரவேற்றுள்ளன. உக்ரைனுடன் போரிட்டு வரும் நிலையில், இது இருதரப்பை சமமாக பாவித்த தீர்மானம் என ரஷ்யா பாராட்டி உள்ளது.

தீர்மானத்தை தயாரிக்கும் பணிக்கு தலைமை வகித்த இந்தியாவின் ஷெர்பா அமிதாப் காந்த் கூறுகையில், ‘‘ஜி20 தீர்மானத்தில் மிகவும் சிக்கலான விஷயம் ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தான். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த எங்கள் குழு 200 மணி நேரம் இடைவிடாத பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. 300 முறை இருதரப்பு கூட்டங்களை நடத்தி, 15 வரைவுகளை தயாரித்த பின்னரே, உக்ரைன் விவகாரத்தில் தீர்மானத்திற்கு இறுதி வடிவம் தரப்பட்டுள்ளது’’ என்றார். ஆனால், சிஎன்என் உள்ளிட்ட மேற்கத்திய மீடியாக்கள் இந்தியாவின் தீர்மானத்தை பெரிதும் விமர்சித்துள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவை கண்டிப்பதை இந்தியா வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாக கூறி உள்ளன. இந்த மென்யைான தீர்மானத்தை மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டிருப்பது முரண்பாடானது என்று கூறி உள்ளன. உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘‘இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. அந்த அமைப்பில் நாங்களும் ஒரு அங்கமாக இருந்திருந்தால் பங்கேற்பாளர்கள் நிலைமையை இன்னும் சரியாக புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்’ என கூறி உள்ளது. அதே சமயம் இந்தியாவின் தீர்மானம் ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

The post உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சாதித்ததா? appeared first on Dinakaran.

Tags : India ,Ukraine ,Russia ,G20 ,Dinakaran ,
× RELATED உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும்...