×

பட்டென விடுக பற்றை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 55

(பகவத்கீதை உரை)

அதர்மம் மிகும்போது, தான் அவதரிப்பதாக கிருஷ்ணன் சொல்கிறார். அதாவது, தத்தமது பூர்வஜன்ம பாபங்களைத் தேக்கிக்கொண்டு, இந்த ஜன்மத்துக்கு வந்திருப்பவர்கள், அவற்றைக் குறைத்துக்கொள்ளவோ அல்லது இல்லாமலேயே செய்துகொள்ளவோ, பகவான், தன் அவதாரம் மூலமாக வழிகாட்டுகிறார். அதாவது, அதர்ம உணர்வை அழிக்க அவர் முனைகிறார். அதர்மவாதிகளை வதைப்பதல்ல அவருடைய நோக்கம். ஆனால், அந்த உணர்விலிருந்து விடுபட முடியாதவர்கள், வீம்பாகத் தம் அதர்மக் கொள்கைகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், வேறு வழியில்லாததால் அழிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்,

‘‘பரித்ராணாய சாதூனாம் வினாசாய
சதுஷ்க்ருதாம்
தர்மஸம்தாபனார்த்தாய சம்பவாமி
யுகேயுகே’’ (4:8)
– என்கிறார்.

‘‘அர்ஜுனா, எப்போதெல்லாம் தர்மத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு அதர்மம் அதிகரிக்கிறதோ.. அப்போதெல்லாம் நான் அங்கே ஓர் உருக்கொண்டு வருகிறேன். அதாவது, என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீயவர்களை அடக்கி ஒடுக்கவும் நான் அவதாரம் எடுக்கிறேன். தர்மத்தை நிலை நாட்டுகிறேன்.’’ ‘வினாசாயச துஷ்க்ருதாம்’ துஷ்டர்களை அழிப்பதற்காக வருகிறேன். இங்கு துஷ்டர் என்றால் தீய மனிதர் என்று அர்த்தம் கொள்ளாமல், மனிதர்களுடைய தீய எண்ணங்கள், தீய பேச்சுகள், தீய நடவடிக்கைகள் என்ற தர்மத்துக்குப் புறம்பான அம்சங்களை வேரறுக்க அவர் வருகிறார் என்று கொள்ளலாம்.

இன்னொரு நயத்தையும் கவனிக்கலாம். தீயவன் ஒருவனை அழித்து விடுவதால், அவனுடைய தீய குணங்கள் அவனோடு மறைந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே சொன்னபடி, உயிர் பிரிதலால் சாய்ந்துவிட்ட அவனுடைய உடலிலிருந்து விடுபடும் ஆன்மா, அடுத்த ஜன்மத்தை அடையும் தன் பயணத்தை மேற்கொள்கிறது.

இந்தப் பயணத்தின்போது, அது அந்த தீய சிந்தனைகளையும் உடன் சுமந்து செல்கிறது. இதனாலேயே அதன் அடுத்த ஜன்மத்து உலகில் அதர்மம் வளர அது வழி செய்கிறது. ஆகவே, தீயவன் ஒருவனுடைய தீய உணர்வுகளை அழித்துவிட்டால், எந்த காரணத்துக்காகவாவது அவன் மரித்தானானால் அவனுடைய ஆன்மா அந்தத் தீயன விலக்கிய பரிசுத்தமான ஆன்மாவாக அடுத்த ஜன்மத்தை நோக்கிப் பயணிக்கும், அங்கே தர்மத்துக்கு உறுதுணயாகப் பலம் சேர்க்கும்.

இந்தக் கணக்குப்படிதான் ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு ஆன்மாவின் வாழ்க்கையிலும் அதர்மம் கூடுவதோ, குறைவதோ செய்கிறது. தர்மம் – அதர்மத்துக்கான ஒப்பீட்டில் எப்போது அதர்மத்தின் வலு கூடுகிறதோ, அப்போது இறையவதாரம் நிகழ்கிறது. உடற்பிணி நீக்க மருத்துவர் வருவதுபோல. இப்படி முந்தைய ஜன்மத்து அதர்ம சேமிப்பை அதிகம் கொண்டவர்களாலேயே இந்தப் பிறவியில், அவர்கள் வாழும் சமூகத்தில் அநீதிகள் பெருகுகின்றன.

தர்ம சேமிப்பை அதிகம்கொண்டவர்கள், சிலசமயம் அந்த அநீதிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போவதாலும், சிலசமயம் அந்த அதர்மச் சுவையில் மோகம் கொள்ளு மளவுக்கு ஈர்க்கப்படுவதாலும், அறத்துக்குப் புறம்பானவை மலிந்துவிடுகின்றன.இப்படி மலிந்துவிட்ட அதர்மத்தை வேரறுக்க வேண்டிய பொறுப்பு பகவானுக்கு வந்துவிடுகிறது. அவர் ஏதோ ஓர் உருவில் வருகிறார். அறிவுறுத்துகிறார். அந்த உணர்வினை அழிக்கப் பார்க்கிறார். இதற்காக அவர் மேற்கொள்ளும் உருவம் ஒரு ஞானியாகவோ, ஒரு உபதேசியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

தந்தையாக, தாயாக இருக்கலாம், நல்ல சகோதர சகோதரியாக, நண்பராக, பள்ளிக் கூட ஆசிரியராக, வாழ்க்கைத் துணையாக, வேலையும், சம்பளமும் கொடுக்கும் முதலாளியாக, அக்கம் பக்கத்தவராக, ஏன் மகனாக, மகளாக, பேரன் பேத்தியாகக்கூட இருக்கலாம். மொத்தத்தில் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தர்மத்தை நிலை நிறுத்துபவர்களாக இருத்தல் வேண்டும். தர்மத்தை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டும். நீதியின் மேன்மையைப் போற்றுபவர்களாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

அப்படி ஒரு மனமாற்றத்தை, தர்ம வளர்ச்சியை, அதர்ம வீழ்ச்சியை எந்த ஒருவரால் கொண்டுவர முடியுமோ, அவரே பகவானின் அவதாரம்! துஷ்டர்களை அழித்து சாதுக்களை உய்விப்பதாக கிருஷ்ணன் கூறுகிறார். ஏனென்றால் சாதுக்கள் அவருடைய அவதாரங்கள் இல்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள்தான். தம் உபதேசங்களால் அநீதியை விரட்ட இவர்களால் முடியாமல் போகலாம்.

ஆனால், அமைதியாக இருப்பதன் மூலமும், ‘தீயன பெருகாமல் காப்பாய் இறைவா’ என்ற பிரார்த்தனையாலும், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். நீதியை நிலைநாட்டுவதாகச் சொல்லிக் கொண்டு இவர்களால் வன்முறையைக் கையிலெடுக்க முடியாது. பல்லுக்குப் பல், கைக்குக் கை என்பது இவர்களுடைய இயல்பல்ல. ஆகவே, மௌனம் காப்பதாகிய அஹிம்சை ஆயுதத்தைத்தான் இவர்கள் கையாள வேண்டும். அதில் வெற்றிபெற முயற்சிக்கவும் வேண்டும். ஆக, கிருஷ்ணன் சொல்லும் அவதாரமானது அதர்ம சிந்தனைகளை அழிப்பதற்காகத் தோன்றுவது. அதாவது, தர்மத்திற்கு வலுகொடுத்து அதை நிலைநாட்ட முயல்வது.

ஜன்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ
வேத்திதத்வத
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி
ஆமேதிஸோர்ஜுன (4:9)

‘‘அர்ஜுனா, என்னுடைய பிறவி தெய்வீகமானது. இந்தப் பிறவியில் நான் புரியும் கர்மாக்களும் தெய்வீகமானவை. இதைப் பரிபூரணமாக உணர்பவர்கள் தம் உடலை நீத்தாலும் அவர்களுக்கு மறுபிறவி என்பது உண்டாவதில்லை. அவர்கள் என்னுடன் கலந்து விடுகிறார்கள்.’’ கிருஷ்ணருடைய அவதார மகிமையை சாதாரணர்களால் உணர முடிவதில்லை. அப்படி உணர்ந்தவர்களோ, அந்த ஜன்மத்துடன் தம் பயணத்தை நிறைவாக முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை. அதாவது, அவர்களுடைய ஆன்மா கிருஷ்ணருடன் ஐக்கியமாகிவிடுகிறது. கிருஷ்ணரின் பிறவி தெய்வீகமானது, அவர் இயற்றும் கர்மாக்கள் தெய்வீகமானவை என்பதை உணர்பவர்கள் யார்?

ஏற்கெனவே பல ஜன்மங்களாகத் தங்கள் பாவக்கணக்கைக் குறைத்துக்கொண்டே வந்து இப்போது ஞானிகளாகத் திகழ்பவர்களே அவர்கள். இவர்களுக்கு இன்னொரு பிறப்பின் மீதான ஆர்வம் எழுவதில்லை. ஏனென்றால் இவர்கள் தெய்வீகத்தை மட்டுமே உணர்வதால் பிற விஷயங்களில் அக்கறைகொள்வதில்லை. அவையெல்லாம் மாயை என்பதை உணர்ந்தவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். பட்டினத்தார், தன் மகனால் ஞானம் பெற்றார். ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதைப் புரிந்துகொண்டார். உடனே உற்றம், சுற்றம், உறவு, நட்பு, சொத்து, சுகம் எல்லாவற்றையும் உதறிவிட்டுப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த பட்டினத்தார் வடபாரதத்தில் உஜ்ஜயினி நாட்டுக்கு வந்தார்.

அதன் பேரரசராகத் திகழ்ந்தவர் பத்திரகிரியார். பட்டினத்தார் அங்கே வந்த சமயத்தில், சில கள்வர்கள் தாம் திருடிய அரண்மனை நகையை நிஷ்டையில் இருந்த பட்டினத்தார் மீது போட்டுவிட, அவரிடம் அந்த நகை இருந்ததைக் கண்ட அரச வீரர்கள் அவர்மீது திருட்டுப் பட்டம் கட்டி மன்னன் முன் நிறுத்தினார்கள்.

எதையும் விசாரித்து அறிந்துகொள்ளாமல் பத்திரகிரி, அவருக்கு மரண தண்டனை விதித்து கழுவிலேற்றும்படி உத்தரவிட்டான். உடனே பட்டினத்தார் புன்முறுவலுடன் ஒரு பதிகம் பாட, கழுமரம் அப்படியே தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதே அவருடைய சீடனானான். தன் நாடு, குடும்பம், டாம்பீக ஆடை, அணிகலன் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவரைப் பின்தொடர்ந்தான்.

துறவியின் சீடன் என்ற வகையில் கையில் ஒரு திருவோடு வைத்திருந்தார் பத்திரகிரி. வழியில் ஒரு நாய் அவருடன் நட்பு கொண்டது. அதற்கு அவர் உணவிட, அது அவரைத் தொடர்ந்து வந்தது. பட்டினத்தாரும், பத்திரகிரியாரும் தமிழ் நாட்டுக்கு வந்து திருவிடைமருதூரில் தங்கினார்கள். அப்போது ஒரு பிச்சைக்காரன் பட்டினத்தாரிடமே வந்து யாசகம் கேட்டான். அவரோ, ‘ஒரு குடும்பஸ்தன் மேற்குக்கோபுரவாசலில் இருக்கிறான், அவனிடம் போய்க் கேள்,’ என்றார். பிச்சைக்காரன் தன்னிடம் வந்து, பட்டினத்தார் சொன்னவற்றைத் தெரிவித்தபோது திடுக்கிட்டார் பத்திரகிரியார். அவ்வளவுதான், அப்போதே தன்னுடன் நேசம் கொண்டிருந்த அந்த நாயை விரட்டி அடித்தார்.

திருவோட்டைத் தரையில் வீசி உடைத்தெறிந்தார். தன்னுள் அந்த கட்டம்வரை சிறு அளவில் பாசமும், ‘சொத்தும்’ ஒட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்து வெட்கமடைந்தார். இனி அவர் பட்டினத்தாரைத் தொடர வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இப்போது அவரே இன்னொரு பட்டினத்தாராகிவிட்டார்!

மாயைகளைப் புரிந்துகொண்டாலேயே மகோன்னதம்தான். அப்படிப் புரிந்துகொண்ட மாயைகளை விலக்கினால் எளிதாக தெய்வீகம் புரியவரும். அப்படி தெய்வீகத்தைப் புரிந்து கொண்டவர்கள்தான், பரந்தாமனின் பிரதிநிதிகள். இவர்கள் தம் கடமை முடிந்ததும், தம் கர்மாக்களை நிறைவேற்றியதும், கிருஷ்ணனுடன் கலந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு மறுபிறப்பு இருப்பதில்லை. இங்கே கிருஷ்ணர் பேசுவதுபோல பிற யாரும் ‘நான்’, ‘எனது’ என்று பேசிவிட முடியாது. ஏனென்றால் கிருஷ்ணர் சொல்லும் ‘நான்’ல், கிருஷ்ணர் மட்டும் இல்லை, இந்தப் பிரபஞ்சமே இருக்கிறது. அவர் எல்லோருமானவர், எல்லோருக்குமானவர்.

கோகுலத்தில் விளையாட்டுப் பிள்ளையாக அவர் திகழ்ந்த காலத்திலேயே மண்ணை உண்ட வாய்க்குள் அகிலத்தையும் காட்டியவர் அவர். அதுமட்டுமல்ல, துரியோதனன் சபையில் விஸ்வரூபத்தைக் காட்டியவர். அதாவது, இந்தப் பிரபஞ்சமே தனக்குள் அடங்கியதுதான், அந்த பிரமாண்டத்தின் மொத்த, ஒரே உருதான் தான் என்பதையும் இந்த இரு நிகழ்ச்சிகள் மூலம் நிலைநாட்டியவர் அவர். ஆகவே, அவர் சொல்லும் ‘நான்’, ‘எனது’ இரண்டும் நாம் பேசும் ‘நான்’, ‘எனது’ அல்ல; நாம் உள்ளிட்ட அனைத்தையும் ஆகர்ஷித்திருப்பவர் கிருஷ்ணன். அதனால் ஞானிகள் என்னை வந்தடைவார்கள், என்னுடன் ஐக்கியமாவார்கள் என்று அவர் சொல்வதில் எந்த மிகையும் இல்லை.

வீதராகபயக்ரோதா மன்மயா மாமுபாச்ரிதா
பஹவோ ஞானதபஸா பூதா மத்பாவமாகதா
(4:10)

‘‘அர்ஜுனா! இச்சை, பயம், கோபம் ஆகிய மனித உணர்வுகளுக்கு அடிமையாகாமல், விடுபட்டு, வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் என்னைச் சரணடைந்தவர்கள், பவித்திர மடைகிறார்கள். அதனாலேயே அவர்கள் என் சொரூபத்தையும் அடைகிறார்கள்.’’ மனத்துக்கண் மாசிலாதவன் மாதவ சொரூபமாகிறான். மனத்துக்கண் மாசு இல்லையென்றால், அவன் சிந்தனையில் அழுக்கு இருக்காது. அதனால், அவன் செயல்களிலும் குற்றம் இருக்காது.

அவன் எதையும் எதிர்பார்க்கமாட்டான். எந்தப் பொருள் மீதும் இச்சை கொள்ளமாட்டான். அவன் நோக்கில் எந்த பேதமும் இருக்காது. உயிர்களிடத்து அவன் வித்தியாசம் பாராட்டமாட்டான். அவனே இறைவனுடன் ஐக்கியமாவதற்கான தகுதி படைத்தவன். பட்டினத்தார் அத்தகையவர்களில் ஒருவர். இவருடைய துறவுக்கு இவருடைய மகனே மூலகாரணமாக அமைந்தான்.

யாக்ஞவல்கியரும் துறவு பூண்டார். ஆனால், இவருடைய துறவுக்குக் காரணம், இவரது இரண்டாவது மனைவி. துறவு கொள்வதாகத் தீர்மானித்துவிட்ட பிறகு, யாக்ஞவல்கியர் தன் இரு மனைவியரையும் அழைத்து தன் சொத்துகளை இருவரும் சமமாகப் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார். முதல் மனைவி காத்யாயினி அதற்குச் சம்மதித்தாள். ஆனால் இரண்டாவது மனைவியான மைத்ரேயி அவரிடம் கேள்வி கேட்டாள்.

‘எல்லாவற்றையும் துறந்துவிட்டுப் போகிறவர் என்றால் அப்படியே போய்விட வேண்டியதுதானே! எதற்காக சொத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்? தான் போய்விட்டால் தன் சொத்துகள் உரிமை கோரப்பட முடியாதவையாகி, தன் மனைவியர் தவிர வேறு யாரேனும் அனுபவித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமா? அப்படியே இருந்தாலும், துறந்துவிட்டுப் போகிறவர் அது குறித்து ஏன் சிந்திக்க வேண்டும்? அப்படியானால் உங்களுக்கு உங்கள் சொத்து மீதான பற்றுதல் விடவில்லை என்றுதானே அர்த்தம்? ‘வேண்டாம்’ என்று விலகிவிட்டபிறகு அந்த சொத்துகளை யார் அனுபவித்தால்தான் என்ன?

இது சொத்தின் மீதான பற்றா அல்லது மனைவியர் மீதான பற்றா? எதுவாயினும் அது அவர் மேற்கொள்ளும் துறவறத்துக்கு இழுக்கை உண்டாக்காதா? துறவு வாழ்க்கையில் ‘விரக்தி’ ஏற்பட்டால் மீண்டும் பந்த பாசத்துக்குத் திரும்பிவிடும் குயுக்திதானே இந்த சிந்தனை? அப்படியானால் துறவு கொள்வதாகிய சிந்தனைக்கு என்ன மதிப்பு இருக்கிறது?’ மைத்ரேயி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் யாக்ஞவல்கியர் திகைத்துப்போனார்.

அவர் குறிப்பிட்ட சொத்தின்மீது அவருக்கு எதிர்கால அக்கறை இருக்குமானால் அவர் அதைத் துறக்க வேண்டாம். ஆனால், துறவறத்தில் அவர் நம்பிக்கை கொள்பவரானால் இந்த சொத்து பற்றி அவர் சிந்திக்கவே வேண்டாம். நியாயம்தானே! ஆனால், பட்டினத்தார் இவரைப்போல அல்ல. பட்டென எல்லாவற்றையும் வெட்டிவிட்ட பக்குவம் அடைந்துவிட்டவர். யாக்ஞவல்கியரைவிட, பட்டினத்தாரே கிருஷ்ணனுடன் ஐக்கியமாகிவிடத் தகுதியானவர் என்றும் சொல்லலாமோ?

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post பட்டென விடுக பற்றை! appeared first on Dinakaran.

Tags : Thanksgiving ,
× RELATED மஞ்சளின் மருத்துவக் குணங்கள்!