×

இந்த வார விசேஷங்கள்

பிள்ளையார்பட்டி உற்சவம் துவக்கம்
9.09.2023 – சனி

விநாயகர் சதுர்த்தி உற்சவங்கள் நாடெங்கும் துவங்கும் நாள் இன்று. பல கோயில்களில் 10 நாட்கள் கோலாகலமாக விழா நடைபெறும். அதில் பிரசித்தி பிள்ளையார்பட்டி கோயிலும் உண்டு.சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஒரு “குடைவரை” கோயிலாகும். “பல்லவ” மன்னர்கள். வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில். இக்கோயிலின் மூலவர் “கற்பக விநாயகர்”.

விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. அதில் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயம் விநாயகரின் “ஐந்தாம்” படை வீடாக கருதப்படுகிறது. விநாய கருக்கு தேர்த்திருவிழா நடக்கும் ஒரு சில கோயில்களில் இதுவும் ஒன்று. அப்பொழுது விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்கும் தேர்கள் இழுக்கப்படுகின்றன. நிறைவு நாளில் பிள்ளையாருக்கு “80 கிலோ சந்தனகாப்பு” சாற்றப்படுகிறது.

பிள்ளையார்பட்டி கோவிலின் சிறப்பாக, விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய “கொழுக்கட்டை” விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும், பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. கல்விகளில் மேன்மை பெற, வறுமை நிலை மாற, குழந்தை பாக்கியம் பெறுவதற்காகபக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபடுகின்றனர்.

அஜா ஏகாதசி
10.09.2023 – ஞாயிறு

குருவினுடைய புனர்பூச நட்சத்திரத்தில், சூரியனின் ஞாயிற்றுக்கிழமையில் வரும் ஏகாதசி இன்று (10.09.2023). ஏகாதசி விரதத்தால் கிடைக்காத நற்பலன் எதுவுமில்லை. செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், இழந்ததைப் பெறுதல், பதவி என, ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஏகாதசி விரதத்தால் கிடைக்கும். இந்த ஏகாதசி விரதம் பாரம்பரியமாக மூன்று நாட்கள் நீடிக்கும். தசமி திதி இரவில் தொடங்கி, ஏகாதசி திதியில் தொடர்ந்து துவாதசி திதியில் காலையில் முடிவடையும். ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்துவிட வேண்டும்.

இருப்பினும், சில பக்தர்கள் துவாதசி ஏகாதசி திதி இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். அந்த சமயத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். அடுத்த நாள் நிறைய காய் கறிகள் கூட்டு சேர்த்து செய்த உணவைப் படைத்து, மற்றவர்க்கும் அளித்து (துவாதசி பாரணை), சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். மஹா பாரதத்தில் பகவான் கண்ணன், ‘‘தர்ம புத்திரரே, அஜா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

பொதுவாக விரத முறைகள் வழிபாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த அஜா ஏகாதசி அன்று வெறும் உபவாசம் இருந்தாலே முழு விரத முறையையும் ஆச்ரயித்த பலன்களைப் பெறுவார்கள். மேலும் ரகுவம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரன் இந்த விரதத்தை அனுஷ்டித்து தன் துன்பம் நீங்கப் பெற்றான்” என்று கூறுகிறார்.

அன்று பாடவேண்டிய பாடல்

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழாவில்
யந்தியம்போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே

செறுத்துணையார் குருபூஜை
11.09.2023 – திங்கள்

செருத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண் குடியில் தோன்றியவர் சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர். சிவ பூஜைக்கு யார் பழுது செய்தாலும் உடனே கடுமையாக தண்டித்து விடும் வழக்கமுடையவர். அதனுடைய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். திருவாரூர் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வந்த காலத்தில் பல்லவ மன்னன் மனைவி, சிவனுக்குரிய பூஜைப் பூக்களை முகர்ந்து பார்த்ததால் வெகுண்ட நாயனார் பட்டத்து ராணியின் மூக்கினை அறுத்தார். வன் தொண்டரான இவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் பூசம்.

ருண விமோசன பிரதோஷம்
12.09.2023 – செவ்வாய்

பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அதில் கடன், நோய், எதிரி தொல்லைகளைத் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பிரதோஷ விரதம் முக்கியமானது. இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும்.

பிரதோஷ காலங்களில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். அதிகாலையில் எழுந்து நீராடி சிவாபூஜை வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக் கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும் நிவர்த்தியாகும்.

அதிபத்த நாயனார் குரு பூஜை
12.09.2023 – செவ்வாய்

‘‘விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்’’ என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடும் அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் மீன்பிடிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார்.

இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்கமீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக ஆனார்.

புகழ்த்துணை நாயனார் குருபூஜை
12.09.2023 – செவ்வாய்

புகழ்த்துணையார் என்பவர்அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் சிவவேதியர் குலத்தில் தோன்றியவர். சிவனது அகத்தடிமைத் தொண்டில் சிறந்தவர். சிவபெருமானை வாக்காலும் மனதாலும் செய லாலும் வழிபட்டு வந்தார். அக்காலத்தில் பஞ்சம் வந்தது. அவர் பசியில் வாடினார். அப்போதும் இறை தொண்டு விடுவேனல்லேன் என்று இரவும் பகலும் விடாது பூவும் நீரும் கொண்டு பூசித்து வந்தார்.

ஒருநாள் பசியால் வாடி இறைவரைத் திருமஞ்சனமாட்டும் பொழுது திருமஞ்சனக்குடத்தைத் தாங்கமாட்டாது கைதவறிக் குடத்தினை இறைவர் திருமுடிமேல் சாய்த்து விட்டு நடுங்கி வீழ்ந்தார். அப்போது இறைவரது திருவருளால் துயில் வந்தது. இறைவர் அவரது கனவில் தோன்றி ‘உணவுப்பொருள் மங்கிய காலம் முழுவதும், ஒரு காசு நாம் தருவோம்’ என்று அருளினார்.

புகழ்த் துணையார் துயிலுணர்ந்து எழுந்து பீடத்தின் கீழ் பொற்காசு கண்டு மகிழ்ந்தார் அவ்வாறு பஞ்சம் நீங்கும் வரை இறைவர் நாள்தோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து சிவனடி சேர்ந்தார். “புடைசூழ்ந்த புலியதண் மேல் அரவாட வாடி பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் போற்றுகின்றார்.

இளையான்குடி மாற நாயனார் குருபூஜை
13.09.2023 – புதன்

இளையான்குடியில் பிறந்த மாறனார், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் கொண்டு திகழ்ந்தார். தம் இல்லத்திற்கு சிவனடியார் வந்தால், எதிரே சென்று கை கூப்பி வணங்கி, வரவேற்று, அவர்களுக்கு உணவளிப்பார். நாள் தோறும் செய்த மாகேஸ்வரபூைஐ என்னும் சிவபுண்ணியத்தால், அவரது செல்வம், நாளுக்குநாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார். வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்ய வல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு உணர்த்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இளையான்குடி மாறனா ருக்கு வறுமை தந்தார்.

ஆனால் அவர் மன வளமை குறையவில்லை. செல்வம் சுருங்கினாலும், உள்ளம் சுருங்கவில்லை. ஒருநாள் நல்ல மழை. உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவில் சிவபெருமான், அடியார் கோலங் கொண்டு கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்றார். உணவளிக்க வீட்டில் ஏது மில்லையே என வருத்தம் மிகுந்தது.

பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதல மடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது துணை வியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார். அவர் குரு பூஜை நாள் இன்று.

சர்வ அமாவாசை
14.09.2023 – வியாழன்

இன்று ஆவணி மாத அமாவாசை. சர்வ அமாவாசை தினம். இரண்டு சுப கிரகங்களின் இணைவு இன்று ஏற்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் குருவாரம். தர்ப்பணம் கொடுக்கும் நேரத்தில் சுக்கிரனுக்குரிய பூர நட்சத்திரம் வந்து விடுகிறது. ஆவணி மாதம் என்பதால், ஐந்தாம் இடமான சிம்ம ராசியில் சூரியன் இருக்க, அதே ராசியில் இருக்கும் பூர நட்சத்திரத்தில் சந்திரன் இணைகின்ற அமாவாசை. இன்று மறைந்த முன்னோர்களுக்கு அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதிதிகளுக்கு அன்னமிட வேண்டும். ஏழைகளுக்கு தானம் தர வேண்டும். இதன் மூலமாக நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்கள் பசியும் தாகமும் தீர்ந்து மகிழ்வோடு
ஆசிர்வதிப்பார்கள்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Pillaiyarpatti ,Sani ,Vineyagar Chaturdhi ,Exhibitions ,Dinakaran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்